திருக்குறள் - அருளாள்வாற்கு இல்லை
பெரும்பாலானோர் இறைவனிடம் என்ன வேண்டுவார்கள்?
"என்னை காப்பாற்று...எனக்கு எந்த வித ஆபத்து இல்லாமலும் பார்த்துக் கொள். எல்லாவற்றிற்கும் மேலாக என் பிள்ளைகளுக்கு ஒரு துன்பமும், ஆபத்தும் வராமல் பார்த்துக் கொள்" என்பதுதானே.
கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டால் கூட, அது தானே விருப்பமாக இருக்கும்.
அது நடக்குமா ?
எத்தனை உயிர்களை கொல்கிறோம். அத்தனை உயிர்களை கொன்று விட்டு,
என் பிள்ளைகளை காப்பாற்று என்றால் அதில் என்ன ஞாயம் இருக்கிறது?
கொலையா? நானா? அப்படியெல்லாம் ஒன்றுர் செய்வது இல்லையே என்று நாம் நினைக்கலாம். செய்யாமலா இருக்கிறோம்?
கோழி, ஆடு, மாடு, என்று அடித்துத் தின்ன வேண்டியது. சிக்கன் 65, சிக்கன் லாலி பாப், சில்லி சிக்கன், என்று வகை வகையாக விலங்குகளை கொன்று தின்பது.
அப்புறம், எனக்கும் என் பிள்ளைகளுக்கும் துன்பம் வரக்கூடாது என்று விரும்புவது....
"இல்லையே, நான் மாமிசம் சாப்பிடுவது இல்லையே...உயிர் கொலை செய்வதே இல்லை " என்று கூறினால் ...
சீனி டப்பாவில் எறும்பு வந்தால், வெயிலில் கொண்டு கொட்டுவது. அடுப்பில் தூக்கி வைத்து அவற்றைக் கொல்வது.
மேலே ஊறும் எறும்பை நச் சென்று அடித்துக் கொல்வது.
இதெல்லாம் பெரிய கொலையா ?
கொலை செய்வதை விட்டு விடுவோம்.
வீட்டில் வேலை செய்யும் ஆட்களை, நமக்கு கீழே வேலை ஆட்களை மனம் புண் படும்படி பேசுவது...எவ்வளவு வலிக்கும் என்று யோசித்துப் பார்ப்பது இல்லை.
மனைவியை, பிள்ளைகளை, கணவனை, வீட்டில் உள்ள பெரியோர்களை எடுத்து எறிந்து பேசுவது. மனம் நோகும்படி பேசுவது.
மனதில் அன்பில்லாமல், அருள் இல்லாமல் நடந்து கொள்வது...பின் எனக்கு ஒரு துன்பமும் வரக் கூடாது என்று விரும்புவது சரிதானா?
மற்ற உயிர்களை வதைத்து விட்டு, என் உயிருக்கு துன்பம் வரக்கூடாது என்று நினைப்பது எந்த ஊர் ஞாயம்.?
பாடல்
மன்னுயிர் ஓம்பி அருளாள்வாற்கு இல்என்ப
தன்னுயிர் அஞ்சும் வினை
பொருள்
மன்னுயிர் = நிலைத்து நிற்கின்ற உயிர்களை
ஓம்பி = போற்றி
அருளாள்வாற்கு = அவற்றின் மேல் அன்பு செய்பவர்களுக்கு
இல்என்ப = இல்லை என்று சொல்லுவார்கள்
தன்னுயிர் = அவர்களுடைய உயிர்
அஞ்சும் வினை = அஞ்சுகின்ற செயல்
இந்த உலகில் உடல் தான் பிறக்கும், இறக்கும். உயிர் என்றும் நிலைத்து நிற்பது. எனவே தான் மன்னுயிர் என்றார்.
மேலும்,
உயிர் என்று சொன்னதன் மூலம், மனிதர்களை மட்டும் அல்ல, விலங்குகள், பறவைகள், போன்ற உயிர்களையும் சேர்த்துச் சொன்னார்.
சரி ஏதோ மாமிசம் சாப்பிடுவது இல்லை என்றால் போதுமா என்றால் போதாது.
"ஓம்பி அருள் ஆள்வார்க்கு"
உயிர்களை போற்ற வேண்டும். நம் உயிர் போலத்தான் மற்ற உயிர்களும் என்று அவற்றை போற்ற வேண்டும். அவற்றின் மேல் அருள் கொள்ள வேண்டும்.
தெருவில் செல்லும் நாய் மேலும் அருள் செய்ய வேண்டும்.
அப்படி செய்தால், என்ன நடக்குமோ, எப்போது நடக்குமோ என்ற பயம் வராது.
அந்த பயம் வரமால் இருக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?
உயிர் கொலை செய்யக் கூடாது, மற்ற உயிர்களை போற்றி அவற்றின் மேல் அருள் செய்ய வேண்டும்.
அடுத்த முறை மாமிசம் உண்ணும் போது நினைக்க வேண்டும். இது என் உயிருக்கு அச்சத்தைத் தரப் போகிறது என்ற எண்ணம் வர வேண்டும்.
https://interestingtamilpoems.blogspot.com/2020/07/blog-post_5.html
No comments:
Post a Comment