திருக்குறள் - பரிமேலழகர் உரைப்பாயிரம் - பாகம் 1
நமக்கு வாழ்வில் சில குறிக்கோள் இருக்கும். அந்த இலக்கை அடைந்தால் நாம் நிம்மதியாக மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று நாம் மனதுக்குள் குறித்துக் கொண்டு அந்த குறிக்கோளை நோக்கி நகர்வோம்.
பல குறிக்கோள்களை அடைந்தும் இருப்போம். நிம்மதியாக, மகிழ்வாக இருக்கிறோமா?
"பொண்ணுக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி வச்சுட்டால், அப்புறம் ஒரு பிரச்சனையும் இல்லை. நிம்மதியா அக்கடான்னு இருக்கலாம்" நு நினைப்போம். அப்படி நினைத்த எத்தனை பேர் நிம்மதியாக இருக்கிறார்கள் ?
பெண்ணுக்கு திருமணம் ஆன சில நாட்கள், மாதங்கள் சந்தோஷமாக இருக்கும். அப்புறம் ஏதாவது பூதம் கிளம்பும்.
எந்த ஒரு பொருளையோ, அனுபவத்தையோ நாம் அடைந்தால் சந்தோஷம் வரும் என்று நினைத்து அதை அடையும் தருவாயில், நம் நோக்கம் மாறிப் போய் விடுகிறது.
மனம், அதை விட்டு விட்டு வேறொன்றின் பின் செல்லத் தலைப் படுகிறது.
சரி, இப்படியே போய்க் கொண்டிருந்தால், அதற்கு என்னதான் முடிவு என்று ஆராய்ந்து, அதற்கு ஒரு விடையும் கண்டு பிடித்து விட்டார்கள்.
அது தான் வீடு பேறு அல்லது இறைவனின் திருவடி. அதை அடைந்த பின், அதற்கு மேல் ஒன்று இல்லை.
அதற்கு கீழான அனைத்து இன்பங்களும் முடியக் கூடிய இன்பங்கள். தொடங்கியதில் இருந்து முடியாமல் இருந்து கொண்டே இருக்கும் இன்பம் என்று ஒன்று இருக்கிறதா?
சரி, வீடு பேறு என்று சொல்லப்படும் அதை எப்படி அடைவது?
ஒன்று இருக்கிறது என்று சொன்னால், அதை எப்படி அடைவது என்றும் சொல்ல வேண்டும் அல்லவா?
அதை அடைய நம் சான்றோர் வகுத்த வழி நான்கு
அதாவது - அறம் பொருள், இன்பம், வீடு என்பன.
இதைத்தான் வள்ளுவர் தொகுத்துக் கூறுகிறார்.
ஆனால், வீடு பற்றி சொல்லவில்லையே. அறம், பொருள், இன்பம் மூன்று தானே இருக்கிறது என்று கேட்டால், வீடு என்பது நம் சொல்லும் சிந்தனையும் செல்லாத இடம் என்பதால், அதை நேரே சொல்ல முடியாது, அதற்கு வழி தான் காட்ட முடியம் என்பதால், வழி சொல்வதோடு வள்ளுவர் நிறுத்திக் கொள்கிறார். நீங்கள் அந்த வழியே போனால், "வீடு பேறு" வரும்.
இதை பரிமேலழகர் உரைப்பாயிரத்தில் எப்படி சொல்கிறார் என்று பாருங்கள்.
உரைப்பாயிரம்
இந்திரன் முதலிய இறையவர் பதங்களும், அந்தமில் இன்பத்து அழிவில் வீடும், நெறியறிந்து எய்துதற்குரிய மாந்தர்க்கு உறுதியென உயர்ந்தோரான் எடுக்கப்பட்ட பொருள் நான்கு. அவை அறம், பொருள், இன்பம், வீடு என்பன. அவற்றுள் வீடென்பது சிந்தையும் மொழியும் செல்லா நிலைமைத்து ஆகலின், துறவறமாகிய காரணவகையாற் கூறப்படுவதல்லது இலக்கணவகையாற் கூறப்படாமையின், நூல்களாற் கூறப்படுவன ஏனை மூன்றுமேயாம்.
பொருள்
https://interestingtamilpoems.blogspot.com/2021/03/1.html
click the above link to continue reading
அந்தக் கால தமிழ நடை. சற்று அடர்த்தியாக இருக்கும்.
ஒவ்வொரு பாகமாக படிப்போம்.
"இந்திரன் முதலிய இறையவர் பதங்களும்" = எவ்வளவு பெரிய செல்வம், பதவி, அதிகாரம் எதுவாக இருந்தாலும். இந்திர பதவியை விட பெரிய பதவி இருக்குமா? பஞ்ச பூதங்களும் இந்திரனின் ஆட்சிக்கு கட்டுப் பட்டவை.
"அந்தமில் இன்பத்து" = முடிவில்லாத இன்பம். எது முடிவில்லாது? ஸ்வர்கம், இந்திரப் பதவி போன்றவை என்றோ ஒரு நாள் முடியும். முடிந்த பின், மீண்டும் மனிதனாகவோ, விலங்காகவோ பிறக்க வேண்டும். முடிவில்லாத இன்பம் அடையவும்....
அழிவில் வீடும் = அழிவற்ற வீடு பேறு. முதலில் இந்திரன் போன்ற தேவ பதவிகள், பின் அந்தம் இல்லாத இன்பம், பின் வீடு பேறு
இந்த மூன்றையும் அடைய
நெறியறிந்து எய்துதற்குரிய மாந்தர்க்கு = நெறி என்றால் வழி. எந்த வழியில், முறையில் சென்றால் அதை அடைய முடியுமோ. லாட்டரி சீட்டு அடித்தால் பணம் வரும். ஆனால் எல்லோருக்கும் அது அடிக்குமா? எனவே அது வழி அல்ல. குருட்டு அதிர்ஷ்டம்.
உறுதியென = நிச்சயமானதென்று
உயர்ந்தோரான் = பெரியவர்களால்
எடுக்கப்பட்ட பொருள் நான்கு = சொல்லப் பட்ட பொருள்கள் நான்கு.
அவை = அவையாவன
அறம், பொருள், இன்பம், வீடு என்பன. = அறம், பொருள், இன்பம் வீடு என்ற நான்குமாகும்.
அவற்றுள் = அந்த நான்கில்
வீடென்பது = வீடு பேறு என்பது
சிந்தையும் மொழியும் = நம் அறிவும், சொல்லும்
செல்லா நிலைமைத்து ஆகலின் = செல்லாது என்று இருப்பதால்
துறவறமாகிய = துறவறம் என்ற
காரணவகையாற் = காரண வகை. அது என்ன காரண வகை? நீங்கள் புதிதாக ஒரு இடத்துக்குப் போகிறீர்கள். விலாசம் இருக்கிறது. ஆனால் வழி தெரியவில்லை. அங்குள்ள ஒரு ஆளிடம் அந்த விலாசத்தை காட்டி, வழி கேட்கிறீர்கள். அவர், வழி சொல்கிறார். "இப்படியே நேரே போய், வலது புறம் திரும்பி...." என்று அடையாளங்கள் சொல்கிறார்.
நீங்கள், "அதெல்லாம் நம்ப முடியாது. அந்த விலாசம் உள்ள வீட்டை இங்கே கொண்டு வந்து காட்டு. அப்போதுதான் நம்புவேன்" என்று சொன்னால் எப்படி இருக்கும்.
அவர் சொன்ன வழியில் சென்று பார்க்க வேண்டும். அவர் சொல்வதை நம்ப வேண்டும். வேறு வழி இருக்கிறதா? உங்களுக்கோ தெரியாது. தெரிந்தவர் சொல்கிறார். அவர் சொல்வதை கேட்டு நடந்தால், நீங்கள் தேடிய இடம் வரும்.
அதைத்தான் "காரண வகை" என்று கூறினார். மத்தபடி நேரில் காட்ட முடியாது.
கூறப்படுவதல்லது = அதைத் தவிர் வேறு வழியில் கூற முடியாது
இலக்கணவகையாற் கூறப்படாமையின் = விளக்கிக் கூற முடியாது என்பதால்
நூல்களாற் கூறப்படுவன = அனைத்து நூல்களிலும் கூறப் படுவது
ஏனை மூன்றுமேயாம். = மற்ற மூன்றும் தான். அதாவது, அறம், பொருள் இன்பம் என்ற மூன்று மட்டுமே.
வீடு பேறு பற்றிக் எந்த நூலாவது கூறினால், அது சரி அல்ல என்று புரிந்து கொள்ள முடியும்.
எனவே, வீடு பேறு அடைய, அறம், பொருள் , இன்பம் என்ற இந்த மூன்று மட்டும்தான் (வேறு எதுவம் கிடையாது) . எனவே, அந்த மூன்றை வள்ளுவர் எடுத்துக் கொள்கிறார் என்கிறார் பரிமேலழகர்.
இப்போது மீண்டும் ஒரு முறை உரைப்பாயிரத்தின் முதல் பத்தியை படித்துப் பாருங்கள்.
"இந்திரன் முதலிய இறையவர் பதங்களும்,
அந்தமில் இன்பத்து அழிவில் வீடும்,
நெறியறிந்து
எய்துதற்குரிய மாந்தர்க்கு
உறுதியென உயர்ந்தோரான் எடுக்கப்பட்ட பொருள் நான்கு.
அவை அறம், பொருள், இன்பம், வீடு என்பன.
அவற்றுள்
வீடென்பது
சிந்தையும் மொழியும் செல்லா நிலைமைத்து ஆகலின்,
துறவறமாகிய காரணவகையாற் கூறப்படுவதல்லது
இலக்கணவகையாற் கூறப்படாமையின்,
நூல்களாற் கூறப்படுவன ஏனை மூன்றுமேயாம்."
வள்ளுவர் இந்த மூன்றையும் சொன்னதினால், அவர் வீடு பேறு பற்றியும் சொல்லி இருக்கிறார் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
இப்போது புரிகிறதா
எதற்கு திருக்குறள் படிக்க வேண்டும் (வீடு பேறு அடைய)
ஏன் அறம் , பொருள் இன்பம் என்று மட்டும் சொன்னார்
என்பதெல்லாம் புரிந்து விட்டதா ?
மேலே படிப்போமா? அல்லது இவ்வளவே போதுமா ?
அடேங்கப்பா. முன்னுரை லயே இவ்வளவு இருக்கா. But still interesting.
ReplyDeleteவணக்கம் .
ReplyDeleteகாத்திருந்தேன் ...கண்டேன் .மகிழ்ச்சி ..
உங்கள் நடையிலேயே செல்லுங்கள் ஐயா ...
மேலே படிப்போம் ....
இதைவிட தெளிவாக கூற இயலாது.உங்களுடைய பணி தொடர வேண்டுகிறோம்
ReplyDeleteஇந்தரன் முதலிய இனறயவர் பதங்கள் என்றால் ...
ReplyDeleteஇந்திரனுக்கு பின் யார் யார் என்று கூறமுடியுமா ஐயா..?
நன்றி...
இலங்கை ஜெயராஜ் பேச்சை அப்படியேவா மனுஷன் copy அடிப்பான், பரவாள நல்ல சிரமெடுத்து பண்ணிருகீங்க, ஆனாலும் அவர் சொல்லும்போது இன்னும் அதிக விளக்கம் இருக்கும். .https://youtube.com/playlist?list=PLVt1jaSbMS3uEFOnVWJ0J2UU19mDJoBYj&si=9qu95BBRtbkpJ5Hi
ReplyDelete