கம்ப இராமாயணம் - பாலை வருணனை - பாகம் 2
நம்மை யாராவது ஏமாற்றி விட்டால் நமக்கு எப்படி கோபமும், எரிச்சலும் வரும். நம்பி வந்த நம்மை கழுத்தறுத்தால் நம் மனம் எப்படி பொங்கி எழும். "எவ்வளவோ நம்பி இருந்தேன்...அவன் இப்படி செய்து விட்டானே என்று மனம் பொருமும் அல்லவா? அது எத்தனை நாள் ஆனாலும் ஆறாது. அதை நினைக்கும் போதெல்லாம் உடம்பு சூடாகும் அல்லவா.
நேரடியாக மோதினால் பரவாயில்லை. நம்மிடம் பேசி, நம் வாயில் இருந்து வார்த்தைகளை வரவழைத்து பின் அதைக் கொண்டு போய் சொல்லக் கூடாத இடத்தில் சொல்லி நம்மை மாட்டி விட்டால் நமக்கு எப்படி இருக்கும்.
அப்படி இருந்தது பாலை நிலத்தின் வெம்மை என்கிறார் கம்பர்.
"போர்க் களத்தில் அம்பும், வேலும் மழை போல் பொழிந்து போர் செய்யும் திறன் இல்லா எதிரிகள் வஞ்சனையால் ஒரு வீரனை தோற்கடித்து அவனுடைய மானத்துக்கு பங்கம் வரும்படி செய்தால், அவன் மனம் எப்படி வேதனையில் துடித்து, பொங்கி எழுமோ, எப்படி காலம் காலமாக அந்த நம்பிக்கை துரோகம் மனதில் நெருப்பை கிளப்பிக் கொண்டு இருக்குமோ, அது போல காலம் எல்லாம் ஆறாமல் சூடாக இருந்தது பாலை நிலம்"
என்று பாலையை வர்ணிக்கிறார்.
பாடல்
விஞ்சுவான் மழையின்மேல் அம்பும்
வேலும் படச்
செஞ்சவே செரு முகத்து அமர்
செயும் திறன் இலா
வஞ்சர் தீ வினையினால் மான
மா மணி இழந்து
அஞ்சினார் நெஞ்சுபோல் என்றும்
ஆறாது அரோ,
விஞ்சு = விரிந்த
வான் மழையின்மேல் = வானத்தில் இருந்து விழும் மழை போல
அம்பும் வேலும் படச்= அம்பும் வேலும் மேனியில் பட
செஞ்சவே = சிவந்த அல்லது செம்மையான
செரு முகத்து = போர்க் களத்தில்
அமர் செயும் = போர் செய்யும்
திறன் இலா = திறமை இல்லாத
வஞ்சர் = வஞ்சகர்கள்
தீ வினையினால் = சூழ்ச்சியால்
மான மா மணி இழந்து = மானம் என்ற பெருமை மிகுந்த மணியை இழந்து நிற்கும் வீர்கள்
அஞ்சினார் = அஞ்சி நிற்கும் அவர்களின்
நெஞ்சுபோல் =மனம் போல
என்றும்= என்றும்
ஆறாது அரோ, = குறையாமல் இருந்தது (சூடு)
பாலைவனத்துக்கு எங்கே இருந்து ஒரு உவமையைக் கொண்டு வருகிறார்!
ReplyDeleteஇந்த மாதிரிப் பாடல்களைத் தந்ததற்கு தன்றி.