Pages

Tuesday, March 16, 2021

திருக்குறள் - பரிமேலழகர் உரைப்பாயிரம் - பாகம் 2

திருக்குறள் - பரிமேலழகர் உரைப்பாயிரம் - பாகம் 2 

முதல் பாகத்திலே, கீழ்கண்ட பத்தியின் உரையை பார்த்தோம்.

https://interestingtamilpoems.blogspot.com/2021/03/1.html

இந்திரன் முதலிய இறையவர் பதங்களும், அந்தமில் இன்பத்து அழிவில் வீடும், நெறியறிந்து எய்துதற்குரிய மாந்தர்க்கு உறுதியென உயர்ந்தோரான் எடுக்கப்பட்ட பொருள் நான்கு. அவை அறம், பொருள், இன்பம், வீடு என்பன. அவற்றுள் வீடென்பது சிந்தையும் மொழியும் செல்லா நிலைமைத்து ஆகலின், துறவறமாகிய காரணவகையாற் கூறப்படுவதல்லது இலக்கணவகையாற் கூறப்படாமையின், நூல்களாற் கூறப்படுவன ஏனை மூன்றுமேயாம்.


இனி மேலே தொடருவோம்....


https://interestingtamilpoems.blogspot.com/2021/03/2.html


click the above link to continue reading



சரி, அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கில் வீடு என்பதை சொல்லியோ, சிந்தித்தோ அறிந்து கொள்ள முடியாது என்பதால், அதை காரண வகையால் அன்றி இலக்கண வகையால் அறிய முடியாது என்பதால், முதல் மூன்றை எடுத்துக் கொள்கிறார். 


அதில் 


அறம் என்றால் என்ன என்று சிந்திக்கத் தலைப்படுகிறார் பரிமேலழகர். 


தர்மம், நியதி, அறம், ஒழுங்கு, சட்டம் என்பதற்கு யாராலாவது சரியான விளக்கம் கூற முடியுமா?  


இதுதான் அறம் என்று சுட்டி கூற முடியுமா?


கீழ்க் கோர்டில் சொன்னதை மேல் கோர்ட் மறுக்கிறது. எது அறம் என்பதில் எவ்வளவு குழப்பம் இருக்கிறது. 


மது அருந்தலாமா? அது அறம் இல்லை என்றால், இன்னொரு மதத்ததில், அந்த மதத்தின் இறைவனே மக்களுக்கு மதுவும் மீனும் கொடுத்ததார் என்று வருகிறது. அவர்கள் எல்லோரும் அறம் வழுவியவர்களா?


மாமிசம் உண்ணலாமா கூடாதா? 


பலதார மணம் சரியா தவறா? 


விவாகரத்து சரியா தவறா? 


அறம் என்பதை எப்படி அறுதியிட்டு கூறுவது?


ஒரே வரியில் சொல்லி விட்டுப் போகிறார் பரிமேலழகர். அவருடைய அறிவின் ஆழத்துக்கு இந்த ஒரு வரி போதும். 


"அவற்றுள், அறமாவது மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும், விலக்கியன ஒழிதலுமாம். "


அறம் என்றால், மனு முதலிய நூல்களில் சொல்லப் பட்டவற்றை கடை பிடிப்பதும், அவை செய்யக் கூடாது என்று சொல்லியவற்றை செய்யாமல் இருப்பதும் என்கிறார். 


முக்கியமாக கவனிக்க வேண்டியது "முதலிய" என்ற சொல்லை. முதலிய என்றால் அது போன்ற உயர்ந்த நூல்களில் எது செய், அல்லது செய்யாதே என்று சொல்லி இருக்கிறதோ, அதை செய்வதும், செய்யாமல் விடுவதும் அறம் ஆகும். 


எனவே, அற வழியில் நடக்க வேண்டும் என்றால், முதலில் உயர்ந்த நூல்களை படிக்க வேண்டும். அவற்றுள் செய்யச் சொன்னவற்றை செய்ய வேண்டும். செய்யக் கூடாது என்று சொன்னவற்றை செய்யாமல் விட வேண்டும். 


மனு சாஸ்திரம் எல்லாம் காலத்துக்கு ஒவ்வாது. அதை எப்படி இப்போது கடை பிடிப்பது என்ற கேள்வி வரும். 


முதலில் அதை படிக்க வேண்டும். புரிந்து கொள்ள வேண்டும். பின், அதற்கு பின் வந்த நூல்கள் அந்த அறத்தை எப்படி மாற்றி இருக்கின்றன என்று புரிந்து கொண்டு காலத்துக்கு ஏற்ப நம்மை தயார் படுத்திக் கொள்ள வேண்டும். 


கால மாற்றங்கள் வரும். நம் நூல்கள் அவற்றை அனுமதிக்கும். 


நீண்ட நாள் உள்ள ஒரு  பழக்கத்தை, ஒரு ஒழுக்கத்தை மாற்றலாமா என்றால் மாற்றலாம். ஆனால், யார் மாற்றுவது ?


கற்றறிந்த அறிஞ்ர்கள், ஒழுக்கத்தில் உயர்ந்த ஆன்றோர், முற்றும் துறந்த துறவோர் அவற்றை மாற்றலாம். அவர்களுக்கு அந்த உரிமை உண்டு. 


ஆனால், இப்போது என்ன நடக்கிறது, நமக்கு கீழே உள்ளவன் , நம்மை விட குறைவாக படித்தவன், ஒழுக்கக் குறைவு உள்ளவன் செய்வதைப் பார்த்து, அது தான் சரி என்று  நாம் பின்பற்றத் தொடங்கி விடுகிறோம்.  

 

உங்களை விட உயர்வானவர்களை நோக்குங்கள். அவர்கள் சொல்வதை கேளுங்கள். 


அறத்துக்கு இரண்டு கூறு சொல்கிறார். 


ஒன்று செய்வது, இன்னொன்று செய்யாமல் விடுவது. 


செய்வது கடினம். செய்யாமல் இருப்பதில் என்ன கஷ்டம்?


கள்ளுண்ணாதே , திருடாதே, பொய் பேசாதே என்கிறார். 


பேசாமல் இருந்தால் போதும், பாதி அறம் வந்து விடும். பேசினால்தானே மெய்,பொய் என்று வரும். பேசாமல் இருந்து விட்டால் ? 

திருட்டு,பிறன் மனை விழைதல், கள் உண்ணுதல் என்ற அறப் பிழையும் வராது. 


மனு முதலிய நூல்களில் உள்ளது என்று சொல்லுவது எளிது. எத்தனை புத்தகங்கள் இருக்கின்றன? அதை எல்லாம் படித்து அதன் படி நடப்பது என்பது முடிகிற காரியமா?


முடியாது தான். அதனால் தான் வள்ளுவர், அவற்றை எல்லாம் தொகுத்து ஒரே புத்தகத்தில் தருகிறார். இதைப் படித்து அதன் படி நடந்தால் போதும். 


அறம் என்றால் என்ன என்று தேடி அலைய வேண்டாம். திருக்குறளில் எல்லா அறமும் இருக்கிறது. 


இதை மட்டும் பின் பற்றினால் போதும். 


எவ்வளவு பெரிய வேலையை செய்திருக்கிறார் வள்ளுவர்!


வாருங்கள் மேலும் படிப்போம். 




4 comments:

  1. வணக்கம் ...
    நன்றி ஐயா......அருமை

    ReplyDelete
  2. ""உங்களை விட உயர்வானவர்களை நோக்குங்கள். அவர்கள் சொல்வதை கேளுங்கள்."". For me just this blog is enough. விடாமல் படிப்பது என்று முடிவு பன்னி விட்டேன் :)

    ReplyDelete
  3. You have walked deftly on thin ice to define what is அறம் and explained finally for modern times the universally accepted Thirukkural provides the answers. That also happens to be our subject under discussion. We may even find a few of the ethical values in kural may not find ready acceptance now. Looking forward to the interesting posts ahead.

    ReplyDelete
  4. 1. "மனு முதலிய நூல்கள்" என்று எழுதி விட்டார். ஒரு நூல் அந்த வகையில் வருமா, அதை படிக்கலாமா, படித்தபடி நடக்கலாமா என்பதை யார் முடிவு செய்வது?

    2. அந்த மாதிரி சிறந்த நூல்களில் திருக்குறள் அடங்கும் என்று பரிமேலழகர் சொல்லவில்லை போலும். அவர் உரை எழுதியிருப்பதால், சிறந்த நூல்கள் வரிசையில் திருக்குறளும் வரலாம் என்று கொள்ள வேண்டும் போலும். அனால், திருக்குறள் மட்டுமே போதும் என்று எப்படிக் கொள்வது?

    மிக்க நன்றி.

    ReplyDelete