Pages

Monday, September 21, 2020

திருக்குறள் - நடுவு நிலைமை

 திருக்குறள் - நடுவு நிலைமை 


திருக்குறளில் நடுவு நிலைமை என்று ஒரு அதிகாரம் இருக்கிறது. அப்படி ஒன்று இருப்பதே கூட சிலருக்குத் தெரியாது. தெரிந்தால் கூட, நடுவு நிலைமை தானே, அதில் என்ன இருக்கப் போகிறது என்று அதை தாண்டிய மேலே சென்று விடுவார்கள். 

மிக மிக முக்கியமான அதிகாரம். அதிலும், இன்றைய கால கட்டத்துக்கு மிகவும் வேண்டிய ஒரு அதிகாரம். 

நடுவு நிலைமை என்றால் பாரபட்சம் பார்க்காமல் , நடு நிலைமையோடு இருத்தல். 

இதில் என்ன பெரிய செய்தி இருக்கிறது?

யோசித்துப் பார்ப்போம்.

நம் பிள்ளை ஒரு தவறு செய்து விடுகிறான். நாம் நடுவு நிலைமையாக அவன் செய்தது தவறு என்று சொல்வோமா அல்லது எப்படியாவது அவன் செய்ததை சரி என்று மல்லுக் கட்டுவோமா?

கணவன் ஒரு தவறு செய்து விடுகிறான். மனைவி விட்டுக் கொடுப்பாளா? (மனைவி = வாழ்க்கை துணை நலம் பேணுபவள்).

இரண்டு மாநிலத்துக்கு இடையே நீர் பகிர்வு பிரச்சனை. நாம் ஒரு மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று வைத்துக் கொள்வோம்.  நாம் நடுவு நிலையாக பேசுவோமா? 

இரண்டு நாடுகளுக்கு இடையே சண்டை. சச்சரவு.  யார் நடு நிலையாக இருக்கிறார்கள்? 

எங்குமே நடு நிலை என்பதே கிடையாது. 

ஒரு குடும்பத்தில் ஏதாவது சிக்கல் வந்தால், வீட்டில் யாரவது ஒரு பெரியவர் சொன்னதை எல்லோரும்  கேட்க வேண்டும். அந்தப் பெரியவர் நடுவு நிலை பேணுபவராக இருக்க வேண்டும். 

ஒரு கிராமத்தில் ஒரு சிக்கல் என்றால், ஊர் பெரியவரிடம் கேட்டு அவர் சொல்கிறபடி செய்ய வேண்டும். அவர் நடுநிலையாளனாக இருக்க வேண்டும். 

இட ஒதுக்கீடு பிரச்சனை. எது நடு நிலைமை? என்னை பாதிப்பதை நான் எதிர்ப்பேன்  என்பது நடு நிலைமை அல்ல. 

மாமியார் மருமகள் சண்டை. கணவன் நடு நிலையாக இருக்க முடியுமா? 

நாட்டில் உள்ள பெரும்பாலான பிரச்சனைகளுக்கு காரணம் மக்கள் நடு நிலை தவறுவதால் தான். 

எனவே தான், வள்ளுவர் ஒரு அதற்கென்று ஒரு அதிகாரம் வைத்து இருக்கிறார். 

அதில் முதல் குறள் :

பாடல் 

தகுதி எனஒன்று நன்றே பகுதியால்

பாற்பட்டு ஒழுகப் பெறின்

பொருள் 

(pl click the following link to continue reading)

https://interestingtamilpoems.blogspot.com/2020/09/blog-post_21.html


தகுதி = நடுவு நிலைமை என்ற தகுதி 

எனஒன்று = என்று ஒன்று 

நன்றே = நல்லது 

பகுதியால் = பிரிவால் 

பாற்பட்டு = அதற்கேற்றவாறு  

ஒழுகப் பெறின் = நடந்து கொண்டால் 


சரி, இதில் நடுவு நிலைமை என்ற சொல்லே இல்லையே. தகுதி என்று இருக்கிறது. அது எந்தத் தகுதியாக வேண்டுமானாலும் இருக்கலாமே?

அதிகாரம் நடுவு நிலைமை. எனவே அதில் உள்ள குறள்கள் அது பற்றித்தான் பேசும்.

பகுதியால் என்றால் பிரிவால் என்று பொருள் கொள்ளலாம். அது என்ன பிரிவு?
நமக்கு வேண்டியவர்கள், வேண்டாதவர்கள், இரண்டும் இல்லாத பொதுவானவர்கள். இந்த மூன்று பிரிவாக உள்ளவர்களிடமும் நடு நிலையாக இருக்க வேண்டும். 


நமக்கு வேண்டியவர் என்றால் அவருக்கு ஒரு ஞாயம், வேண்டாதவர் என்றால் இன்னொரு  ஞாயம் என்று இருக்கக் கூடாது. 

ஒழுகப் பெறின் என்று கூறுவதில் இருந்து அது எவ்வளவு கடினமானது என்று தெரியும். 

பெறின் என்றால் செய்தால் என்று அர்த்தம். செய்ய முடியாது, அது கடினம் என்ற பொருள் அதில் தொக்கி நிற்கிறது. 

"ஒரு நாளைக்கு பத்து மணிநேரம் படித்தால், நல்ல மதிப்பெண் வாங்கலாம்". 
"படித்தால்" என்பதில் இருந்து அது அவ்வளவு எளிது அல்ல என்று தெரிந்து கொள்ளலாம். 



No comments:

Post a Comment