Friday, August 7, 2020

ஔவையார் தனிப்பாடல் - இறுமேல் இறு

ஔவையார் தனிப்பாடல் - இறுமேல் இறு


ஒரு நூலோ, பாடலோ, கதையோ நல்லது என்று எப்படி அறிந்து கொள்வது?

நல்லது அல்லாதனனவற்றைப் படித்து நம் நேரத்தை வீணடிக்கக் கூடாது என்பது ஒரு புறம். தீயனவற்றைப் படிப்பதால் நம் மனம் குழம்பும். தீய வழியில் செல்ல முற்பட்டு விடுவோம்.

ஒரு நூல் நல்ல நூல் என்பதற்கு ஒரே சான்று அது காலத்தை வென்று நிற்க வேண்டும்.

நல்லன அல்லாதவற்றை காலம் கழித்து விடும்.

ஒரு நூல் ஆயிரம் ஆண்டுகள் கழித்தும் நிற்கிறது என்றால் அதில் ஏதோ ஒரு உண்மை புதைந்து கிடக்கிறது என்றுதான் அர்த்தம்.

ஓலைச் சுவடியில் எழுதி வைத்த பாடல்கள் ஆயிரம் ஆண்டுகளைத் தாண்டி வந்திருக்கிறது என்றால் அதன் மகத்துவம் புரிய வேண்டும்.

அந்தக் காலத்தில் ஒரு நூலைச் செய்தால் அதை எளிதில் அங்கீகரிக்க மாட்டார்கள்.

அனல் வாதம், புனல் வாதம் என்றெல்லாம் உண்டு.

நூல் எழுதப் பட்ட ஓலைச் சுவடிகளை தீயில் போடுவார்கள். அது தீயில் கருகாமல் இருந்தால், அது நல்ல நூல் என்று ஏற்றுக் கொள்ளவார்கள்.

அது போல, ஓடுகிற நதியில் அந்த நூலைப் போடுவார்கள். அது ஆற்று நீரில் அடித்துக் கொண்டு செல்லாமல்  எதிர் நீந்தி வந்தால், அந்த நூல் ஏற்றுக் கொள்ளப் படும்.

ஒரு முறை ஒரு (பாண்டிய) மன்னன் ஒரு பெரிய கொம்பில் ஒரு கயிரைக் கட்டி, அதில் ஒரு பொன்னாலான ஒரு பையை கட்டித் தொங்க விட்டான்.

அவன், தன்னை நாடி பரிசு பெற வரும் புலவர்களிடம் சொல்லுவானாம் "நீங்கள்  கவிதை பாடுங்கள். அந்த பொற்கிழி கயிறு அறுந்து விழுந்தால் நீங்கள் அதை  எடுத்துக் கொண்டு செல்லலாம்" என்று.

புலவர்களுக்கு பயம். அவர்கள் பாடி, பொற் கிழி கீழே அறுந்து விழாவிட்டால், அவர்கள் பாட்டு  சிறந்தது அல்ல என்று நகைப்புக்கு இடமாகி விடும் அல்லவா?  எனவே யாரும் பாடல் பாடவில்லை.

மன்னனுக்கு சந்தோஷம்.

ஒளவையார் வந்தார். என்ன அங்கே பொற்கிழி கட்டி தொங்குகிறது என்று கேட்டு அறிந்து கொண்டாள். ஓ  இதுவா சங்கதி என்று இரண்டு பாடல்கள் பாடினாள் . இரண்டு பொற்கிழிகள் கயிறு அறுந்து விழுந்தது என்று கதை.

அதில் முதல் பாடல்.

"ஒருவன் கேட்காமல் அவனுக்கு உதவி செய்வது தான் தாளாண்மை எனப் படுவது. கேட்ட பின் கொடுப்பது வலிமையை காட்டுவது. மீண்டும் மீண்டும் ஒருவனை அலைய விட்டு பின் கொடுப்பது அவன் நடந்ததற்கு தந்த கூலி. அப்படி பல முறை வந்து கேட்ட பின்னும் கொடுக்காமல் இருப்பவன் குலம் வாரிசு அற்றுப் போய் விடும் என்பது உண்மையானால்,ஏ பொற் கிழியே நீ அறுந்து விழுவாய் "

இது முதல் பாடல். அவர் பாடி முடித்தவுடன், அவர் சொன்னது உண்மைதான் எனபதால், பொற் கிழி அறுந்து விழுந்ததாம்.

பாடல்

தண்டாமல் ஈவது தாளாண்மை - தண்டி 
அடுத்தக்கால் ஈவது  வண்மை - அடுத்தடுத்துப் 
பின்சென்றால் ஈவது காற்கூலி - பின்சென்றும் 
பொய்த்தான் இவனென்று போமேல், 
அவன்குடி எச்சம் இறுமேல் இறு.

பொருள்

(click the link below to continue reading)

https://interestingtamilpoems.blogspot.com/2020/08/blog-post_7.html

தண்டாமல்  = பிச்சை கேட்காமல் (இன்றும் கூட மலையாளத்தில் தெண்டுதல் , தெண்டி என்ற சொற்கள் உண்டு. தெண்டி என்றால் பிச்சைக்காரன்).

ஈவது = கொடுப்பது

தாளாண்மை  = தயவு உள்ள குணம். கருணை.

தண்டி  = பிச்சை

அடுத்தக்கால் =  கேட்ட பின்

ஈவது = கொடுப்பது

வண்மை = வள்ளல் தன்மை

அடுத்தடுத்துப்  = மீண்டும் மீண்டும்

பின்சென்றால் = பின்னும் வந்து கேட்ட பின்

ஈவது =  கொடுப்பது

காற்கூலி = அவன் நடந்து வந்ததற்கு கொடுத்த கூலி

பின்சென்றும்  = அதன் பின்னும்

பொய்த்தான் = கொடுக்காமல் ஏமாற்றினால்

இவனென்று போமேல்,  = அவனை கொடுக்காமல் விட்டால்

அவன்குடி = அப்படிப்பட்டவன் குடும்பத்தில்

எச்சம் = வாரிசு

இறுமேல் = இற்றுப் போய்விடும் என்பது உண்மை ஆனால்

இறு = நீயும் அறுந்து போ (வாரிசு அறுந்து போவது போல)

கதை உண்மையோ பொய்யோ. ஆனால், அது சொல்லும் கருத்து உயர்வானது.

கேட்காமல் கொடுப்பது என்பது எவ்வளவு உயர்ந்த பண்பு.

இன்று பொது உடைமை பற்றி பேசுகிறோம். அன்றே, இதை எல்லாம் தாண்டி வாழ்க்கை முறையை வகுத்து  வைத்து இருக்கிறார்கள்.

விட்டு விட்டோம்.

பெறவும் இல்லை. கொடுக்கவும் இல்லை.

நடுவில் பல தலைமுறைகள் திசை தெரியாமல் தடுமாறி போய் இருக்கின்றன.

பல படையெடுப்புகள், ஆங்கிலேய ஆதிக்க, நம் பாடத்திட்ட முறைமைகளின் மாற்றம்  என்று வந்ததால் நம் அடிப்படை நமக்குத் தெரியாமல் போய் விட்டது.

அவற்றை நாம் புரிந்து கொள்வதுடன் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லவும் வேண்டும்.





3 comments:

  1. Super Rethin very nice. Two good words karunai and kodai. Recently we had very good experience of this . Please call me as I have misplaced your contact number. Take care

    ReplyDelete
  2. "
    என்ன கொடுப்பான் எவை கொடுப்பான்
    என்றிவர்கள் எண்ணும் முன்னே
    பொன்னும் கொடுப்பான் பொருள் கொடுப்பான்
    போதாது போதாது என்றால்
    இன்னும் கொடுப்பான்
    இவையும் குறைவென்றால் எங்கள் கர்ணன்
    தன்னைக் கொடுப்பான்
    தன் உயிரும் தான் கொடுப்பான்
    தயாநிதியே..."

    ReplyDelete