கம்ப இராமாயணம் - கோட்படாப் பதமே, ஐய குரங்கு உருக் கொண்டது
எது உண்மை ? எது பரம்பொருள்? எது முக்தி? எது வீடு பேறு ? என்ற கேள்விகளுக்கு எல்லாம், படித்து விடை கண்டு விடலாம் என்று சிலர் நினைக்கிறார்கள். வேதங்களும் அறிய முடியாத விஷயங்கள் இருக்கிறது.
உண்மைத் தத்துவங்கள் அறிவுக்குள் அடங்குமா?
எல்லா பொருள்களும் இராஜஸ, தாமச, சாத்வீக குண சுழற்சிக்கு உட்பட்டவைதான். இவற்றை விட்டு மேலே போக முடியுமா? இந்த குணங்களின் ஆக்ரமிப்பு இல்லாமல் அவற்றை தாண்டிப் போக முடியுமா?
இராமனும், இலக்குவனும் காட்டில் போய்க் கொண்டு இருக்கிறார்கள். அவர்களை நோக்கி அனுமன் வருகிறான்.
ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் செய்து கொள்கிறார்கள். அப்போது, அனுமன் தன்னுடைய விஸ்வரூபத்தை அவர்களுக்கு காண்பிக்கிறான்.
அதைக் கண்ட இராமன் தம்பி இலக்குவனிடம் சொல்லுவான்,
"இலக்குவா, மூன்று குணங்களைத் தாண்டி, ஞான ஒளி பெற்று சுடர் விடும் அந்த ஒன்று, அநாதியான வேதங்களும் அறிய முடியாதது, எந்த தத்துவ ஞானத்தாலும் அறிய முடியாது...அப்பேற்பட்ட ஒன்று இங்கு குரங்கு வடிவில் வந்து நிற்கிறது போலும் " என்றான்.
அனுமனை, தத்துவமும், ஞானம், வேதமும் அறிய முடியாத ஒன்று இராமன் சொல்கிறான்.
பாடல்
தாள்படாக்கமலம் அன்ன தடங்
கணான், தம்பிக்கு, 'அம்மா!
கீழ்ப் படாநின்ற நீக்கி, கிளர்
படாது ஆகி, என்றும்
நாட்படா மறைகளாலும், நவை
படா ஞானத்தாலும்,
கோட்படாப் பதமே, ஐய!
குரக்கு உருக்கொண்டது' என்றான்.
கணான், தம்பிக்கு, 'அம்மா!
கீழ்ப் படாநின்ற நீக்கி, கிளர்
படாது ஆகி, என்றும்
நாட்படா மறைகளாலும், நவை
படா ஞானத்தாலும்,
கோட்படாப் பதமே, ஐய!
குரக்கு உருக்கொண்டது' என்றான்.
பொருள்
தாள் படாக்கமலம் = தண்டு இல்லாத கமலம்
அன்ன = போல
தடங் கணான் = பெரிய கண்களை உடைய இராமன்
தம்பிக்கு = தம்பி இலக்குவனிடம்
'அம்மா! = விளிச் சொல்
கீழ்ப் படாநின்ற நீக்கி = சாத்வீகம், இராஜசம் , தாமசம் என்று முக்குணங்களை நீக்கி
கிளர் படாது ஆகி = கலப்படம் அற்று
என்றும் = எப்போதும்
நாட்படா மறைகளாலும், = தோன்றிய நாள் இது என்று அறியாத வேதங்களாலும்
நவை படா ஞானத்தாலும், = குற்றம் அற்ற ஞானத்தாலும்
கோட்படாப் பதமே = அறிய முடியாத நிலை
, ஐய! = இலக்குவா
குரக்கு உருக்கொண்டது' என்றான். = அந்த ஒன்று குரங்கு உருவம் கொண்டு வந்து இருக்கிறது என்றான்
இது ஒரு குரங்குதானே என்று இளக்காரமாக எண்ணாமல் இப்படி மரியாதையோடு பேசுவது நன்றாக இருக்கிறது.
ReplyDelete