Pages

Saturday, March 27, 2021

திருக்குறள் - கடவுள் வாழ்த்து - அகர முதல - பாகம் 2

திருக்குறள் - கடவுள் வாழ்த்து - அகர முதல - பாகம் 2 




பாடல் 

அகர முதல எழுத்து எல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு.


பொருள் 

இதன் முதல் பாகத்தை கீழே உள்ள இணைய தளத்தில் காணலாம். 

https://interestingtamilpoems.blogspot.com/2021/03/1_26.html


இங்கே "அகர முதல" என்பதில் முதல் என்றால் என்ன? முதல் எழுத்தாக இருக்கிறது என்று அர்த்தமா ?


இல்லை. 


"நான் வகுப்பில் முதலாவதாக வருவேன்" என்றால், பத்து மணி வகுப்புக்கு எட்டு மணிக்கே போய் உட்கார்ந்து கொள்வது அல்ல முதலாவதாக வருவது. படிப்பில், விளையாட்டில், திறமையில் முதலாவதாக வருவது. அதாவது முதன்மை பண்பு இருக்க வேண்டும். 


அப்படி இந்த அ என்ற எழுத்துக்கு என்ன முதன்மை பண்பு இருக்கிறது? மற்ற எழுத்துகளுக்கு இல்லாத ஒரு சிறப்பு அகரத்துக்கு என்ன இருக்கிறது? 


அதற்கு முன்னால், இறைவன், கடவுள் பற்றிய தர்க்கம் எழும் போது கடவுளை நம்புபவர்கள் சொல்லுவது "ஒரு பொருள் இருக்கிறது என்றால் அதை செய்த ஒருவன் இருக்க வேண்டும் அல்லவா? அது போல இந்த உலகம் இருக்கிறது என்றால் அதை தோற்றுவித்தவன் ஒருவன் இருக்க வேண்டும் அல்லவா" என்பது அவர்கள் வாதம். 


அதற்கு எதிர் வாதம் செய்பவர்கள் சொல்வது, "எதற்குமே ஒரு காரிய கர்த்தா வேண்டும் என்றால், இறைவனை தோற்றுவித்தவர் யார்" என்று வாதம் செல்லும். இறைவன் தானகவே தோன்றி விட்டான் என்றால் இந்த உலகமும் தானாகவே தோன்றி விட்டது என்று ஏன் சொல்லக் கூடாது என்ற கேள்வி வரும். 


இப்போது அகரத்துக்கு வருவோம். 


https://interestingtamilpoems.blogspot.com/2021/03/2_27.html


(click the above link to continue reading)


ஒவ்வொரு எழுத்தையும் எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதற்கு ஒரு இலக்கணம் இருக்கிறது. நினைத்த மாதிரி எல்லாம் உச்சரிக்க முடியாது. அதற்கென்று ஒரு வரை முறை இருக்கிறது. 


ஒலி தோன்ற மூன்று வேண்டும். காற்று வெளிப்பட வேண்டும். அப்புறம் அசையும் உறுப்புகள், அசையா உறுப்புகள் என்ற இரண்டு வேண்டும். 


நாக்கு, உதடு, கீழ் தாடை - அசையும் உறுப்பு. 


பல், மேல் அன்னம் - அசையா உறுப்பு. 


தொண்டையில் இருஇருந்து வரும் காற்றை இந்த உறுப்புகளின் மூலம் நாம் வேறு படுத்தலாம். அப்போது வேறு வேறு ஒலி உண்டாகும். 


வாயைத் திறந்தாலே போதும், அ என்ற ஓசை வந்து விடும் என்கிறது நன்னூல் சூத்திரம். 


அவற்றுள்  

முயற்சியுள் அஆ அங்காப்புடைய (நன்னூல்-76) 


அங்காப்பு என்றால் வாயைத் திறப்பது. 


மற்ற ஒலிகளுக்கு வாயை குவிக்க வேண்டும் (உ) உதட்டை விரிக்க வேண்டும் (ஈ), நாக்கை மடிக்க வேண்டும் (ழ). 


(இ, ஈ, எ, ஏ, ஐ அங்காப்போடு 

அண்பல் முதல்நா விளிம்புற வருமே. (நன்னூல்-77)


உ, ஊ, ஒ, ஓ, ஔ இதழ் குவிவே.(நன்னூல்-78)


என்று ஒவ்வொரு எழுத்தும் எப்படி உச்சரிக்க வேண்டும் என்று இலக்கணம் இருக்கிறது. ஆர்வம் உள்ளவர்கள் மேற்கொண்டு நன்னூலில் காண்க) 


 உறுப்புகளின் உராய்வில் உண்டாவது தான் மற்ற எழுத்துக்கள். ஆனால் அ என்ற ஓசை மட்டும் எந்த உறுப்பும் உராய்வு இல்லாமல் தானே வெளிப்படும். 


எனவே அ என்ற எழுத்துக்கு முதன்மை இடம். அது தானே தோன்றும். 


சரி, தானே தோன்றியது மட்டும் அல்ல,  பிற உறுப்புகளின் துணை கொண்டு ஏனைய எழுத்துகளை உண்டாக்கும். 


எனவே அகரத்துக்கு முதலிடம். 


அந்த அகரம் போல, இறைவன் தானே தோன்றி, மற்றவற்றையும் தோற்றிவிப்பான். 


எனவே, அகரத்தைச் சுட்டி, அதுபோல இறைவன் உலகுக்கு முதலானவன் என்றார். 


இந்த குறளை உற்று நோக்கினால் ஒன்று புரியும் 


முதல் வரிக்கும், இரண்டாவது வரிக்கும் ஒரு ஒரு தொடர்பும் இல்லை. 


அகர முதல எழுத்து எல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு.


இப்படி ஒன்றுக்கு ஒன்று தொடர்பு இல்லாமல் இரண்டு வரியை வள்ளுவர் எழுதுவாரா?


சிந்திப்போம். 

 


2 comments:

  1. This is looking like kalaidascope. Every twist gives different, intricate, deep, unique... Meaning. Seeing those and explaining to others is not an easy job. Thanks to your blog we are also enjoying the intricate patterns.

    ReplyDelete
  2. அருமையான விளக்கங்களோடு தொடர்கிறீர்கள் ...

    பேராசிரியர் திரு நமசிவாயம் கண்டது போல உள்ளது ஐயா

    ReplyDelete