Wednesday, March 17, 2021

திருக்குறள் - உரைப்பாயிரம் - பாகம் 3

 திருக்குறள் - உரைப்பாயிரம் - பாகம் 3 


வாழ்வின் நோக்கம் என்ன ? (வீடு பேறு அடைவது)

அதை அடையும் வழி என்ன ? (அறம் பொருள் இன்பம் வீடு என்ற வழி)

அதில் வீடு பற்றி வள்ளுவர் ஏன் சொல்லவில்லை (அது சிந்தையும், சொல்லும் செல்லா இடத்தது என்பதாலும், துறவறம் நோக்கிய காரண வகையால் அறிந்து கொள்ளலாம் என்பதால்)


அதில் அறம் என்றால் என்ன (மனு முதலிய நூல்களில் விதித்தவற்றை செய்தாலும், விலக்கியவற்றை விலக்குதலும் ).


என்பது வரை முந்தைய மூன்று ப்ளாகுகளில் பார்த்தோம். 

இப்போது, அறம் , பொருள் இன்பம் என்ற மூன்றில் அறம் என்றால் என்ன என்று எடுத்துக் கொள்கிறார். 


"அஃது ஒழுக்கம், வழக்கு, தண்டம் என மூவகைப்படும்."


அறத்துக்கு மூன்று கூறுகள். 


அதாவது, ஒழுக்கம், வழக்கு, தண்டனை என்பது. 


சரி, ஒழுக்கம் என்றால் என்ன என்று அடுத்து சொல்ல வருகிறார். 

எப்படி ஒரு ஆற்றோட்டம் போல அவர் எழுதுகிறார் என்று பாருங்கள். 

ஒவ்வொரு படியாக எடுத்து வைக்கிறார். எழுதினால் இப்படி எழுத வேண்டும். 


"அவற்றுள் ஒழுக்கமாவது அந்தணர் முதலிய வருணத்தார் தத்தமக்கு விதிக்கப்பட்ட பிரமசரிய முதலிய நிலைகளினின்று அவ்வவற்றிற்கு ஓதிய அறங்களின் வழுவாது ஒழுகுதல்."


https://interestingtamilpoems.blogspot.com/2021/03/3.html

(click the above link to continue reading)


இரண்டு வார்த்தைகளை கவனியுங்கள் - ஒன்று "வருணத்தார்" , இன்னொன்று "நிலைகள்" 

அது என்ன வர்ணம், நிலை ?

இங்கு வர்ணாசிரம தர்மத்தை ஒரு வரியில் சொல்லி விட்டுப் போகிறார். மிகப் பெரிய விடயம். நிதானமாக விளங்குவோம். 

"அந்தணர் முதலிய வருணத்தார் " என்று கூறும் போது அந்தணர் தவிர வேறு வர்ணங்களும் இருக்கின்றன என்று நமக்குப் புரிகிறது. அவை என்னென்ன என்ற கேள்வி அடுத்தது வரும். 


"பிரமசரிய முதலிய நிலைகளினின்று" பிரமச்சரிய முதலிய நிலை என்றால் இன்னும் பல நிலைகள் இருக்கின்றது என்று அர்த்தம். அவை என்னென்ன? 


இந்த வர்ணம் + நிலை தான் வர்ணாசிரம தர்மம் என்று கூறப் பட்டது.  அது ஒரு ஒழுங்கு முறை. வாழ்கை நெறி. 


இன்று வர்ணாசிரம தர்மம் என்றால் ஏதோ ஒரு தீண்டத்தகாத வார்த்தை என்பது போல் ஆகிவிட்டது. 


"காய்த்தல் உவத்தில் இன்றி ஒரு பொருட்கண் ஆய்தல் அறிவுடையார் கடன்". 

நமக்கு பிடிக்கிறதோ இல்லையோ, நம்மால் ஒத்துக் கொள்ள முடிகிறதோ இல்லையோ, அது என்ன என்று முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். தெரிந்து கொள்ளாமலேயே ஒன்று சரி அல்லது தவறு என்று எப்படி முடிவு செய்வது? 


இந்த வர்ணம் + நிலை பற்றி அடுத்த ப்ளாகில் சிந்திக்க இருக்கிறோம். 








1 comment:

  1. பல வேறு கருத்துகள் கொண்ட ஒரு விஷயத்தை நயம் பட விளக்கி உள்ளீர்கள்.

    ReplyDelete