Pages

Sunday, April 11, 2021

திருக்குறள் - நெறி நின்றார் நீடு வாழ்வார் - பாகம் 2

திருக்குறள் - நெறி நின்றார் நீடு வாழ்வார்  - பாகம் 2


பாடல் 


பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க

நெறிநின்றார் நீடுவாழ் வார்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/04/2_11.html


(click the above link to continue reading)


பொறி = கண், மூக்கு, வாய், செவி, உடல் என்ற புலன்கள் 


வாயில் = வழியாக 


ஐந்தவித்தான் = ஐந்தையும் அவித்தான் 


பொய்தீர் = பொய் தீர்ந்த 


ஒழுக்க = ஒழுக்க 


நெறிநின்றார் = வழியில் நின்றார் 


 நீடுவாழ் வார் = நீண்ட நாள் வாழ்வார்கள் 


ஐந்தவித்தான் = ஐந்து + அவித்தான். 


யார் அந்த ஐந்தையும் அவித்தான்? முனிவர்களா ? துறவிகளா? ரிஷிகளா? 


எவ்வளவோ பெரிய முனிவர்கள், துறவிகள் எல்லாம் ஒரு நொடியில் கவிழ்ந்து இருக்கிறார்கள்.  ஒரு நொடியில் காமம் அவர்களை புரட்டிப் போட்டு இருக்கிறது. ஒரு நொடியில் கோபம் அவர்களை ஆட்கொண்டிருக்கிறது. 


பின் யார் அந்த "ஐந்தையும் அவித்தான்" என்ற கேள்விக்கு பரிமேலழகர் "இறைவன்" என்று பொருள் சொல்கிறார். 


அது எப்படி சொல்லலாம்? அவருக்குத்  தோன்றியதை அவர் சொல்லலாமா? அவருக்கு அந்த உரிமையை அவருக்கு கொடுத்தது யார்? 


பரிமேலழகர் மனம் போன படி உரை எழுதவில்லை. 


எப்படி என்று பார்ப்போம். 


"வெயிலில் போய் விட்டு, வியர்க்க விறு விறுக்க வந்தவுடன், குளிர்ந்த நீரைக்  குடித்தால் தொண்டை கட்டும்" என்று அம்மா சொல்கிறாள். 


பையன் அம்மா சொல்வதை கேட்காமல் குடிக்கிறான். தொண்டை கட்டிக் கொண்டது. 


ஏன், தொண்டை கட்டிக் கொண்டது ? அம்மா சொன்னதினாலா? அம்மா சொல்லாவிட்டாலும் தொண்டை கட்டி இருக்கும் அல்லவா? பின் அம்மா செய்தது என்ன? இந்த மாதிரி சூழ்நிலையில் நீர் குளிர்ந்த நீர் குடித்தால் தொண்டை கட்டும் என்ற உண்மையை எடுத்துச் சொன்னது தான். 


அந்த உண்மை எங்கிருந்து வந்தது? அது இயற்கையில் உள்ளது. 


யார் அதை உண்டாகியது? பல உண்மைகளை, அறங்களை, தர்மங்களை உண்டாக்கியது யார்?  


"ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க  நெறி" என்ற சொல் தொடருக்கு ஐந்தவித்தானது பொய் தீர் ஒழுக்க நெறி என்கிறார். 


"ஒழுக்க நெறி ஐந்தவித்தானால் சொல்லப்பட்டமையின், ஆண்டை ஆறனுருபு செய்யுட் கிழமைக்கண் வந்தது. 'கபிலரது பாட்டு' என்பது போல." என்பது உரை. 


இரண்டு சொற்களை இணைக்க சில சொற்கள் இருக்கின்றன. அவற்றிற்கு இடைச் சொற்கள் என்று பெயர். 


பல இடைச் சொற்கள் இருக்கின்றன. அதில் ஒன்று "வேற்றுமை உருபு" என்பது. 


ஐ, ஆல் , கு, இன், அது கண் என்பன. 


இது இரண்டாவது வேற்றுமை உருபில் இருந்து ஆரம்பிக்கும். 


ஐ - இரண்டாவது உருபு 

அது - ஆறாவது உருபு 

கண் - ஏழாவது உருபு 


"ஆண்டை ஆறனுருபு" என்றார்.  ஆறாவது உருபு "அது" என்பது. 


"ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க  நெறி" என்ற சொல் தொடருக்கு ஐந்தவித்தா"னது" பொய் தீர் ஒழுக்க நெறி என்கிறார்.


பொய் தீர்ந்த ஒழுக்க நெறி யாருடையதாக  இருக்கும்? உயர்ந்த நெறிகளை யார் உருவாக்கி இருக்க முடியும்?  அதற்கு உரியவர் யாராக இருக்க முடியும்?


இறைவன் என்பதே பதிலாக இருக்க முடியும். வேறு யார் பெயரையாவது சொல்ல முடியுமா ?


அது கூட உறுதியாக சொல்ல முடியுமா? வள்ளுவர் சொல்லி இருக்கிறார், கம்பர் சொல்லி இருக்கிறார், வியாசர் சொல்லி இருக்கிறார்....எப்படி இறைவன் சொன்னான் என்று சொல்ல முடியும் ? 


அதையும் பரிமேலழகர் விளக்குகிறார். 



2 comments:

  1. சற்று கடினமாக உள்ளது. இரண்டு முறை படித்தேன்.
    இன்னும்ஒரு முறை படிக்க இருக்கிறேன்.

    ReplyDelete
  2. பரிமேலழகரின் விளக்கம் மிகவும் சுவாரசியமானது. நன்றி.

    ReplyDelete