Pages

Saturday, January 2, 2021

கம்ப இராமாயணம் - கொடியாய் விடியாய்

 கம்ப இராமாயணம் - கொடியாய் விடியாய் 


தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவதில் பெண்கள் மிக நுணுக்கமானவர்கள். ஆண்களின் உணர்சிகள் என்னவோ கொஞ்சம் தான் இருக்கும் போல இருக்கிறது. கோபம், காமம், பசி, என்று மிக அழுத்தமான, அதீதமான உணர்சிகளாகவே இருக்கிறது. பெண்களின் உணர்வுகளும், அதை அவர்கள் வெளிப்படுத்தும் விதமும் மிக நுணுக்கமாகவும், மென்மையாகவும் இருக்கிறது. 


பெரும்பாலும் அப்படித்தான் என்று நினைக்கிறேன்.  விதி விலக்குகள் இருக்கலாம். 

 மேலும், ஆணுக்கு பெண் சரி என்று கொடி பிடித்துக் கொண்டு பெண்களின் அந்த மென்மை, நுண்மை எல்லாம் காற்றில் பறக்க விட்டுக் கொண்டு இருக்கிறார்கள் - சிலர். 


அது ஒரு பக்கம் இருக்கட்டும். 


இராமன் வில்லை முறித்து விட்டான். மறு நாள் சுயம்வரம். இருவரும் தவிக்கிறார்கள். 

இராமனின் தவிப்பு இருக்கட்டும். சீதையின் நிலை என்ன. பெண்ணுக்குள்ளும் இந்த தவிப்பு இருக்குமா? இருந்தால் எப்படி இருக்கும்? 


இரவு நேரம். தூக்கம் வரவில்லை. இந்த இரவோ முடிவதாகக் காணோம். நீண்டு கொண்டே போகிறது. சீதை , அந்த இரவைப் பார்த்துச் சொல்கிறாள்

"ஏய் இரவே, வலிமை இல்லாத ஒருவர் மேல் யாராவது சண்டை போட்டு அவர்கள் உயிரை எடுக்க நினைப்பார்களா? நீ ஏன் என் உயிரை இப்படி வதைக்கிறாய்?  இரு இரு...நீ என்னை இப்படி கஷ்டப் படுத்துறேல ... விடியட்டும், இராமன் வருவான், அவன்கிட்ட சொல்லி உன்னை என்ன பண்றேன் பாரு " 


பாடல் 

உரவு ஏதும் இலார் உயிர் ஈதும்” எனா.

கரவே புரிவார் உளரோ? கதிரோன்

வரவே. எனை ஆள் உடையான் வருமே!-

இரவே! - கொடியாய். விடியாய்’ எனுமால்.


பொருள் 

(click the following link to continue reading)

https://interestingtamilpoems.blogspot.com/2021/01/blog-post_2.html

உரவு = வலிமை 

ஏதும் இலார் = எதுவும் இல்லாதவர்களை 

உயிர் ஈதும்” எனா. = உயிரை தருவோம் என்று எண்ணாமல் 

கரவே = வஞ்சித்து (அவர்கள் உயிரை )

புரிவார் உளரோ?  = பறிப்பவர்கள் யாராவது இருப்பார்களா ?

கதிரோன் வரவே = கதிரவன் வரட்டும் 


எனை ஆள் உடையான் வருமே!- = எனை ஆளும் உடமை பெற்றவன் வருவான் (இராமன்) 

இரவே! - = ஏய் இரவே 

கொடியாய். = கொடுமையான ஒன்றே 

விடியாய் = நீ விடியாமல் இருக்கிறாய் 


எனுமால். = என்று கூறினாள் 


கம்பன் ஒரு ஆண்.  ஒரு பெண் நினைத்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து கூறுகிறான். 


அது சரித்தானா என்று பெண் வாசகிகள் கூறினால் நன்றாக இருக்கும். 




1 comment: