Monday, August 24, 2020

திருக்குறள் - உள்ளக் கெடும்

திருக்குறள் - உள்ளக் கெடும் 


ஒருவர் நமக்கு எவ்வளவோ அன்பா, நட்பா, உறவா இருப்பார். ஏதோ ஒரு  சமயத்தில், தெரிந்தோ தெரியாமலோ நமக்கு ஒரு தீமை செய்து விடுகிறார். அது நம் மனதில் உறுத்திக் கொண்டே இருக்கும் அல்லவா? நம்மால் அதை சீரணிக்க முடியாது அல்லவா?

ஏன், நீட்டி வளர்ப்பானேன், கணவன் மனைவி உறவை எடுத்துக் கொள்வோம்.

ஏதோ ஒரு சண்டை, சச்சரவு, உணர்ச்சி வேகத்தில் வார்த்தை வந்து விழுந்து விடுகிறது.

சூடு போட்ட மாதிரி அது அப்படியே நிற்கிறது அல்லவா? என்ன இருந்தாலும், அவ/ அவர் அப்படி சொல்லி இருக்கக் கூடாது என்று மனம் கிடந்து பொருமுகிறது அல்லவா?  திருப்பி திருப்பி வந்து வருத்துகிறது அல்லவா?

அதை எப்படி மறப்பது? எப்படி முன்பு போல அன்பாக, அன்யோன்யமாக எப்படி இருப்பது? விரிசல் விழுந்தா , விழுந்தது தானா? நடுவில் விழுந்த விரிசலை மறக்க முடியாதா?


முன்பு ஒரு குறளில்

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது 
அன்றே மறப்பது நன்று 

என்று பார்த்தோம்.

ஒருவர் நமக்கு செய்த நன்றியை மறக்காமல் இருக்கச் சொன்னால், சரி. மறக்காமல் இருக்கலாம். எங்காவது எழுதி வைத்துக் கொள்ளலாம்.

நமக்கு கெடுதல் செய்ததை எப்படி மறப்பது? மறப்பது என்பது நம் கையிலா இருக்கு? ஒன்றை மறக்க வேண்டும் என்று நினைத்து மறக்க முடியுமா?

இப்படி முடியாத ஒன்றை வள்ளுவர் சொல்லுவாரா?

அல்லது, மறப்பது நல்லது என்று சும்மா உபசாரத்துக்கு சொல்லி இருப்பாரோ ?

இல்லை. அவர் உண்மையாகத்தான் சொல்கிறார். அதற்கு வழியும் சொல்கிறார்.

முதலில் இந்தக் குறளை பார்ப்போம் .

பாடல்

கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்

பொருள்

(click the following link to continue reading)

https://interestingtamilpoems.blogspot.com/2020/08/blog-post_24.html

கொன்றன்ன = கொல்வதற்கு ஒப்பான

இன்னா = கெடுதல், தீமை

செயினும் = ஒருவர் செய்தாலும்

அவர்செய்த = அவர் முன்பு செய்த

ஒன்று நன்று = நல்லது ஒன்றை

உள்ளக் கெடும் = மனதில் நினைக்க, அந்த தீமை கெடும்.

அதாவது, நமக்கு ஒருவர் தீமை செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அதுவும் எப்படி பட்ட தீமை, நம்மை கொல்வதற்கு ஒப்பான தீமை. நம்மை கொல்வதை விட பெரிய தீமை என்ன இருக்க முடியும்?  அப்படிப் பட்ட ஒரு தீமையை  நமக்கு ஒருவர் செய்தால் கூட, அவர் நமக்கு முன் செய்த நன்மையை  மனதில் நினைக்க,  அந்த தீமை கெடும் என்கிறார்.

அது எப்படி முடியும் என்ற கேள்வி எழலாம்.

ஞாபகம் இருக்கிறதா - தினைத்துணை, பனைத்துணை ?

ஒருவர் நமக்கு ஒரு சின்ன உதவி செய்து இருந்தால், அதை பனை அளவாக நினைத்தால், அவர் இப்போது செய்த தீமை சிறிதாகி மறந்து போகும்.

"நமக்கு எவ்வளவோ பெரிய உதவி எல்லாம் செய்து இருக்கிறார். ஏதோ ஒரு சின்ன  தவறு நிகழ்ந்து விட்டது. அவர் செஞ்ச உதவிக்கு முன்னால், இது ஒரு துரும்பு"  என்று நினைக்க முடியும்.

வாழ்க்கை என்பதே இரு கோடுகள் தானே.

மனைவி / கணவன் ஏதோ சொல்லிவிட்டாள். அதனால் என்ன? எனக்காக அவள்  எவ்வளவு செய்து இருக்கிறாள். எவ்வளவு தியாகம் பண்ணி இருக்கிறாள். எவ்வளவோ உதவி செய்து இருக்கிறாள், எனக்கும், என் குடும்பத்துக்கும்....பரவாயில்லை, ஏதோ கோபம்,  வாய் தவறி வந்து விட்டது....என்று அன்போடு   அதை மன்னிக்க முடிவது மட்டும் அல்ல, அதை எளிதாக மறக்கவும்  முடியும்.

அதே போல் தான் மனைவிக்கும். இந்த மனுஷன் எனக்கும், இந்த குடும்பத்துக்கும்  எவ்வளவு பாடு படுகிறார். போயிட்டு போகுது, ஏதோ தவறுதலா சொல்லி இருப்பார் என்று நினைக்கவும், மறக்கவும் முடியும்.

பெற்ற உதவிகளை பெரிதாக நின்னைத்தால்,  செய்த தீமையின் அளவு சிறிதாகி முக்கியத்துவம் இல்லாமல் போகும்.

வள்ளுவர் காட்டும் வாழ்க்கை நெறி இது.

சிந்திப்போம்.






No comments:

Post a Comment