Pages

Thursday, January 28, 2021

திருக்குறள் - இன்னா செய்யாமை

திருக்குறள் - இன்னா செய்யாமை

இன்னா என்றால் துன்பம். இனிய என்பதன் எதிர்பதம். 

நாம் பிறருக்கு எப்போது துன்பம் செய்வோம்? அவர்கள் மேல் கோபம் வந்தால் துன்பம் செய்வோம். 


அது மட்டும் தானா? கோபம் இல்லாமல் துன்பம் செய்ய முடியாதா? செய்யாமல் இருக்கிறோமா?

இந்தக் கேள்வி வள்ளுவருக்கு வந்து இருக்கிறது. யோசித்து எழுதி இருக்கிறார். 


வெகுளாமை என்று ஒரு அதிகாரம். அதாவது கோபம் கொள்ளாமை. அதற்கு அடுத்த அதிகாரமாய் இன்னா செய்யாமை என்ற அதிகாரத்தை வைக்கிறார் வள்ளுவர். 


அதாவது கோபம் இல்லாமலும் பிறருக்கு தீங்கு செய்ய முடியும் என்று சொல்கிறார். 


அவை என்னென்ன காரணங்கள் என்று பரிமேல் அழகர் விளக்குகிறார். 


"அஃதாவது, தனக்கு ஒரு பயன் நோக்கியாதல் ,செற்றம் பற்றியாதல். சோர்வானாதல் ஓர் உயிர்க்கு இன்னாதவற்றைச் செய்யாமை. இன்னா செய்தல் வெகுளி ஒழியவும் நிகழும் என்பது அறிவித்தற்கு , இது வெகுளாமையின்பின் வைக்கப்பட்டது"


என்பது அவர் உரை. 


உரைக்கு உரை காண வேண்டி இருக்கிறது. 

click the following link to continue reading 

https://interestingtamilpoems.blogspot.com/2021/01/blog-post_28.html


"அஃதாவது" என்றால் எஃதாவது? இன்னா செய்வது, தீங்கு செய்வது என்பது. 


"தனக்கு ஒரு பயன் நோக்கியாதல்" = நமக்கு ஒரு பலன் வேண்டி பிறருக்கு தீங்கு செய்து விடலாம். பணம் கொடுத்து பிள்ளைக்கு கல்லூரியில் இடம் வாங்கி விடலாம். அதனால், படித்த ஒருவனுக்கு இடம் கிடைக்காத தீங்கு நேர்ந்து விடும். 

அடுத்தது,


செற்றம் பற்றியாதல் = செற்றம் என்றால் பகை. ஒருவர் மேல் பகை கொண்டு அவருக்கு தீங்கு செய்து விடலாம். 


மூன்றாவதாக, 

"சோர்வானாதல்" - மறந்து போய், தெரியாமல் தீமை செய்து விடலாம்.  காலையில் எழுந்து சுடச் சுட காப்பி குடிக்கிறோம். அந்த காப்பியில் உள்ள பாலுக்கு அந்த மாடு எவ்வளவு துன்பப் பட்டிருக்கும். நீங்கள் அந்த தீங்கை செய்யவில்லை. ஆனால், உங்களால், அந்த தீங்கு நிகழ்கிறது. தெரியாமல் மற்றொருவர் காலை மிதித்து விடுகிறோம். நடக்கும் போது தெரியாமல் எறும்பு, போன்ற சின்ன உயிர்கள் மிதிபட்டு சாகின்றன. வேண்டும் என்றா செய்தோம். தெரியாமல் நிகழ்வது. 


இப்படி மூன்று விதமாக இன்னை செய்தல் நிகழ்கிறது. 


அது பற்றி மேலும் மிக விரிவாக சிந்திக்க இருக்கிறோம். 




1 comment:

  1. சிறப்பான ஆரம்பம்.இன்னா செய்யாமை அதிகாரத்தில் உள்ள எல்லா பாடல்களுக்கும் உங்கள் விளக்கத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete