Sunday, August 23, 2020

திருக்குறள் - பயன் தெரிவார்

திருக்குறள் -  பயன் தெரிவார் 


சில பேர் இருக்கிறார்கள். அவர்கள் மற்றவர்களிடம் ஏதோ ஒரு உதவியை பெற்று இருப்பார்கள். அதைப் பற்றி கேட்டால் "என்ன சார் பெரிய உதவி செஞ்சுட்டான்...அவனுக்கு இருக்கிற செல்வத்துக்கு இன்னும் எவ்வளவோ செய்யலாம்...இத்துனூண்டு செஞ்சான் " என்று பெற்ற உதவியை சிறுமை படுத்திச் சொல்வார்கள். சிறியர்.

உதவி என்பது செய்த உதவியின் அளவு அல்ல. அந்த உதவியினால் விளையும் பயனை பொறுத்தது.

உதாரணமாக, ஒரு மாணவன் பள்ளிக் கூடத்தில் கட்ட வேண்டிய கட்டணத்தை செலுத்த முடியாமல் தவிக்கிறான். குறித்த நேரத்தில் கட்டணம் செலுத்தா விட்டால்,  பள்ளியில் இருந்து வெளியே தள்ளி விடுவார்கள். எங்கெங்கோ கேட்டு கடைசியில் ஒரு நல்லவர் உதவி செய்ய அந்த கட்டணத்தை கட்டி விடுகிறான். பின் படித்து, பெரிய ஆளாகி விடுகிறான்.

இப்போது, அந்த நல்லவர் செய்த உதவியின் அளவு என்ன? அவர் கட்டிய கட்டணத்தின் மதிப்பு அல்ல. அது என்ன ஒரு ஆயிரம், இரண்டாயிரம் இருக்கும். ஆனால், அன்று அவர் அந்த பணம் கொடுத்து உதவி செய்ததால், இன்று அவன் இலட்சக் கணக்கில் பணம் சம்பாதிக்கிறான். இன்னுமும் சம்பாதிப்பான்.

அது மட்டும் அல்ல, அவன் பிள்ளைகளை நன்றாக படிக்க வைக்க முடியும். அந்த பிள்ளைகள் சம்பாதிப்பார்கள். அதன் பின் பேர ப் பிள்ளைகள் என்று தொடரும்.

அது மட்டும் அல்ல, அவன் நன்கு படித்ததால் நல்ல பெண்ணை திருமணம் முடித்தான்.  அவள் கொண்டு வரும் செல்வம். அவள் உருவாக்கும் செல்வம். அவளின்  அன்பு, அரவணைப்பு.

அது மட்டும் அல்ல, கையில் செல்வம் இருப்பதால், அவனுடைய பெற்றோருக்கு  அவன் நல்ல மருத்துவ வசதி செய்து தந்து அவர்கள் நீண்ட நாள் ஆரோக்கியமாக   இருக்க வைக்க முடியும்.

இப்படி, அந்த ஒரு சிறு உதவியின் பலன் விரிந்து கொண்டே போகிறது அல்லவா?

இன்னும் கூட விரித்துச் சொல்லலாம். நீங்கள் கற்பனை செய்து கொள்ளுங்கள்.

உதவியின் அளவு, அதன் பண மதிப்பை வைத்து அளப்பது அல்ல. அதனால் விளையும் பயன்களை பொறுத்தது.

என்றோ நமக்கு, நமது ஆசிரியர்கள் சொல்லிக் கொடுத்த உதவி நாம் வாழ்வில் இவ்வளவு சிறப்பாக   இருக்க முடிகிறது.

அவ்வளவு ஏன்,  சாலையில் ஒருவர் விபத்தில் சிக்கி அடிபட்டு கிடக்கிறார். அவ்வழியே போன ஒரு நல்லவர்,  அடிபட்ட அநத நபரை ஒரு வண்டியில் ஏற்றி  மருத்துவ மனையில் சேர்த்துவிட்டு போகிறார். அவர் அந்த வண்டிக்குக் கொடுத்த   வாடகை ஒரு நூறு ரூபாய் இருக்கும். நேரத்தில்  அந்த  விபத்தில் சிக்கியவரின் உயிர் காப்பாற்றப் பட்டது. அந்த உதவியின் அளவு நூறு ரூபாய் மட்டும் தானா?

ஒரு சின்ன உதவி செய்தால் கூட,  அதை மிகப் பெரிதாக கொள்வார்கள், அந்த உதவியின் பலன் / பயன் அறிந்தவர்கள் என்கிறார் வள்ளுவர்.

பாடல்


தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்

(click the following link to continue reading)

https://interestingtamilpoems.blogspot.com/2020/08/blog-post_23.html

பொருள்


தினைத்துணை = தினை அளவுக்கு சிறிய

நன்றி செயினும் = நல்லது செய்தாலும்

பனைத்துணையாக் = பனை அளவாக

கொள்வர் = எடுத்துக் கொள்வார்கள், கருதுவார்கள்

பயன்தெரி வார் = அந்த உதவியின் பயனை அறிந்தவர்கள்

தினை எவ்வளவு சிறிய ஒன்று. பனை எவ்வளவு பெரிய அளவு.

ஒரு சின்ன உதவி செய்தால் கூட, அதை மிகப் பெரிதாக நினைப்பார்கள் அந்த   உதவியின் பயன் தெரிந்தவர்கள்.

எனவே, நாம் பெறும் ஒவ்வொரு உதவியின் பயனை நினைத்து நாம் அதை போற்ற வேண்டும்.




1 comment:

  1. காலத்திநால் செய்த உதவியும் கூட இது போல் தான். சிறிய தாக இருந்தாலும் பலனை பொருத்து value மாறும் இல்லையா?

    ReplyDelete