Thursday, March 25, 2021

திருக்குறள் - கடவுள் வாழ்த்து - அதிகாரப் பாயிரம் - பாகம் 2

 

திருக்குறள் - கடவுள் வாழ்த்து - அதிகாரப் பாயிரம் - பாகம் 2


இப்போது நூலுக்குள் நுழைகிறோம்.  


எடுத்துக் கொண்ட காரியம் இனிதே முடிதற் பொருட்டு இறை வணக்கம் கூறுகிறார் என்று உரைப் பாயிரத்தை முடித்த பரிமேலழகர், இப்போது முதல் அதிகாரமான இறை வணக்கத்தை எடுத்துக் கொள்கிறார். 


உரை 


"அஃதாவது, கவி தான் வழிபடு கடவுளையாதல், எடுத்துக்கொண்ட பொருட்கு ஏற்புடைக் கடவுளையாதல் வாழ்த்துதல். அவற்றுள், இவ்வாழ்த்து ஏற்புடைக் கடவுளை என அறிக. என்னை? சத்துவ முதலிய குணங்களான் மூன்றாகிய உறுதிப்பொருட்கு அவற்றான் மூவராகிய முதற்கடவுளரோடு இயைபுண்டாகலான். அம்மூன்று பொருள்களையும் கூறலுற்றார்க்கு அம் மூவரையும் வாழ்த்துதல் முறைமையாகலின், இவ்வாழ்த்து அம்மூவர்க்கும் பொதுப்படக் கூறினார் என உணர்க."

இதன் முதல் பாகத்தை கீழே உள்ள இணைய தளத்தில் காணலாம். 

https://interestingtamilpoems.blogspot.com/2021/03/1_24.html


இப்போது வள்ளுவர் தான் வழிபடுகின்ற கடவுளுக்கு வாழ்த்துக் கூறினாரா அல்லது எடுத்துக் கொண்ட பொருளுக்கு ஏற்ற கடவுளுக்கு வாழ்த்துக் கூறினாரா என்ற கேள்வியோடு முந்தைய ப்ளாக் நின்றது. 


தொடர்வோம். 


அவற்றுள், இவ்வாழ்த்து ஏற்புடைக் கடவுளை என அறிக. என்னை?


பரிமேலழகர் கூறுகிறார், வள்ளுவர் பாடியது ஏற்புடைய கடவுளை தான் என்கிறார். 


என்று சொன்னது மட்டும் அல்லாமல், "என்னை?" என்று கேள்வியும் எழுப்புகிறார். 


அந்த கேள்விக்கு பதில் தெரியும் முன்னால், நாம் இன்னொன்றை தெரிந்து கொள்ள வேண்டும். 


https://interestingtamilpoems.blogspot.com/2021/03/2_25.html


(click the above link to continue reading)


மனித மனம் மூன்று வித நிலைகளால் ஆனது - சாத்வீகம், தாமசம், ராஜசம் என்ற முக்குண கலவை தான் மனித மனம். 


மனித மனம் மட்டும் அல்ல, இந்த உலகம் அனைத்துமே இந்த மூன்று குண கலவைகளால் ஆனது என்கிறார்கள். 


நாம் நினைக்கிறோம் பொருள்களுக்கு குணம் உண்டு என்று. 


மல்லிகை என்ன்றால் வெள்ளையாக இருக்கும், புலி என்றால் பாயும், மீன் என்றால் நீந்தும், வீணை என்றால் நல்ல இசை தரும் என்று நாம் நினைக்கிறோம். 


ஆழமான செய்தி என்ன என்றால், குணங்கள் பொருளில் புதைந்து கிடக்கவில்லை. குணங்களின் தொகுதிதான் பொருள்கள்.  


உதாரணமாக, மல்லிகையில் இருந்து வெண்மை என்ற குணத்தை எடுத்து விடுவோம், மென்மை என்ற குணத்தை எடுத்து விடுவோம், இனிய மணத்தை எடுத்து விடுவோம்,  பச்சை நிறம் என்ற அதன் காம்பின் குணத்தை எடுத்து விடுவோம். பின் என்ன நிற்கும்? எது நின்றாலும், அது மல்லிகையாக இருக்காது அல்லவா?


குணங்களின் தொகுதி தான் பொருள்கள், நீங்கள், நான் மற்றும் இந்த பிரபஞ்சம் அனைத்தும். 


குணங்கள் என்று எடுத்துக் கொண்டால், சுவை என்ற குணம் ஆறு பகுதிகளை கொண்டது. இசை என்ற குணம் ஏழு ஸ்வரங்களை கொண்டது என்று பகுக்கிறோம். 


இவை அனைத்துக்கும் அடிப்படையாக இருப்பது சாத்வீகம், தாமசம், ரஜோ என்ற இந்த மூன்று குணங்கள் தான் என்கிறார்கள். 


இந்த மூன்று குணங்களும் பல்வேறு விதமாக பாதிக்கப் படுகிறது. நாம் உண்கின்ற உணவு, விடும் மூச்சு, அருந்தும் பானங்கள், போன்றவை இந்த மூன்று குணங்களை பாதிக்கின்றன.


இந்த மூன்று குணங்களுக்கும் நிறங்களுக்கும் ஒரு தொடர்பு உண்டு. 


சாத்வீகம் - வெள்ளை நிறம். 

ராஜசம் - சிவப்பு நிறம் 

தாமசம் - கறுப்பு நிறம். 


சரி இந்த கதை எல்லாம் எதுக்கு? அதுக்கும் இந்த குறளுக்கும் என்ன சம்பந்தம்?


சம்பந்தம் இருக்கிறது. 


"சத்துவ முதலிய குணங்களான் மூன்றாகிய உறுதிப்பொருட்கு அவற்றான் மூவராகிய முதற்கடவுளரோடு இயைபுண்டாகலான்."


அதாவது, சத்துவம் (சாத்வீகம்) முதலிய குணங்களால் உறுதிப் பொருள்களுக்கு அவற்றிற்கு தொடர்பு உடைய முதற் கடவுள் இருக்கிறது. 


இதை சற்று விளங்குவோம். 


இந்த மூன்று குணங்களுக்கும் மூன்று கடவுள்களை தொடர்பு படுத்திச் சொல்கிறார்கள். 


சாத்வீகத்திற்கு பிரமன் 

ராஜசத்துக்கு திருமால் 

தாமசத்துக்கு உருத்திரன் 


அது எப்படி சொல்ல முடியும்? எங்க கடவுளை அந்த ஒரு குணத்தோடு எப்படி தொடர்பு படுத்திச் சொல்லலாம். எங்க ஆள் எல்லாத்துக்கும் அவர் தான் தலைவர் என்று ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் கடவுளை பற்றி அப்படித்தான் சொல்வார்கள். 


குணங்கள் என்பது சக்தியின் வெளிப்பாடு. 


இப்போது நம் கடவுள்கள் அணிந்திருக்கும் உடைகளைப் பாருங்கள். அவர்கள் இருக்கும் இடம், அவர்களது வாகனம் முதலியவற்றை பாருங்கள். 


சரஸ்வதி - வெள்ளை ஆடை உடுக்கிறாள். வெண் தாமரை மலரில் இருக்கிறாள். வெண்மையான அன்னத்தின் மேல் இருக்கிறாள். கல்விக்கு அவள் தான் கடவுள். அது சாத்வீக சக்தி. அந்த சக்தியின் துணைவர் பிரமன். 


இலக்குமி - சிவந்த ஆடை உடுத்துகிறாள் -  சிவந்த தாமரை மலரில் வசிக்கிறாள். ஆடை ஆபரணங்கள் என்று இருக்கிறாள்.  செல்வத்தை தருகிறாள். அது ரஜோ குணம். அந்த சக்தியின் துணைவர் திருமால். 


சக்தி - காளி, சூலம் கையில் ஏந்தி நிற்கிறாள். சிம்ம வாகனம். கையில் வெட்டிய தலை. அழிக்கிறாள். அது தமோ குணம். அவளின் துணைவர் உருத்திரன். 


எனவே, மூன்று குணங்களுக்கும் மூன்று முதல் தெய்வங்கள் இருக்கிறார்கள். 


"அம்மூன்று பொருள்களையும் கூறலுற்றார்க்கு"


வள்ளுவர் சொல்லப் புகுந்தது என்ன ? 


அறம், பொருள், இன்பம்


அறம் - சாத்வீக குணம். 

பொருள் = ராஜச குணம். 

இன்பம் = காமம் தாமச குணம்.


எனவே அவர் எடுத்துக் கொண்ட பொருளும் இந்த முக்குண தொடர்பு உடையவை. 


"அம் மூவரையும் வாழ்த்துதல் முறைமையாகலின், இவ்வாழ்த்து அம்மூவர்க்கும் பொதுப்படக் கூறினார் என உணர்க."


எனவே அந்த மூன்று கடவுள்களையும் பொதுவாகக் கூறினார் என்று கொள்க என்று பரிமேலழகர் முடிக்கிறார். 


மீண்டும் ஒரு முறை படியுங்கள் - நிதானமாக - எவ்வளவு ஆழமாக சிந்தித்து இருக்கிறார்கள் என்று புரியும். 


இனி அடுத்த ப்ளாகில் முதல் குறளுக்குள் போவோம். 







No comments:

Post a Comment