Pages

Monday, January 25, 2021

கம்ப இராமாயணம் - அறிவை நோக்கினான்

 கம்ப இராமாயணம் - அறிவை நோக்கினான் 


எங்கு சென்று எல்லாம் அடங்க வேண்டும் ? 

புலன்களை அடக்கு அடக்கு என்கிறார்களே,  அடக்கி எங்கே வைப்பது? ஆசையை அடக்கு என்றால் எதில் அடக்கி வைப்பது. புலியை அடக்கு என்றால் அடக்கி ஏதோ ஒரு கூண்டில் தானே போட்டு வைக்க வேண்டும். 


சித்திரகூட பர்வத மலை பக்கம். அந்தி நேரம். இராமனும் சீதையும் தங்க இலக்குவன் குடிசை அமைத்து முடித்து விட்டான். 

இருள் கவியும் நேரம். 


ஆண் குரங்கும், பெண் குரங்கும், பகல் எல்லாம் ஆடி ஓடி களைத்துப் போய், எந்த மரப் பொந்தில் சென்று இரவில் தூங்கலாம் என்று பார்த்துக் கொண்டு இருக்கின்றன. 

ஆண் யானையும், பெண் யானையும் தாங்கள் சென்று ஓய்வு எடுக்கும் இடத்தை நோக்கிச் சென்றன. 

பகலில் இரை தேடச் சென்ற பறவைகள் நீண்ட தொலைவில் உள்ள தங்கள் கூட்டை நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தன. 

இராமன் இவற்றை எல்லாம் பார்க்கிறான். தன் புலன்களை ஒடுக்கி அறிவில் நிறுத்துவதைப் பற்றி எண்ணிக் கொண்டு இருக்கிறான். 


பாடல் 

மந்தியும் கடுவனும் மரங்கள் நோக்கின;

தந்தியும் பிடிகளும் தடங்கள் நோக்கின;

நிந்தை இல் சகுந்தங்கள் நீளம் நோக்கின;

அந்தியை நோக்கினான், அறிவை நோக்கினான்.


பொருள் 

(please click the following link to continue reading)

https://interestingtamilpoems.blogspot.com/2021/01/blog-post_25.html


மந்தியும் கடுவனும்  = ஆண் மற்றும் பெண் குரங்குகள் 

மரங்கள் நோக்கின; = ஓய்வு எடுக்கும் மரத்தை நோக்கின 

தந்தியும் பிடிகளும் = ஆண் யானையும் பெண் யானையும் 

தடங்கள் நோக்கின; = தாங்கள் செல்ல வேண்டிய பாதையை நோக்கின 

நிந்தை இல் = குற்றமற்ற  

சகுந்தங்கள் = பறவைகள்

நீளம் நோக்கின; = தாங்கள் செல்ல வேண்டிய தூரத்தை நோக்கின 

அந்தியை நோக்கினான் = மாலைப் பொழுதை நோக்கினான் 

அறிவை நோக்கினான். = அறிவை நோக்கினான் 


எப்படி விலங்குகள் எல்லாம் தங்கள் கூட்டை அடைவதைப் பற்றி சிந்திதனவோ, அது போல, அலை பாய்ந்த மனதை அறிவில் அடக்கும் வழி பார்த்து நின்றான் இராமன். 


முதல் தரம் படிக்கும் போது சற்று தவறுதலாக படித்து விட்டேன். 


ஆண் குரங்கு பெண் குரங்கைப் பார்த்தது...மரத்தில் சென்று இரவை கழிக்கலாம் என்று. 

ஆண் யானைகள் தங்கள் இணையான பெண் யானைகளை அழைத்துக் கொண்டு சென்றன.


பறவைகளும் கூடு நோக்கிச் சென்றன. 


இராமன் மாலை நேரத்தைப் பார்த்தான், சீதையைப் பார்த்தான் என்று நினைத்து, "அறிவை நோக்கினான்" என்பதை "அரிவையை நோக்கினான்" என்று வாசித்து விட்டேன். 


ஒரு வேளை அது தான் சரியோ என்று பல பதிப்புகளை சரி பார்த்தேன். நான் வாசித்தது தவறு தான். 


ஏனோ, அந்த கவி ஓட்டம் சரியாக இருப்பதாக எனக்குப் படுகிறது. 


"அந்தி நோக்கினான் அரிவை நோக்கினான்" அரிவை என்றால் பெண். 


என்று தான் இருக்க வேண்டும் என்று என் மனம் சொல்கிறது. 


உங்களுக்கு எது சரி என்று படுகிறதோ, அதை எடுத்துக் கொள்ளுங்களேன்.


No comments:

Post a Comment