Pages

Wednesday, March 24, 2021

திருக்குறள் - கடவுள் வாழ்த்து - அதிகாரப் பாயிரம் - பாகம் 1

திருக்குறள் - கடவுள் வாழ்த்து - அதிகாரப் பாயிரம் - பாகம் 1 


இப்போது நூலுக்குள் நுழைகிறோம்.  


எடுத்துக் கொண்ட காரியம் இனிதே முடிதற் பொருட்டு இறை வணக்கம் கூறுகிறார் என்று உரைப் பாயிரத்தை முடித்த பரிமேலழகர், இப்போது முதல் அதிகாரமான இறை வணக்கத்தை எடுத்துக் கொள்கிறார். 


உரை 


"அஃதாவது, கவி தான் வழிபடு கடவுளையாதல், எடுத்துக்கொண்ட பொருட்கு ஏற்புடைக் கடவுளையாதல் வாழ்த்துதல். அவற்றுள், இவ்வாழ்த்து ஏற்புடைக் கடவுளை என அறிக. என்னை? சத்துவ முதலிய குணங்களான் மூன்றாகிய உறுதிப்பொருட்கு அவற்றான் மூவராகிய முதற்கடவுளரோடு இயைபுண்டாகலான். அம்மூன்று பொருள்களையும் கூறலுற்றார்க்கு அம் மூவரையும் வாழ்த்துதல் முறைமையாகலின், இவ்வாழ்த்து அம்மூவர்க்கும் பொதுப்படக் கூறினார் என உணர்க."


https://interestingtamilpoems.blogspot.com/2021/03/1_24.html


(click the above link to continue reading)


சொன்னால் நம்பனும். இது தமிழ்தான். 


அந்தக் காலத்துத் தமிழ். கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கும். 


எளிமைப் படுத்துவோம். 


""அஃதாவது, கவி தான் வழிபடு கடவுளையாதல், எடுத்துக்கொண்ட பொருட்கு ஏற்புடைக் கடவுளையாதல் வாழ்த்துதல்."


கடவுள் வாழ்த்து என்பது இரண்டு வகைப்படும்.  


முதலாவது, கவிஞன் தான் வழிபடுகின்ற கடவுளை வாழ்த்தி கடவுள் வாழ்த்துப் பாடலாம். 


அல்லது 


எடுத்துக் கொண்ட நூலுக்கு ஏற்புடைய கடவுளை வாழ்த்தி கடவுள் வாழ்த்துப் பாடலாம். 



உதாரணமாக, ஒரு எழுத்தாளன் "பணக்காரர் ஆவது எப்படி" என்று நூல் எழுதிறார் என்று வைத்துக் கொள்வோம்.  செல்வத்தின் தெய்வம் இலக்குமி. எனவே, இலக்குமியை வாழ்த்திப் பாடினால் அது "எடுத்துக் கொண்ட பொருளுக்கு ஏற்புடைய தெய்வம்" ஆகும். 



மாறாக, எழுத்தாளனுக்கு பிடித்த கடவுள் அபிராமி என்று வைத்துக் கொள்வோம். அபிராமியை வாழ்த்திப் பாடினால் அது கவி தான் வழிபடுகின்ற தெய்வத்துக்கு சொன்ன துதி என்று ஆகும். 



இங்கே, திருவள்ளுவர் எந்த கடவுளை துதி செய்கிறார் என்ற கேள்வி பிறக்கும். 



தனக்கு ஏற்புடைய கடவுள் என்றால், திருவள்ளுவர் இன்ன மதம், இன்ன ஜாதி என்று அவருக்கு ஒரு அடையாளம் வந்து விடும். மற்ற மதம், ஜாதி சேர்ந்தவர்கள் அவரை படிக்காமல் விட்டு விடலாம். கம்பரை வைணவர் என்று சொல்லி அவரை படிக்காமல் விட்ட கூட்டம் இன்றும் இருக்கிறது. 


திருவள்ளுவர் சைவமா, வைணவமா, சமணமா , புத்த மதமா என்ற சர்ச்சை எழும். 



சரி இஷ்ட தெய்வம் இல்லை, நூலுக்கு ஏற்புடைய தெய்வம் என்று கொண்டால், அது எந்த தெய்வம் என்ற கேள்வி வரும்.  அறத்துக்கு ஏற்ற தெய்வமா, பொருளுக்கு ஏற்ற தெய்வமா, அல்லது இன்பத்துக்கு ஏற்ற தெய்வமா என்ற கேள்வி வரும் ஏன் என்றால், குறளில் மூன்றும் இருக்கிறது.  



எது ஏற்புடைய தெய்வம்.



எந்தப் பக்கம் போனாலும் சிக்கல். 



பேசாமல் கடவுள் வாழ்த்தே சொல்லாமல் விட்டு விட்டால் என்ன என்று கூடத் தோன்றும். 



கடவுள் வாழ்த்தும் சொல்ல வேண்டும். அதே சமயம் அதனால் நூலுக்கு ஒரு சமய, ஜாதி முலாம் பூசப்படக் கூடாது. 



என்ன செய்வது ?

3 comments:

  1. இக்கட்டான விஷயம் தான்! அதை எப்படி கையாளுகிறார என்பதை அடுத்த பதிவில் எதிர் பார்த்து கொண்டு இருக்கிறோம்

    ReplyDelete
  2. கடவுள் வாழ்த்தினை பரிமேலழகர் சொன்னதை நம் ஐயா எப்படி சொல்வார் , எப்படியெல்லாம் காட்டுவார் என மனம் ஆவலாகி காத்துள்ளது .....

    இரண்டாம் அழகர் அல்லவா!
    வாழ்க வாழ்க ...

    ReplyDelete
  3. சூட்சுமமான உரை. எவ்வளவு ஆழமாக யோசித்து எழுதியிருக்கிறார் என்று வியக்க வைக்கிறது.

    ReplyDelete