Friday, March 26, 2021

திருக்குறள் - கடவுள் வாழ்த்து - அகர முதல - பாகம் 1

 திருக்குறள் - கடவுள் வாழ்த்து - அகர முதல - பாகம் 1 


இப்போது முதல் குறளுக்குப் போகிறோம். எல்லோரும் அறிந்தது தான். 


பாடல் 

அகர முதல எழுத்து எல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/03/1_26.html

(click the above link to continue reading)


அகர முதல = அகரத்தை முதலாகக் கொண்டது 

எழுத்து எல்லாம்  = எல்லா எழுத்துக்களும் 

ஆதி பகவன் = ஆதி பகவனை 

முதற்றே உலகு. = முதலாகக் கொண்டது இந்த உலகம். 


இவ்வளவுதான் இந்த குறளுக்கு பொருள். இதற்குள் புதைந்து கிடக்கும் நுட்பம் நம்மை வியக்க வைக்கிறது. 


எழுத்துக்கு அகரம் எப்படி முதலோ அது போல உலகுக்கு இறைவன் முதல். 


இதில் என்ன ஆழம் இருந்து விடப் போகிறது?


இறைவன் என்றால் யார்? அவன் எப்படி இருப்பான் ? அவன் தொழில் என்ன? அவனை எப்படி நாம் அறிந்து கொள்வது? எப்படி அவனைப் பற்றி சிந்திப்பது ? என்பது போன்ற கேள்விகளுக்கு விடை தருகிறார் வள்ளுவர். 


தெரியாத ஒன்றை, காணாத ஒன்றை எப்படி விளக்குவது ? தெரிந்த ஒன்றைச் சொல்லி, தெரியாததை விளங்கச் செய்ய வேண்டும். 


உதாரணமாக, ஒரு சிறுவன், புலியை பார்த்ததே இல்லை. புலி எப்படி இருக்கும் என்று கேட்கிறான்.  அவனுக்கு எப்படி சொல்வது?


"நீ பூனை பார்த்து இருக்கிறாய் அல்லவா? புலி என்பது ஒரு பெரிய பூனை மாதிரி இருக்கும்" என்று சொல்லி விளங்கச் செய்வது போல. 


இறைவனின் தன்மை என்ன என்று கேட்டால், மொழிக்கு அகரம் எப்படியோ உலகுக்கு இறைவன்.


மொழிக்கு அகரம் எப்படி என்றால் என்ன அர்த்தம்? அது தெரிந்தால் அல்லவா உலகுக்கு இறைவன் எப்படி என்று அறிந்து கொள்வது.


உலகிலே எத்தனையோ மொழிகள் இருக்கின்றன. மொழி என்பது எழுத்து, சொல், வாக்கியம், இலக்கணம் இவற்றால் புனையப் படுவது. 


மொழிகள் வரி வடிவம், ஒலி வடிவம் என்ற இரண்டு பகுதிகளைக் கொண்டது.  சில மொழிகளுக்கு வரி வடிவம் கிடையாது. ஒலி வடிவம் மட்டும் தான் உண்டு. 


ஒலி தான் ஜீவ நாடி. வரி வடிவம் இல்லாமல் கூடப் போகலாம். அல்லது காலப் போக்கில் மாறியும் போகலாம். இன்று திருவள்ளுவர் நேரில் வந்தால், அவரிடம் திருக்குறளைக் கொடுத்து வாசிக்கச் சொன்னால் அவரால் முடியாது. காரணம், அவர் காலத்தில் இருந்த வரிவடிவம் மாறிப் போய் விட்டது. ஆனால் ஒலி வடிவம் மாறாமல் அப்படியே இருக்கிறது. 


"அகர முதல எழுத்து" என்றால் எல்லா எழுத்தும் (மொழியும்) நம் "அ" வன்னா போல இருக்காது. ஹிந்தியில் உள்ள அகரம் வேறு மாதிரி இருக்கும். ஆங்கிலத்தில் உள்ள 'A" வேறு மாதிரி இருக்கிறது. 


ஆனால், அவற்றின் ஒலி வடிவம் "அ" என்ற சத்ததிலேயே பிறக்கிறது. 


அதை ஆதி நாதம் என்று சொல்லுவார்கள். 


உலகில் உள்ள எல்லா மொழியும் 'அ' என்ற சப்த்தத்தில் இருந்துதான் பிறக்கின்றன. எப்படி உலகில் உள்ள எல்லா மொழிக்கும் அ என்ற சப்த்தம் அடிப்படையாக இருக்கிறதோ, அது போல அனைத்து உலகுக்கும் இறைவன் அடிப்படை என்கிறார். 


அகர முதல எழுத்து "எல்லாம்" 


என்று கூறினார். "எல்லாம்" என்றால் அனைத்து எழுத்துகளுக்கும் அ தான் அடிப்படை. அதில் விதி விலக்கே கிடையாது. 


எழுத்துக்கு அகரம் எப்படி தலைமையோ அது போல உலகுக்கு இறைவன் தலைவன் என்றார். 


அ என்ற சப்தத்தை மட்டும் வைத்துக் கொண்டு அது தான் தலைமை என்று எப்படி சொல்ல முடியும்?


மேலும் சிந்திக்க இருக்கிறோம். 






3 comments:

  1. நன்றாக சொல்லிக்கொண்டு போகிரீர்கள் ஐயா ....
    அருமை ......வணக்கம் .மகிழ்ச்சி...

    ReplyDelete
  2. அதி அற்புதமாக புரியும்விபடியாக விளக்கி உள்ளீர்கள். நன்றி.

    ReplyDelete
  3. "அ" என்ற எழுத்தில் இருந்து தொடங்குவது தமிழுக்கு உண்மை, எல்லா மொழிகளுக்கும் அல்ல. உதாரணமாக, சீன மொழிக்கு எழுத்து வரிசை (alphabet ) கிடையாது.

    ReplyDelete