Pages

Friday, February 26, 2021

கம்ப இராமாயணம் - மடம் என்றால் என்ன ?

கம்ப இராமாயணம் - மடம் என்றால் என்ன ?


பெண்களுக்கு உரிய குணங்களில் மடம் என்று ஒரு குணம் உண்டு என்று சொல்கிறார்கள். அது என்ன ? 


மடம் என்றால் மடத்தனமா? அப்படி இருக்க வாய்ப்பில்லை. 


யோசித்துப் பார்த்ததில் எனக்குத் தோன்றியது என்ன என்றால், "தன் பெருமை, தன் அருமை, தன் வலிமை தான் அறியாமல் இருப்பது" தான் மடமை என்று தோன்றுகிறது. 


கம்ப இராமயணத்தில் ஒரு உதாரணம் பார்ப்போம். 


சீதையின் ஆற்றல் அளவற்றதாக இருக்கிறது.


இராமனின் ஆற்றலை விட பலப் பல மடங்கு பெரியது சீதையின் ஆற்றல் என்று தெரிகிறது. 


இலங்கைக்குப் போய், இராவனனனோடு சண்டையிட்டு, அவனை கொல்வதற்கு இராமன் படாத பாடு படுகிறான். வானரங்கள் துணை வேண்டி இருந்தது. கொஞ்சம் தேவர்களும் உதவி செய்தார்கள். 


இத்துனூண்டு இலங்கையை அழிக்க இந்தப் பாடு. 


சீதை சொல்கிறாள் "எல்லை நீத்த இந்த உலகங்கள் யாவையும் என் சொல்லினால் சுடுவேன்" என்கிறாள். இருந்த இடத்தில் இருந்து கொண்டே, அத்தனை உலகையும் என் சொல்லினால் சுடுவேன் என்கிறாள். 


அனுமனுக்கு சிரஞ்சீவி பட்டம் தருகிறாள். என்றும் இறவா வரம். எந்தக் கடவுளை வேண்டி எவ்வளவு தவம் செய்தாலும், இறவா வரம் மட்டும் தர மாட்டார்கள். சீதையோ, கேட்காமலேயே இந்த பிடி என்று சாகா வரம் தருகிறாள். 


அவ்வளவு ஆற்றல். 

அப்பேற்பட்ட ஆற்றல் உள்ள சீதை, துன்பம் தாளாமல் தூக்குப் போட்டு சாகப் போகிறாள்.  உலகை அழிக்கும் ஆற்றல் கொண்ட சீதை, இராவணனை அழித்து தன் துன்பத்தை போக்கிக் கொள்ள முடியாமல், தற்கொலை செய்து கொள்ளத் துணிகிறாள். 


என்ன என்று சொல்லுவது? 


தன் வலிமை தனக்குத் தெரியாமல் அடங்கிக் கிடப்பது தான் பெண்ணின் மடம் என்று சொல்கிறார்களோ ? 


சீதை தற்கொலைக்கு முயன்ற அந்தப் பாடல் 


பாடல் 


எய்தினள் பின்னும் எண்ணாத எண்ணி ‘ஈங்கு

உய்திறம் இல்லை! ‘என்று ஒருப்பட்டு ஆங்கு ஒரு

கொய்தளிர்க் கொம்பிடைக் கொடி இட்டே தலை

பெய்திடும் ஏல்வையில் தவத்தின் பெற்றியால்.


பொருள் 



click the above link to continue reading


எய்தினள் = சென்று அடைந்தாள் 

பின்னும் = மேலும் 

எண்ணாத எண்ணி  = பலவற்றையும் எண்ணி 

‘ஈங்கு = இங்கு 

உய்திறம் இல்லை!  = வாழ வேறு வழி இல்லை 

‘என்று = என்று 

 ஒருப்பட்டு  = முடிவு செய்து 

ஆங்கு ஒரு = அங்குள்ள ஒரு 

கொய்தளிர்க் = தளிர் விட்ட 

கொம்பிடைக் = கொம்பின் மேல் 

கொடி இட்டே= படர்ந்து கிடந்த ஒரு கொடியில் 

தலை பெய்திடும் =  தலையை சேர்த்திடும் 

ஏல்வையில் = நேரத்தில் 

 தவத்தின் பெற்றியால். = அவள் செய்த தவத்தின் காரணமாக 



சீதை உலகை என் சொல்லால் சுடுவேன் என்ற பாடல் 


அல்லல் மாக்கள் இலங்கை அது ஆகுமோ?

எல்லை நீத்த உலகங்கள் யாவும் என்
சொல்லினால் சுடுவேன்; அது தூயவன்
வில்லின் ஆற்றற்கு மாசு என்று வீசினேன்.

பொருள் 

அல்லல் = துன்பம் (தரும்)

மாக்கள் = விலங்குகள் (மனிதப் பண்பு அற்றவர்கள்)

இலங்கை அது ஆகுமோ? = (நிறைந்த) இந்த இலங்கை மட்டும் என்ன

எல்லை நீத்த = எல்லையே இல்லாத

உலகங்கள் யாவும் = அனைத்து உலகங்களையும்

என் சொல்லினால் = என் சொல்லினால்

சுடுவேன்; = சுட்டு எரித்து விடுவேன்

அது = அப்படி செய்தால், அது

தூயவன் = இராமனின்

வில்லின் ஆற்றற்கு = வில்லின் ஆற்றலுக்கு

மாசு என்று வீசினேன். = குற்றம் என்று வீசினேன்


சீதை அனுமனுக்கு சிரஞ்சீவி பட்டம் அளித்த பாடல்  


பாழிய பணைத் தோள் வீர! துணை இலேன் பரிவு தீர்த்த 

வாழிய வள்ளலே! யான் மறு இலா மனத்தேன்என்னின், 
ஊழி ஓர் பகலாய் ஓதும் யாண்டு எலாம், உலகம் 
ஏழும் ஏழும் வீவுற்ற ஞான்றும், இன்று என இருத்தி' என்றாள். 



பொருள்

பாழிய = வீரம் பொருந்திய

பணைத் தோள் வீர! = பனை மரம் போல் உறுதியான தோள்களை கொண்ட வீரனே

துணை இலேன் = ஒரு துணையும் இல்லாமல் தவித்துக் கொண்டு  இருந்தேன்

பரிவு தீர்த்த = வருத்தம் தீர்த்த
 
வாழிய வள்ளலே! = வாழிய வள்ளலே (உயிர் கொடுத்த வள்ளல்)

யான் = நான்

மறு இலா மனத்தேன்என்னின் = கறை படியாத மனம் உள்ளவள் எனின் 
 
ஊழி = ஊழிக் காலம்

ஓர் பகலாய் ஓதும் = ஒரு பகலாய் இருக்கும்

யாண்டு எலாம் = இங்கு உள்ள எல்லாம்

உலகம் ஏழும் ஏழும் = ஏழேழு உலகமும்

வீவுற்ற ஞான்றும் = வீழுகின்ற போதும்

இன்று என இருத்தி' என்றாள் = இன்று போல் இருப்பாய் என்று வாழ்த்தினாள்

எழுபது என்பது வயது ஆகும் போது உடம்பிற்கு அத்தனை நோயும் வந்து விடுகிறது....கற்ப கோடி ஆண்டு வாழ்ந்தால் உடம்பு எப்படி இருக்கும்...பல் விழுந்து, தோல் சுருங்கி, கண் பார்வை இழந்து, ஞாபகம் அற்றுப் போய்...அது ஒரு வரமா ? எனவே சீதை "இன்று என இருத்தி" என்றாள்.  இன்று போல் ஆரோக்கியமாக இரு என்று வாழ்த்தினாள்.

அப்படித்தான் கண்ணகியும். 

மதுரையை எரித்த கண்ணகி, மாதவி பின்னால் போன கோவலனை தடுத்தாள் இல்லை. 

மென்மையான அந்த பெண்மைக்கு பின்னால் அபரிதமான ஆற்றல் இருக்கிறது. அது தெரியாமல் இருப்பது தான் பெண்மையின் மேன்மையோ ?




4 comments:

  1. அதை தெரிந்து கொண்டு விட விடாமல் பெண்களை அழுத்தி வைத்து இருந்தது தான் ஆண்களின் சாமர்த்தியமோ?🤔

    ReplyDelete
  2. இதை விட அழகாகவும் நேரத்தியாகவும் விளக்க இயலுமோ?
    ‘இன்று என இருத்தி’ என்கிற ப்ரயோகம் சீதையின் பெருமையை கூறுவதா அல்லது கவியின் திறமையை வெளிப்படுத்துவதா அல்லது நீங்கள் கையாண்டவிதமா என்கிற குழப்பத்தில் பரவசமானேன். அமர்க்களம்தான்

    ReplyDelete
  3. "இன்று என இருத்தி" என்பது மிக இனிமையாக இருந்தது.

    ஆனால், "சொல்லினால் சுடுவேன்" என்று சும்மா சொல்வதால் அப்படித் திறம் வந்து விடுமா?! அந்தத் திறம் சீதைக்கு இருந்தது என்பதற்கு எந்த அத்தாட்சியும் இல்லையே?

    ReplyDelete