Pages

Saturday, April 10, 2021

திருக்குறள் - நெறி நின்றார் நீடு வாழ்வார் - பாகம் 1

 திருக்குறள் - நெறி நின்றார் நீடு வாழ்வார்  - பாகம் 1 


பாடல் 


பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க

நெறிநின்றார் நீடுவாழ் வார்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/04/1_10.html


(click the above link to continue reading)


பொறி = கண், மூக்கு, வாய், செவி, உடல் என்ற புலன்கள் 


வாயில் = வழியாக 


ஐந்தவித்தான் = ஐந்தையும் அவித்தான் 


பொய்தீர் = பொய் தீர்ந்த 


ஒழுக்க = ஒழுக்க 


நெறிநின்றார் = வழியில் நின்றார் 


 நீடுவாழ் வார் = நீண்ட நாள் வாழ்வார்கள் 


பொதுவாக உரை சொல்வது என்றால், ஐந்து புலன்களையும் அடக்கி, ஒழுக்கமாக வாழ்ந்தால், நீண்ட நாள் வாழலாம் என்று தான் சொல்ல முடியும். 


ஹை ஜாலி, ரொம்ப ஈசியான குறளாக இருக்கிறதே என்று நினைப்போம், பரிமேலழகரின் உரையை படிக்கும் வரை. 


"பொறி வாயில் ஐந்து அவித்தான் - மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் பொறிகளை வழியாக உடைய ஐந்து அவாவினையும் அறுத்தானது; 


பொய் தீர் ஒழுக்க நெறி நின்றார்-மெய்யான ஒழுக்க நெறியின்கண் நின்றார்,

நீடு வாழ்வார் - பிறப்பு இன்றி எக்காலத்தும் ஒரு தன்மையராய் வாழ்வார்.

(புலன்கள் ஐந்து ஆகலான், அவற்றின்கண் செல்கின்ற அவாவும் ஐந்து ஆயிற்று. ஒழுக்க நெறி ஐந்தவித்தானால் சொல்லப்பட்டமையின், ஆண்டை ஆறனுருபு செய்யுட் கிழமைக்கண் வந்தது. 'கபிலரது பாட்டு' என்பது போல. இவை நான்கு பாட்டானும் இறைவனை நினைத்தலும், வாழ்த்தலும், அவன் நெறி நிற்றலும் செய்தார் வீடு பெறுவர் என்பது கூறப்பட்டது)


கொஞ்சம் புரிந்தும், கொஞ்சம் புரியாத மாதிரியும் இருக்கும்.  அதை விரித்து சிந்திக்கும் போது தான் பரிமேலழகரின் அறிவின் ஆழம் புலப்படும். 


நமக்கு இருக்கும் ஆசை ஒன்றா, அல்லது பலவா? 


அழகான பெண்ணைப் பார்த்தால், மீண்டும் பார்க்க வேண்டும் என்று ஆசை வருகிறது. நல்ல இடங்களை சினிமாவில் பார்த்தால், அந்த இடத்துக்குப் போய் நேரில் பார்க்க ஆசை வருகிறது.  இது கண் வழி வரும் ஆசை. 


அது போல, நல்ல சுவையான உணவை ருசிக்க ஆசை, வெயில் நேரத்தில் குளிர்ந்த பானம் குடிக்க ஆசை என்று நாக்கு சம்பந்தப் பட்ட ஆசை.


இப்படி ஒவ்வொரு புலனுக்கும் ஒரு ஆசை இருக்கிறது தானே. 


இப்போது சொல்லுங்கள், ஆசை ஒன்றா ? பலதா?


பரிமேலழகர் சொல்கிறார், ஆசை ஒன்று தான்.  ஆனால், அது ஒவ்வொரு புலன் வழியாகவும் போகும் போது அது வேறு வேறு விதமான ஆசைகளாகத் தோன்றுகிறது என்கிறார். 


"புலன்கள் ஐந்து ஆகலான், அவற்றின்கண் செல்கின்ற அவாவும் ஐந்து ஆயிற்று"


அவா ஒன்றுதான். அது ஐந்து புலன்கள் வழியே செல்லும் போது, ஐந்தாகத் தோன்றுகிறது. 


சரி, இந்த ஐந்தவித்தான் (ஐந்து + அவித்தான்) என்பது யார்?  ஒழுக்க நெறி என்றால் என்ன? படித்து அதன் படி நடக்கலாம் என்றால், அது எங்கே எழுதி வைத்து இருக்கிறது?


அடுத்த ப்ளாகில் சிந்திப்போம். 




1 comment: