திருக்குறள் - அறிவினுள் எல்லாம் தலை
பாடல்
அறிவினுள் எல்லாம் தலைஎன்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல்
பொருள்
அறிவினுள் = அறிவினிற்குள்
எல்லாம் = அனைத்திலும்
தலைஎன்ப = தலை சிறந்தது என்று சொல்லுவார்கள்
தீய = (தமக்கு) தீமை
செறுவார்க்கும் = செய்தவர்களுக்கும்
செய்யா விடல் = மறு தீங்கு செய்யாமல் விடுவது
அறிவினில் எல்லாம் தலையாய அறிவு எது என்றால், நமக்கு தீமை செய்தவர்களுக்கும் தீமை செய்யாமல் விடுவது என்று சொல்லுவார்கள்.
ஹை, இது என்ன நல்ல போங்காக இருக்கிறதே. நமக்கு ஒருவன் தீமை செய்தால், பதிலுக்கு அவனுக்கு தீமை செய்யாவிட்டால் அவன் நமக்கு மீண்டும் மீண்டும் தீமை செய்து கொண்டே இருப்பானே ...அவனை தண்டிக்காமல் விடுவது எப்படி சிறந்த அறிவாகும்? வள்ளுவர் சொல்லுகிறார் என்பதற்க்காக ஏற்றுக் கொள்ள முடியுமா ?
செல்லாது ...செல்லாது ....வள்ளுவரே தீர்ப்பை மாத்திச் சொல்லும் என்று நாம் சொல்லலாம் வள்ளுவர் பிழை செய்வாரா.
ஒருவன் தனக்குத் தானே தீமை செய்து கொள்கிறான் என்று வைத்துக் கொள்வோம், அவனை அறிவுள்ளவன் என்று நாம் ஏற்றுக் கொள்வோமா?
எரிகிற தீக்குள் விரலை விடுகிறான், மின்சாரம் செல்லும் கம்பியை கையால் பிடிக்கிறான், தினம் நாலைந்து சிகரெட் பெட்டியை ஊதித் தள்ளுகிறான்...இப்படி எல்லாம் ஒருவன் செய்தால் அவனைப் பற்றி என்ன நினைப்போம்? சரியான முட்டாளா இருப்பான் போல் இருக்கே என்று தானே நினைப்போம்.
அறிவு இருந்தால் என்ன செய்ய வேண்டும்? நமக்கு வரும் துன்பத்தை நீக்கி நமக்கு இன்பம் தர வேண்டும். அது தானே அறிவின் வேலை?
மீண்டும் குறளுக்குப் போவோம்.
ஒருவன் நமக்குத் தீமை செய்கிறான் என்று வைத்துக் கொள்வோம்.
முதலில் என்ன நடக்கும், "எனக்கு இப்படி செய்து விட்டானே..." என்று அவன் மேல் கோபம் வரும். எப்போது கோபம் வருகிறதோ, அப்போதே மனதில் இருந்த சந்தோஷமும், சிரிப்பும் போய் விடும். கடு கடு என்று இருப்போம்.
இரண்டாவது, "எப்படியாது அவனுக்கு பதிலுக்குப் பதில் தீமை செய்ய வேண்டும் என்று பழி உணர்ச்சி பொங்கும். அது மனதை மேலும் வன்மையாக்கும் .
எப்படி அவனுக்கு தீமை செய்வது என்று சிந்திக்கிறோம். தீமை செய்தால் எப்படி மாட்டிக் கொள்ளாமல் தப்பிப்பது என்று திட்டம் போடுகிறோம். மாட்டிக் கொண்டாலும், எப்படி வெளியே வருவது என்று மனம் வழி தேடும்.
இப்படி மிக ஆழமாக சிந்தித்து தீமை செய்வதால் தீமை பற்றிய அச்ச உணர்வு போய் விடுகிறது.
முன்பே கூறியது போல, தீவினையில் அச்சம் போய் விட்டால், பின் தீவினைகள் செய்வது மிக எளிதாக போய் விடுகிறது.
இப்பிறப்பில் செய்த தீமை, இம்மைக்கு மட்டும் அல்ல, மறுமைக்கும் தொடர்ந்து வந்து துன்பம் தரும்.
இப்படி இருமைக்கும் துன்பம் தரும் செயலை செய்வது அறிவான செயலா?
அவனோ நமக்கு இம்மைக்கு மட்டும் தான் துன்பம் செய்தான். நாம் ஒரு படி மேலே போய் நமக்கு மறுமைக்கும் துன்பம் தேடிக் கொள்கிறோம்.
மாறாக, அவன் செய்த தீவினையை மறுத்து அவனுக்கு நாம் பதில் தீவினை செய்யாமல் விட்டால் , நமக்கு இருமைக்கும் துன்பம் வராது அல்லவா? எனவே தான் அதை
"அறிவினுள் எல்லாம் தலை" என்றார்.
நம்மை ஒரு பெரிய சண்டியர் தெருவில் போகும் போது அடிக்கிறான். அவனுக்கு நாம் பதில் தீமை செய்யாமல் விடுகிறேன் என்று சொல்வதில் என்ன பெரிய அறிவு இருக்கிறது. அவனை நான் அடித்தால், அவன் பதிலுக்கு பத்துத் தரம் அடிப்பான்.
வள்ளுவர் ஒரு சொல்லை தேர்ந்து எடுத்துப் போடுகிறார்
'செய்யாது விடல்".
பதிலுக்கு தீமை நம்மால் செய்ய முடியும், இருந்தும் செய்யாமல் விடல் என்பதில் இருக்கிறது அறிவு.
செய்ய முடியாவிட்டால், எங்கிருந்து "விடுதல்" வரும். .
"விடல்" என்றால் விட்டு விட வேண்டும். மனதுக்குள் கருவிக் கொண்டே இருக்கக் கூடாது.
அப்படி யாராவது வாழ்ந்து இருக்கிறார்களா? சும்மா சொன்னால் போதாது, நிரூபணம் வேண்டும் அல்லவா?
அந்த நிரூபணத்தை நாளை பார்ப்போம்.
https://interestingtamilpoems.blogspot.com/2020/07/blog-post_3.html
அருமை.
ReplyDeleteநன்றி
ReplyDelete👌 அருமை.
ReplyDelete