Pages

Tuesday, September 22, 2020

நாலடியார் - எதைக் கண்டாலும் பயம் எனக்கு

நாலடியார் - எதைக் கண்டாலும் பயம் எனக்கு 


நல்ல குடும்பத்தில் பிறந்திருப்பது அச்சம் தரும் ஒன்றாகும். 



ஏன்?

நல்ல குடும்பத்தில் பிறந்தால், படிக்காமல் இருக்க அச்சம்.  நல்ல குடும்பத்தில் எல்லோரும் படித்து இருப்பார்கள். அந்தக் குடும்பத்தில் பிறந்த பின், படிக்காமல் இருப்பது அச்சம் தரும் செயல்.  எல்லோரும் படிக்காத மண்டூகங்களாக இருந்து விட்டால் பரவாயில்லை. அந்தக் குடும்பத்தில் ஒருவன் படிக்கவில்லை என்றால் ஒன்றும் தெரியாது. 

மோசமான வேலைகள் செய்ய அச்சம். குடும்பத்தோட பேர் கெட்டுப் போய் விடுமோ என்ற அச்சம். 

வாய் தவறிக் கூட தவறாகப் பேசி விடக் கூடாதே என்ற அச்சம். இராமாயணத்தில், இராமனுக்கு அரசு இல்லை என்று சொல்லக் கேட்ட இலக்குவன் கோபத்தில் கண்டபடி பேசுவான். அப்போது இராமன் சொல்லுவான் "மறை தந்த நாவால் வாய் தந்தன கூறுதியோ"  என்பான்.வேதம் படித்த வாயால், இப்படி கோபச் சொல் வரலாமா என்று கேட்பான். நல்ல குடியில் பிறந்தால், மறந்தும் வழுக்கிய சொல் வரக் கூடாது. வந்து விடுமோ என்று அஞ்ச வேண்டும். 


ஆய்தந்து, அவன் அவ் உரை கூறலும், 'ஐய! நின் தன்
வாய் தந்தன கூறுதியோ, மறை தந்த நாவால்?
நீ தந்தது, அன்றே, நெறியோர்கண் நிலாதது? ஈன்ற
தாய் தந்தை என்றால், அவர்மேல் சலிக்கின்றது என்னோ?'  
  

அதை விட பெரிய பயம் - தன்னிடம் இல்லை என்று கேட்டு வருபவர்களுக்கு தானும் இல்லை என்று சொல்ல வேண்டி வந்து விடுமோ என்ற பயம் பெரிய பயம். 

நல்ல குடியில் பிறந்து இருப்பது என்பது, கடலில் செல்லும் கலம் போன்றது. அங்கும் இங்கும் எப்போது அலைக்கழிக்கும். எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

பாடல் 

கல்லாமை அச்சம்; கயவர் தொழில் அச்சம்;
சொல்லாமையுள்ளும் ஓர் சோர்வு அச்சம்; எல்லாம்
இரப்பார்க்கு ஒன்று ஈயாமை அச்சம்; மரத்தார்; இம்
மாணாக் குடிப் பிறந்தார்.

பொருள் 

(pl click the link below to continue reading)


கல்லாமை அச்சம் = கல்வி அறிவு இல்லாமல் இருப்பது ஒரு பயம் 

கயவர் தொழில் அச்சம் = கயவர்கள் செய்யும் கொலை, கொள்ளை போன்ற தீச் செயல்கள் செய்ய அச்சம் 

சொல்லாமையுள்ளும் ஓர் சோர்வு அச்சம் = சொல்லுகின்ற வார்த்தைகளில் தவறான, பயன் இல்லாத வார்த்தை வந்து விடுமோ என்ற அச்சம் 

எல்லாம் = அது எல்லாம் விட 

இரப்பார்க்கு = தன்னிடம் வந்து வேண்டி நிற்பவர்களுக்கு 

ஒன்று ஈயாமை அச்சம் = ஒன்று கொடுக்க முடியாமல் இருப்பது அச்சம் 

மரத்தார் = மரத்தில் செய்த படகு போல 

இம் மாணாக் குடிப் பிறந்தார். = இந்த மாதிரி நல்ல குடியில் பிறந்தவர்கள்  வாழ்க்கை.

கொடுக்க முடியாமல் போவது பற்றி பயந்து இருக்கிறார்கள். 

பயனில்லாதவற்றை பேசி விடுவோமோ என்று பயந்து இருக்கிறார்கள். 


2 comments:

  1. நல்ல விளக்கம்.நற் பண்புகளிலிருந்து ,நியாயமான செயல்களிலிருந்து தவறி விடுவோமோ என்கிற அச்சம் மிக அவசியம்.

    ReplyDelete
  2. ஒரு பக்கம் தவறு செய்யப் பயம்.
    இன்னொரு பக்கம் பொய்யும், லஞ்சமும், வஞ்சமும்.

    தவறு செய்யும் முன் ஒருவர் எப்படிப் பயப்பட வேண்டும் என்று மிக அழகாக்க காட்டுகிறது இந்தப் பாடல்.

    நன்றி.

    ReplyDelete