Pages

Sunday, March 21, 2021

திருக்குறள் - பரிமேலழகர் உரைப்பாயிரம் - இறுதிப் பாகம்

திருக்குறள் - பரிமேலழகர் உரைப்பாயிரம் -  இறுதிப் பாகம் 


பரிமேலழகரின் உரைப் பாயிரம் எப்படி ஒரு அழகான நீரோடை போல் செல்கிறது என்று பாருங்கள். 


வாழ்கைக்குத் தேவையான நான்கு  - அறம், பொருள், இன்பம், வீடு 

அதில் வீட்டினை நேரே சொல்லி விளக்க முடியாது என்பதால், அதை சொல்லாமல், அறம் , பொருள், இன்பம் பற்றி மட்டும் கூற எடுத்துக் கொள்கிறார்.


அதில், அறம் என்பது மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தாலும், விலக்கியன ஒழித்தலும் என்றார். 


அவ்வறமானது , ஒழுக்கம், வழக்கு, தண்டம் என்ற மூன்று கூறுகளை கொண்டது என்றார். 

இதில் வழக்கு, தண்டம் என்பது பற்றி முந்தைய ப்ளாகில் பார்த்தோம். 


இப்போது மேலே செல்வோம். 


"இவற்றுள் வழக்குந் தண்டமும் உலகநெறி நிறுத்துதற் பயத்தவாவதுஅல்லது ஒழுக்கம் போல மக்களுயிர்க்கு உறுதி பயத்தற் சிறப்பிலவாகலானும், அவைதாம் நூலானேயன்றி உணர்வுமிகுதியானுந் தேயவியற்கையானும் அறியப்படுதலானும், அவற்றை ஒழித்து, ஈண்டுத் தெய்வப்புலமைத் திருவள்ளுவராற் சிறப்புடைய ஒழுக்கமே அறமென எடுத்துக்கொள்ளப்பட்டது."


ஒரே வரியில் சொல்லி விட்டுப் போய்விட்டார். 

நாம் பிரித்து பொருள் கொள்வோம். 


https://interestingtamilpoems.blogspot.com/2021/03/blog-post_21.html

(please click the above link to continue reading)

என்ன சொல்ல வருகிறார் என்றால், இந்த மூன்றில் , வழக்கையும் தண்டத்தையும் பற்றி வள்ளுவர் கூறவில்லை.  ஏன் கூறவில்லை என்பதற்கு பரிமேலழகர் விளக்கம் கூறுகிறார். 

முதற் காரணம்: 

"இவற்றுள் வழக்குந் தண்டமும் உலகநெறி நிறுத்துதற் பயத்தவாவது அல்லது "


இந்த மூன்றில் (ஒழுக்கம், வழக்கு, தண்டம் என்ற மூன்றில்) வழக்கும், தண்டமும் இந்த உலகில் நம்மை நெறிப் படுத்த உதவும். அவ்வளவுதான். அதைத் தவிர வேறு ஒன்றும் செய்யாது .

அதாவது, இம்மைக்கும், மறுமைக்கும் அவை உதவி செய்யாது. ஒருவர் மேல் வழக்கு போடுகிறோம். அதை வெல்கிறோம். மற்றவனுக்கு தண்டனை கிடைக்கிறது. இதனால், நமக்கு இந்த உலகில், வாழ்வில் ஒரு சிறு நன்மை கிடைக்கலாம். ஆனால், அது நமக்கு வீடு பேறு அடையவோ, இறைவன் அடி சேரவோ உதவாது. அது முதல் காரணம். 

இரண்டாவது காரணம். 

"ஒழுக்கம் போல மக்களுயிர்க்கு உறுதி பயத்தற் சிறப்பிலவாகலானும்"

வழக்கும் தண்டமும், ஒழுக்கத்தைப் போல மக்களுடைய உயிர்க்கு உறுதி பயக்காது. உறுதி என்றால் நன்மை. அந்த சிறப்பு கிடையாது அவற்றிற்கு. 


"அவைதாம் நூலானேயன்றி உணர்வுமிகுதியானுந் தேயவியற்கையானும் அறியப்படுதலானும்"


மேலும், வழக்கு தண்டம் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. ஒரு வழக்கு என்று வருகிறது என்றால், தவறு செய்தவனுக்குத் தெரியும் அல்லவா, தான் தவறு செய்து விட்டான் என்பது. 


உணர்வு மிகுதியால் தவறு அவனுக்கே தெரியும் என்கிறார். ஒருவன் பொய் சொல்கிறான் என்றால், அவனுக்கு நல்ல உணர்சிகள் இருந்தால், அவன் மனமே அவனுக்குச் சொல்லும், அது தவறு என்று.  அதைத்தான் "உணர்வு மிகுதியான்" என்றார். அதுவே பழகிப் போய் விட்டால், பின் தோன்றாது. 


மேலும் 


"தேய இயற்கையானும்" தெரியும் என்கிறார். கொலை செய்தால் தண்டனை உண்டு என்று  யாருக்கும் சொல்லித் தர தேவை இல்லை.  ஒருவன் இயற்கையாகவே அதை அறிந்து கொள்வான். சிறு வயது முதல், அவன் கேட்கும் செய்திகள், பேச்சுகள், செய்தித் தாள்கள் போன்றவை அவனுக்கு அதைச் சொல்லித் தரும். 

"அவற்றை ஒழித்து" - அதை விட்டு விட்டு . எதை விட்டு விட்டு ? வழக்கு தண்டம் என்ற அந்த இரண்டையும் விட்டுவிட்டு. 


"ஈண்டுத்" = இங்கு 

தெய்வப்புலமைத் திருவள்ளுவராற் = தெய்வ அருள் பெற்ற திருவள்ளுவரால் 


சிறப்புடைய ஒழுக்கமே = சிறந்ததான ஒழுக்கமே 


அறமென எடுத்துக்கொள்ளப்பட்டது." = அறம் என்று எடுத்துக் கொள்ளப் பட்டது. (மற்ற இரண்டையும் விட்டு விட்டார்) 


சரி, ஒழுக்கத்தை மட்டுமே அறம் என்று எடுத்துக் கொண்டதற்கு காரணம் சொன்னார். 


"அதுதான் நால்வகை நிலைத்தாய் வருணந்தோறும் வேறுபாடுடைமையின், சிறுபான்மையாகிய அச்சிறப்பியல்புகள் ஒழித்து, எல்லார்க்கும் ஒத்தலிற் பெரும்பான்மையாகிய பொதுவியல்பு பற்றி இல்லறம் துறவறம் என இருவகை நிலையால் கூறப்பட்டது."



அந்த ஒழுக்கத்திலும் வர்ணத்துக்கு வர்ணம் மாறும், பிரமச்சரியம் போன்ற நிலைக்கு நிலை மாறும் ஒழுக்கத்தை விட்டு விட்டு, எல்லோருக்கும் பொதுவான அறத்தை மட்டும் சொல்ல நினைக்கிறார். 

" அதுதான் நால்வகை நிலைத்தாய் வருணந்தோறும் வேறுபாடுடைமையின்,"

இந்த ஒழுக்கம்  வர்ணாசிரம தகுதிக்கு ஏற்ப மாறும் இயல்பு உடையது. உதாரணமாக, ஒரு தவறை ஒரு சிறுவன் செய்தால் அவனுக்கு ஒரு தண்டனை, அதே தவறை ஒரு பெரிய ஆள் செய்தால் அவனுக்கு வேறு தண்டனை. தவறு ஒன்று தான், தண்டனை வேறு. முன்பு இருந்த சட்ட திட்டங்களில், ஒரே தவறுக்கு, ஒத்த வயதுடைய ஆட்களுக்கு , அவர்கள் சார்ந்த வர்ணம் பற்றி தண்டனை வழங்கப் பட்டது. 


உதாரணமாக, ஒரு பிராமணனை கொன்றால் பிரம்மஹத்தி தோஷம் பிடிக்கும். ஒரு சூத்திரனை கொன்றால் சூத்திர ஹத்தி தோஷம் என்று ஒன்று கிடையாது. 

அது பற்றி சொல்லப் போனால், பிராமண, பிரமசாரிக்கு உள்ள ஒழுக்கம் என்ன, ஷத்ரிய பிரமசாரிக்கு உள்ள ஒழுக்கம் என்ன என்று மிக விரிவாக சொல்ல வேண்டும். 



"சிறுபான்மையாகிய அச்சிறப்பியல்புகள் ஒழித்து,"


எனவே, அந்த அளவுக்கு உள்ளே போகாமல், 


"எல்லார்க்கும் ஒத்தலிற் பெரும்பான்மையாகிய பொதுவியல்பு பற்றி இல்லறம் துறவறம் என இருவகை நிலையால் கூறப்பட்டது."


எனவே, எல்லோருக்கும் பொதுவாக உள்ள இயல்புகள் பற்றி மட்டும் கூற வேண்டும் என்று  நினைத்து, அந்த பொது இயல்பான அறத்தை இரு கூறுகளாக பிரித்து இல்லறம், துறவறம் (இல்லம் + அறம், துறவு + அறம்). 


"அவற்றுள் இல்லறமாவது, இல்வாழ்க்கை நிலைக்குச் சொல்லுகின்ற நெறிக்கண் நின்று அதற்குத் துணையாகிய கற்புடைமனைவியோடும் செய்யப்படுவது ஆகலின், அதனை முதற்கண் கூறுவான் தொடங்கி,எடுத்துக்கொண்ட இலக்கியம் இனிது முடிதற் பொருட்டுக் கடவுள் வாழ்த்துக் கூறுகின்றார்."



"அவற்றுள்" அந்த இல்லறம், துறவறம் என்ற இரண்டனுள் 


 "இல்லறமாவது" = இல்லறம் என்றால் என்ன என்றால் 


"இல்வாழ்க்கை நிலைக்குச் " = இல்வாழ்கை நிலை 


"சொல்லுகின்ற நெறிக்கண் நின்று" = என்று சொல்லப்பட்டும் அந்த வழியில் நின்று 


அதற்குத் = எதற்கு? அந்த வழியில் செல்வதற்கு 


துணையாகிய = துணையாகிய 


கற்புடைமனைவியோடும் செய்யப்படுவது = கற்புடைய மனைவியோடு சேர்ந்து செய்யப்படும் என்பதால் 


ஆகலின், = ஆகவே 


அதனை முதற்கண் கூறுவான் தொடங்கி = அதை முதலில் கூற வேண்டும் என்று நினைத்து 


எடுத்துக்கொண்ட இலக்கியம் இனிது முடிதற் பொருட்டுக் =இந்த அறம் சொல்ல எடுத்துக் கொண்ட இலக்கியம் நல்லபடியாக பாடி முடிக்க வேண்டுமே என்று நினைத்து 


கடவுள் வாழ்த்துக் கூறுகின்றார். = கடவுள் வாழ்த்தினை கூறத் தொடங்குகின்றார்.


எப்படி வந்து சேர்ந்து விட்டார் பார்த்தீர்களா?

இனி,மொத்தமாக படித்துப் பாருங்கள் உரை புரியும்.


"இந்திரன் முதலிய இறையவர் பதங்களும், அந்தமில் இன்பத்து அழிவில் வீடும், நெறியறிந்து எய்துதற்குரிய மாந்தர்க்கு உறுதியென உயர்ந்தோரான் எடுக்கப்பட்ட பொருள் நான்கு. அவை அறம், பொருள், இன்பம், வீடு என்பன. அவற்றுள் வீடென்பது சிந்தையும் மொழியும் செல்லா நிலைமைத்து ஆகலின், துறவறமாகிய காரணவகையாற் கூறப்படுவதல்லது இலக்கணவகையாற் கூறப்படாமையின், நூல்களாற் கூறப்படுவன ஏனை மூன்றுமேயாம்.

அவற்றுள், அறமாவது மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும், விலக்கியன ஒழிதலுமாம். அஃது ஒழுக்கம், வழக்கு, தண்டம் என மூவகைப்படும்.

அவற்றுள் ஒழுக்கமாவது அந்தணர் முதலிய வருணத்தார் தத்தமக்கு விதிக்கப்பட்ட பிரமசரிய முதலிய நிலைகளினின்று அவ்வவற்றிற்கு ஓதிய அறங்களின் வழுவாது ஒழுகுதல்.

வழக்காவது ஒருபொருளைத் தனித்தனியே எனது எனது என்றிருப்பார் அதுகாரணமாகத் தம்முள் மாறுபட்டு அப்பொருள்மேற் செல்வது. அது கடன்கோடன் முதற் பதினெட்டுப் பதத்ததாம்.

தண்டமாவது அவ்வொழுக்கநெறியினும் வழக்குநெறியினும் வழீஇயினாரை அந்நெறி நிறுத்துதற் பொருட்டு ஒப்பநாடி அதற்குத்தக ஒறுத்தல்.

இவற்றுள் வழக்குந் தண்டமும் உலகநெறி நிறுத்துதற் பயத்தவாவதுஅல்லது ஒழுக்கம் போல மக்களுயிர்க்கு உறுதி பயத்தற் சிறப்பிலவாகலானும், அவைதாம் நூலானேயன்றி உணர்வுமிகுதியானுந் தேயவியற்கையானும் அறியப்படுதலானும், அவற்றை ஒழித்து, ஈண்டுத் தெய்வப்புலமைத் திருவள்ளுவராற் சிறப்புடைய ஒழுக்கமே அறமென எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதுதான் நால்வகை நிலைத்தாய் வருணந்தோறும் வேறுபாடுடைமையின், சிறுபான்மையாகிய அச்சிறப்பியல்புகள் ஒழித்து, எல்லார்க்கும் ஒத்தலிற் பெரும்பான்மையாகிய பொதுவியல்பு பற்றி இல்லறம் துறவறம் என இருவகை நிலையால் கூறப்பட்டது.

அவற்றுள் இல்லறமாவது, இல்வாழ்க்கை நிலைக்குச் சொல்லுகின்ற நெறிக்கண் நின்று அதற்குத் துணையாகிய கற்புடைமனைவியோடும் செய்யப்படுவது ஆகலின், அதனை முதற்கண் கூறுவான் தொடங்கி,எடுத்துக்கொண்ட இலக்கியம் இனிது முடிதற் பொருட்டுக் கடவுள் வாழ்த்துக் கூறுகின்றார்."


திருக்குறள் பற்றி இவ்வளவு தெளிவாக இதற்கு முன் எங்காவது கேட்டது உண்டா? பிரமிக்க வைக்கும் முன்னுரை. 


இனி, நூலுக்குள் செல்வோம். 




2 comments:

  1. அருமை! எளிதில் புரியும்படியாக,வேண்டாத விஷயங்களை ஒதுக்கி விட்டு எல்லோர்க்கும் பொதுவான அறத்தை பற்றி கூற உள்ளீர்கள். மிக்க நன்றி

    ReplyDelete
  2. எழுதுவதை நன்றாகத்தான் எழுதியிருக்கிறார். அவர் சொல்வனவற்றில் எதை நாம் கைக்கொள்ள வேண்டும் என்பது நாமே எண்ணிப்பார்த்து முடிவு செய்துகொள்ள வேண்டும்.

    விளக்கம் அளித்ததற்கு மிக்க நன்றி.

    ReplyDelete