திருக்குறள் - எப்படி பேச வேண்டும்
அலுவலகத்தில், தொழில் செய்யும் இடத்தில், அல்லது வேறு எங்காவது ஏதாவது பதவி வகித்தால், அங்கே எப்படி பேச வேண்டும் என்று வள்ளுவர் சொல்லித் தருகிறார்.
இது மந்திரிகளுக்கு சொன்னது. இருந்தும், நாம் ஒருவருக்கு யோசனை சொல்லும் இடத்தில் இருந்தால், ஒருவருக்கு கீழே வேலை செய்தால், நாமும் மந்திரி மாதிரிதான். இது நமக்கும் பொருந்தும்.
நமக்கு மட்டும் அல்ல, நம் பிள்ளைகளுக்கும், பேரப் பிள்ளைகளுக்கும் பொருந்தும். அவர்களுக்கும் சொல்லித் தாருங்கள்.
பாடல்
வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்
கேட்பினும் சொல்லா விடல்
பொருள்
Click the following link to continue
https://interestingtamilpoems.blogspot.com/2021/02/blog-post_27.html
வேட்பன = (அரசன்/மேலதிகாரி ) விரும்பியவற்றை
சொல்லி = சொல்லி
வினையில = வினை இல்லாதவற்றை
எஞ்ஞான்றும் = எப்போதும்
கேட்பினும் = கேட்டால் கூட
சொல்லா விடல் = சொல்லாமல் விட்டு விட வேண்டும்
மேலதிகாரி விரும்பியதை சொல்லணும், விரும்பாததை சொல்லக் கூடாது...பொதுவா ஜால்ரா அடிக்கணும் அப்படின்னு வள்ளுவர் சொல்லுகிறாரா? இல்லை.
இதெல்லாம் பரிமேலே அழகர் உரை இல்லாமல் நம்மால் சத்தியமாய் புரிந்து கொள்ள முடியாது.
எப்படி பொருள் எடுக்கிறார் என்று பாருங்கள்.
வினையில என்ற சொல்லை எடுத்துக் கொள்கிறார். வினை என்றால் வேலை, தொழில், முயற்சி என்று பொருள். வினையால் விளைவது பலன், ஒரு நன்மை. வினையில என்றால் பலன் இல்லாத என்று பொருள் கொள்கிறார். பலன் இல்லாதவற்றை பேசக் கூடாது.
சரி.
அடுத்தது, "கேட்பினும்" என்ற சொல்லை எடுக்கிறார். சில சமயம் மேல் அதிகாரி நம்மைக் கூப்பிட்டு சும்மா பேசுவார். டீ குடித்துக் கொண்டோ அல்லது மாலை வேளையில் வேறு ஏதாவது அருந்திக் கொண்டோ பேச்சு வரும். நம்மோடு பேச விரும்புவார். அவரே விரும்பினாலும் பலன் இல்லாதவற்றைப் பற்றி பேசக் கூடாது. மேல் அதிகாரி கேட்டால் கூட பலன் இல்லாதவற்றைப் பற்றி பேசக் கூடாது.
அடுத்தது, "எஞ்ஞான்றும்": எப்பவாவது, கொஞ்சம் ஜாலியாக இருக்கும் போது அரட்டை அடிக்கலாமா என்றால் கூடவே கூடாது என்கிறார். ஒரு போதும் அப்படி பேசக் கூடாது என்கிறார்.
"கேட்பினும்"...கேட்டால் கூட பலன் தராதவற்றைப் பற்றி பேசக் கூடாது. அதற்கு எதிர் மறையாக, கேட்காவிட்டால் கூட பலன் தருபவற்றைப் பற்றி பேச வேண்டும். அரசனோ, அதிகாரியோ கேட்காவிட்டால் கூட, பலன் தரும் என்றால் அதைப் பற்றி பேச வேண்டும். சொல்ல வேண்டும். "என் கிட்ட கேட்டா சொல்லுவேன்..."என்று சும்மா இருக்கக் கூடாது.
அதிகாரிகள் கேட்டாலும், கேட்காவிட்டாலும் பலன் உள்ளவற்றை அவர்களிடம் சொல்ல வேண்டும்.
அதிகாரிகள் கேட்டால் கூட, பலன் இல்லாதவற்றை சொல்லக் கூடாது.
இதை எப்போதும் பழக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
தேவை இல்லாமல் அரட்டை அடிப்பது, கோள் சொல்லுவது, போட்டுக் கொடுப்பது, புரணி பேசுவது, இட்டு கட்டி சொல்லுவது , பொய் சொல்லுவது என்பனவற்றை விட்டு விட வேண்டும்.
பலன் இருந்தால் பேசு. இல்லை என்றால் மௌனமே சிறந்தது.
"வேட்பன = (அரசன்/மேலதிகாரி ) விரும்பியவற்றை
ReplyDeleteசொல்லி = சொல்லி"
இந்த இரண்டு சொற்களும் ஏன் சொல்லியிருக்கிறார்? அவற்றை விளக்கவில்லையே?