Monday, August 10, 2020

திருக்குறள் - செய்யாமல் செய்த உதவி

திருக்குறள் - செய்யாமல் செய்த உதவி 


நாம் யாருக்கு உதவி செய்வோம்? நமக்கு யாராவது உதவி செய்து இருந்தால், அவர்களுக்கு நாம் உதவி செய்வோம்.

முன்ன பின்ன தெரியாத ஒருவர்க்கு நாம் போய் வலிந்து உதவி செய்வோமா?

உலகத்தில் எவ்வளவோ பேருக்கு எத்தனையோ உதவிகள் தேவைப்படும். நம்மால் எல்லாம் செய்ய முடியுமா?

முடியாதுதான். நடைமுறை சாத்தியமும் அல்ல.

அது ஒரு புறம் இருக்கட்டும்.

நமக்கு ஒரு உதவி தேவைப் படுகிறது. யார் யாரிடமோ கேட்டுப் பார்த்து விட்டோம். யாரும் உதவி செய்யும் நிலையில்  இல்லை. என்ன செய்வது என்று தவித்துக் கொண்டு இருக்கிறோம். ரொம்பவும் தனித்து விடப் பட்டது போல உணர்வோம் இல்லையா? நமக்கு உதவி செய்ய யாருமே இல்லையா இந்த உலகில் என்று ஏங்குவோம் அல்லவா?

அந்த சமயத்தில் நமக்கு முன்னப் பின்ன தெரியாத ஒருவர் வந்து நமக்கு உதவி செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அது நமக்கு எப்படி இருக்கும்.

எல்லோரும் கை விட்ட நிலையில், யார் என்றே தெரியாத ஒருவர் நமக்கு பரிந்து, நமக்கு உதவி செய்கிறார் என்றால் நமக்கு எப்படி இருக்கும்?

இப்போது மீண்டும் விட்ட இடத்துக்கு வருவோம்.

நாம் யாருக்காவது அப்படி உதவி செய்து  இருக்கிறோமா? முன்ன பின்ன தெரியாத ஒருவருக்கு நாம் உதவி இருக்கிறோமா?

உலகில் ஒவ்வொருவரும், அறிமுகம் இல்லாத ஒருவற்கு உதவி செய்து கொண்டிருந்தால் அந்த  சமுதாயம் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.

எங்கோ ஒரு  பிள்ளை படித்து நல்ல மதிப்பெண் பெற்று இருக்கிறது. மேலே படிக்க வசதி இல்லை. உடனே எல்லோரும் தங்களால் முடிந்த உதவியை செய்து அந்த பிள்ளையை மேலே படிக்க வைக்கிறார்கள்.

யாரோ ஒரு ஏழை வீட்டுப் பிள்ளை. ஒரு பெரிய நோயில் விழுந்து விடுகிறது. அதன் பெற்றோரிடம் வைத்தியம் செய்ய வசதி இல்லை. உடனே எல்லோரும் சேர்ந்து, கொஞ்சம் பொருள் உதவி செய்து அந்த பிள்ளையை பிழைக்க வைக்கிறார்கள்.

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். அப்படி ஒரு சமுதாயம் இருந்தால் எப்படி இருக்கும்? எவ்வளவு மகிழ்ச்சியான, அமைதியான, சமுதாயமாக அது இருக்கும்?

பாடல்


செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.

பொருள்

(click the link below to continue reading)

https://interestingtamilpoems.blogspot.com/2020/08/blog-post_10.html

செய்யாமல் = இதுவரை தனக்கு எந்த உதவியும் செய்யாமல் இருந்த ஒருவருக்கு

செய்த உதவிக்கு = தான் செய்த உதவிக்கு

வையகமும் = இந்த பூலோகமும்

வானகமும் = அந்த விண்ணுலகும்

ஆற்றல் அரிது. = கொடுத்தாலும் ஒப்பாக இருக்காது.

நமக்கு உதவி செய்தவருக்கு நாம் பதில் உதவி செய்வது என்பது ஏதோ வாங்கிய கடனை  திரும்பிச் செலுத்துவது போல.

மாறாக, நமக்கு ஒரு உதவியும் செய்யாத ஒருவர்க்கு நாம் செய்யும் உதவி இருக்கிறதே  அது மண்ணை விட, விண்ணை விட உயர்ந்தது என்கிறார் வள்ளுவர்.

செய்து பாருங்களேன்.

அதன் அருமை தெரிய வரும்.





No comments:

Post a Comment