நாலாயிர திவ்ய பிரபந்தம் - கள்ளமே காதல் செய்து
வெள்ளநீர் பரந்து பாயும் விரிபொழி லரங்கந் தன்னுள்
கள்ளனார் கிடந்த வாறும் கமலநன் முகமும் கண்டு
உள்ளமே வலியைப் போலும் ஒருவனென் றுணர மாட்டாய்
கள்ளமே காதல் செய்துன் கள்ளத்தே கழிக்கின் றாயே.
அன்பு செய்வதைத் தவிர இங்கு வேறு என்ன வேலை இருக்கிறது? எதன் மீதாவது, யார் மீதாவது அன்பு செய்து கொண்டே இருப்பது ஒன்று தான் வேலை. அன்பு செய்வதை விட்டு விட்டு, பின் வேறு என்ன செய்வது? அன்பு இல்லாவிட்டால், எதற்கு எதையும் செய்ய வேண்டும்.
நமக்கு மட்டும் அல்ல, அந்த இறைவனுக்கும் அது தான் வேலை. தன்னைத் தானே அன்பு செய்து கொள்ள முடியுமா? இப்படி பல்லாயிரம் உயிர்களைப் படைத்து அவை ஒவ்வொன்றின் உள்ளிருந்தும் அன்பை கொடுத்தும், பெற்றும் இடை விடாமால் அன்பை அனுபவித்துக் கொண்டிருக்கிறான்.
அன்பு என்பது கொடுப்பது மட்டும் அல்ல, பெறுவது மட்டும் அல்ல, கொடுக்கவும், பெற்றுக் கொள்ளவும் காத்துக் கிடப்பதும், ஏங்கி நிற்பதும், கிடைக்காமல் தவிப்பதும் எல்லாம் அன்பு தான்.
தெரியாமல் அன்பு செய்வது, மற்றவருக்குத் தெரியாமல் அவர் மனதை திருடிக் கொள்வது, மனதை பறி கொடுத்து நிற்பது..எல்லாம் அன்பின் வெளிப்பாடுதான்.
வைகுண்டத்தில் இருக்க வேண்டியதுதானே. இங்கு எதற்கு வர வேண்டும்? அன்பு வேண்டித்தான்.
அன்பு என்பது என்ன என்றே புரியாத மனங்களும் இருக்கின்றன. ஒரு கண் பார்வையில், ஒரு வார்த்தையில், ஒரு தொடலில், அன்பு கொட்டிக் கிடக்கும். அறிந்து கொள்ளும் மனம் இருந்தால், இங்கே அன்பின்றி வேறு ஒன்றும் இல்லை என்று தெரியும்.
வெள்ளநீர் பரந்து பாயும் விரிபொழி லரங்கந் தன்னுள்
கள்ளனார் கிடந்த வாறும் கமலநன் முகமும் கண்டு
உள்ளமே வலியைப் போலும் ஒருவனென் றுணர மாட்டாய்
கள்ளமே காதல் செய்துன் கள்ளத்தே கழிக்கின் றாயே.
பொருள்
https://interestingtamilpoems.blogspot.com/2021/02/blog-post_19.html
click the above link to continue reading.
வெள்ளநீர் = வெள்ளம் போல் நீர்
பரந்து = விரிந்து
பாயும் = பாய்கின்ற
விரிபொழி லரங்கந் தன்னுள் = மலர்கள் விரிந்த, விரிந்து கொண்டு இருக்கின்ற, இனியும் விரியும் படி உள்ள சோலைகளில்
கள்ளனார் = கள்வன். அடியவர்களின் மனங்களை அவர்கள் அனுமதி இல்லாமலேயே திருடிக் கொள்ளும் கள்ளன்
கிடந்த வாறும் = சயனத்தில் இருந்தவாறும்
கமலநன் முகமும் கண்டு = தாமரை போன்ற முகத்தை கண்டும்
உள்ளமே = உன்னுடைய உள்ளமே
வலியைப் = கடினமானது
போலும் = போலும்
ஒருவனென் றுணர மாட்டாய் = அவன் ஒருவனே என்று உணர மாட்டாய்
கள்ளமே = கள்ளத்தனமாக
காதல் செய்துன் = காதல் செய்து
கள்ளத்தே கழிக்கின் றாயே. = உன் வாழ்வை கள்ளத்தனமாக கழிக்கின்றாயே
என்கிறார் தொண்டரடிப் பொடி ஆழ்வார்
கள்ளமே காதல் செய்து = எந்த காதலும் உண்மை கிடையாது. இன்றிருக்கும், நாளை போய் விடும்.
தவறானவற்றின் மேல் காதல் செய்து
கள்ளத்தே கழிக்கின்றாயே = வீணாக கழிக்கின்றாயே
திரு ஞான சம்மந்தர் சொல்லுவார் "என் உள்ளம் கவர் கள்வன்" என்று
"தந்தது உன் தன்னை, கொண்டது என் தன்னை, சங்கரா, யார் கொலோ சதுரர்"...மணி வாசகர்
அன்பே சிவம்.
ஆஹா.
ReplyDeleteஅருமையான விளக்கம்
ReplyDelete"தவறானவற்றின் மேல் காதல் செய்து வீணாகக் கழிக்கின்றாயே" என்று தனது உள்ளத்தை நோக்கிப் பாடும் பாடலாக இது இருக்கிறது என்று எண்ணுகிறேன். இதில், "இறைவன் அன்பு செய்பவன்" என்ற பொருள் எங்கே வந்தது என்று புரியவில்லையே?
ReplyDelete