நாலடியார் - உரைப்பினும் நாய்குரைத் தற்று
பல பேருக்கு ஏதாவது கேள்வி கேட்க வேண்டும், வாதம் பண்ண வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் இருக்கும். அப்படி ஏதாவது கேள்வி கேட்டு, வாதம் பண்ணினால் தான் தங்கள் அறிவுத் திறன் வெளிப் படுவாதாக அவர்கள் நினைக்கிறார்கள்.
ஆனால் விளைவு என்னவோ அதற்கு நேர் எதிர் மாறாக இருக்கிறது.
வாயைத் திறந்து ஏதாவது சொல்லி, தங்கள் அறியாமையை அவர்கள் வெளிப் படுத்துவார்கள்.
அவர் சொன்னது தப்பு, அது எப்படி சரியாக இருக்கும், இந்தக் காலத்துக்குப் பொருந்துமா, இது எல்லாம் நடை முறை சாத்தியம் அல்ல என்று தங்கள் மேதா விலாசத்தை வெளிச்சம் போட்டு காட்டுவார்கள்.
கேள்வி கேட்க வேண்டும். சிந்திக்க வேண்டும். எதையும் அப்படியே ஏற்றுக் கொள்ளக் கூடாது.
ஆனால், அந்தக் கேள்விகள் உள் நோக்கி இருக்க வேண்டும். எதிரில் இருப்பவனை மடக்கவோ, தன் அறிவை வெளிக் காட்டவோ இருக்கக் கூடாது. உண்மை தேடும் முயற்சியாக இருக்க வேண்டும். கேள்வியை வைத்துக் கொண்டு பதில் தேட வேண்டும். எல்லோரையும் கேள்வி கேட்டுக் கொண்டுத் திரியக் கூடாது.
சிலருக்கு கேட்பதோடு அந்த தேவை நின்று விடும். பதில் பற்றி எந்தக் கவலையும் இல்லை. பதிலை அவர்கள் கேட்பது கூட கிடையாது. அல்லது என்ன பதில் சொன்னாலும், அவர்கள் கொண்ட எண்ணம் மாறவே மாறாது. பின் எதற்கு கேட்பது.
நாலாடியர் சொல்கிறது.
ஒரு பெரிய அறிஞர்கள் கூடிய சபை. அதில் ஒரு ஓரத்தில் ஒரு நாய் படுத்துக் கிடந்தது. அது பாட்டுக்கு ஒரு பக்கம் இருந்தது. அதை யாரும் கண்டு கொள்ளவில்லை. என்னடா இது, நம்மை யாரும் கண்டு கொள்ளவே இல்லையே, ஏதாவது சொல்வோம், கேட்போம், அவர்களை மடக்குவோம், திணற அடிப்போம் என்று நினைத்து கேள்வி கேட்டது.
"இந்த நாய் எங்கிருந்து வந்தது, அதை அடித்து விரட்டுங்கள் " என்று அடித்து விரட்டி விட்டார்கள்.
பேசாமல் வாய் மூடி இருந்தால், நிம்மதியாக இருந்து இருக்கலாம். குரைத்து , நான் நாய், இங்கே இருக்கிறேன் என்று தன்னைத் தானே காட்டிக் கொடுக்க வேண்டுமா?
பாடல்
கல்லாது நீண்ட ஒருவன் உலகத்து
நல்லறி வாள ரிடைப்புக்கு - மெல்ல
இருப்பினும் நாயிருந் தற்றே, இராஅது
உரைப்பினும் நாய்குரைத் தற்று.
பொருள்
https://interestingtamilpoems.blogspot.com/2021/01/blog-post.html
Please click the above link to continue reading
கல்லாது = படிக்காமலேயே
நீண்ட ஒருவன் = வளர்ந்த ஒருவன்
உலகத்து = உலகில்
நல்லறி வாள ரிடைப்புக்கு = நல் + அறிவாளர் + இடை + புக்கு. அறிஞர்கள் மத்தியில் புகுந்து
மெல்ல = மெல்ல
இருப்பினும் = இருந்தாலும்
நாயிருந் தற்றே = நாய் இருந்தாற்போல
இராஅது = இருக்க முடியாது
உரைப்பினும் நாய் = நாய் பேசினாலும்
குரைத் தற்று. = அது நாய் குரைத்தது என்று தான் உலகம் கொள்ளும்.
அறிஞர்கள் முன் அமைதி காத்தல் நன்று.
யார் அறிஞர் என்று தெரியாததால், எல்லோர் முன்னும், அமைதி காத்தல் நன்று.
நன்றி. உங்கள் ஹாங்க் காங்க் நகர் வாழ் தோழர் எமக்கு தங்கள் எழுத்து வல்லமையை அறிமுகம் செய்து வைத்தார். மிக்க நன்று தங்கள் பதவுரைகள்.
ReplyDeleteவீண் வாதம், விதண்டா வாதம் எல்லாம் ஒரு பயனும் இல்லாதவை; தன்னறிவே உயர்வானது என்ற செய்தி முக்கியமானது. நன்றி.
ReplyDelete