Pages

Sunday, August 9, 2020

ஔவையார் தனிப்பாடல் - உண்டாயின் உண்டென் றறு

ஔவையார் தனிப்பாடல் - உண்டாயின் உண்டென் றறு


பாண்டிய மன்னன் ஒரு பொற்கிழியை ஒரு பெரிய கொடிக் கம்பத்தில் கட்டி தொங்க விட்டு, அவையில் உள்ள புலவர்களளைப் பார்த்துக் "உங்களில் யாராவது பாடல் பாடுங்கள். உங்கள் பாடலுக்கு அந்த கயிறு அறுந்து பொற் கிழி கீழே விழுந்தால் அதை நீங்கள் பரிசாக எடுத்துக் கொள்ளலாம்" என்று அறிவித்து விட்டான். 

புலவர்கள் யாரும் பாடவில்லை. அவர்கள் பாடி, கயிறு அறுந்து விழாவிட்டால் அவர்களுக்கு அது பெரிய அவமானமாகப் போய் விடும். பரிசு கிடைக்காதது ஒரு புறம். அவர்கள் பாடிய பாடல் சரி இல்லை என்று எல்லோர் முன்பும் அவமானம் வேறு வந்து சேரும்.

ஒளவையார் இதை கேள்விப் பட்டு, அவர் இரண்டு பாடல்களைப் பாடினார். அவர் பாடிய முதல் பாடல் கீழே உள்ள link இல் உள்ளது. 



அவர் பாடிய அடுத்த பாடல். 

இரண்டாவது பாடலில் அவர் சொல்கிறார் 

"யுத்தம் வந்து விட்டது, சண்டைக்கு வாருங்கள் என்றால் நூற்றில் ஒருவன் வருவான்.  நல்ல பாடல் எழுது என்றால் ஆயிரத்தில் ஒருவனுக்குத்தான் அது முடியும். படித்ததை எல்லோருக்கும் விளங்கும்படி தெளிவாக எடுத்துச் சொல் என்றால் அது பத்தாயிரத்தில் ஒருவரனுக்குத்தான் முடியும். சம்பாதித்த பொருளை பிறருக்கு தானமாகக் கொடு என்றால் அது கோடியில் ஒருவனுக்குத்தான் முடியும். அது உண்மை என்றால், ஏ பொற்கிழியே நீ அறுந்து விழுவாயாக" என்று பாடினார். 

பொற்கிழி  அறுந்து விழுந்தது. 

பாடல் 

ஆர்த்தசபை நூற்றொருவர் ஆயிரத்தொன் றாம்புலவர் 
வார்த்தை பதினா யிரத்தொருவர் - பூத்தமலர்த் 
தண்டா மரைத்திருவே தாதாகோ டிக்கொருவர் 
உண்டாயின் உண்டென் றறு. 


பொருள் 

(click the following link to continue reading)

https://interestingtamilpoems.blogspot.com/2020/08/blog-post_9.html

ஆர்த்தசபை = சண்டைக்கு வா என்றால் சபையில் இருந்து 

நூற்றொருவர்  = நூற்றில் ஒருவன் வருவான் 

ஆயிரத்தொன் றாம்புலவர் = பாடல் பாடு என்றால் ஆயிரத்தில் ஒருவனுக்குத் தான் முடியும் 

வார்த்தை பதினா யிரத்தொருவர் = கற்றதை தெளிவாக மற்றவர்களுக்குச் சொல் என்றால், அது பத்தாயிரத்தில் ஒருவனுக்குத்தான் முடியும் 


பூத்தமலர்த்  = பூத்த மலர் 

தண்டா மரைத் = குளிர்ந்த தாமரை மலரில் இருக்கும் 

திருவே  = இலக்குமியே 

தாதா = கொடையாளி 

கோ டிக்கொருவர்  = கோடியில் ஒருவன் 


உண்டாயின் உண்டென் றறு.  = அது உண்மையானால், உண்மை என்று சொல்ல நீ அறுந்து விழுவாயாக 

பாடல் எழுதுவதை விட, படித்ததை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்ல யாரும் முன் வர மாட்டார்கள்  என்கிறார் ஒளவையார். 

காரணம் 

ஒன்று, சொல்வது  எளிது அல்ல. படித்து புரிந்து கொள்ளலாம். அதை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்வது என்பது ஒரு கலை. அது எல்லோருக்கும் எளிதாக வருவது கிடையாது. 

இரண்டாவது, பொருளைக் கொடுப்பது போல கல்வியைக் கொடுக்கவும் மனம் வராது.   எனக்குத் தெரிந்ததை  மற்றவர்களுக்குச் சொல்லி தந்து விட்டால், என் மதிப்பு என்ன ஆவது.  அவனும் எனக்கு சமமாக ஆகி விடுவானே என்ற எண்ணம். 



கரவா கியகல்வி யுளார் கடைசென்
 றிரவா வகைமெய்ப் பொருள் ஈகுவையோ
 குரவா குமரா குலிசா யுதகுஞ்
 சரவா சிவயோக தயாபரனே!

கரவாகிய கல்வி உளார் என்பார் அருணகிரிநாதர்.  கரவு என்றால் மறைத்தல். 

இயல்வது கரவேல் என்பது ஆத்திச் சூடி. 

கல்வி கற்றவர்கள் பிறருக்குச்  சொல்ல மாட்டார்கள். மறைத்து வைத்துக் கொள்வார்கள். 






No comments:

Post a Comment