Pages

Tuesday, April 6, 2021

நாலடியார் - விடுக்கும் வினை உலந்தக் கால்

 நாலடியார் - விடுக்கும் வினை உலந்தக் கால் 


பிறர் துன்பம் கண்டு நாம் வருந்துகிறோம். அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்றும் நினைப்போம். ஆனால் செய்ய மாட்டோம். என்ன காரணம்? 


இப்படி எல்லோருக்கும் உதவி செய்து , உதவி செய்து நமக்கு பிற்காலத்தில் செல்வம் இல்லாமல் போய் விட்டால் என்ன செய்வது? நமக்கு ஒரு தேவை என்றால் யார் வந்து உதவி செய்வார்கள்? என்ற பயத்தில், மனதில் உதவி செய்ய வேண்டும் என்று நினைத்தாலும், செய்யாமல் விட்டு விடுகிறோம். 


"தனக்கு மிஞ்சி தான் தானமும் தர்மமும்" என்று பேசாமல் இருந்து விடுகிறோம். 


அதாவது போகட்டும். சிலர், நிறைய செல்வம் இருந்தாலும், அதை அனுபவிக்க மாட்டார்கள். இப்பவே எல்லாவற்றையும் செலவழித்து விட்டால் என்ன பிற்காலத்தில் என்ன செய்யவது என்று மேலும் மேலும் சேமித்து வைத்துக் கொண்டே இருப்பார்கள். 


பிறருக்கும் கொடுக்க மாட்டார்கள்.  தானும் அனுபவிக்க மாட்டார்கள். செல்வத்தை எப்படியாவது சேமித்து வைத்து கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். 


செல்வத்தை இறுகிப் பற்றிக் கொண்டால் அது நம்மிடம் நிற்குமா?


நம் தமிழில் உள்ள அற நூல்கள் அனைத்தும் செல்வத்தின் நிலையாமை பற்றி கூறுகின்றன. 


"நீ என்னத்தான் இறுக்கிப் பிடித்தாலும், போகிற காலத்தில் செல்வம் உன்னை விட்டுப் போய் விடும்"  


என்று அனைத்து அற நூல்களும் கூறுகின்றன.


எனவே, செல்வம் கையில் இருக்கும் போது அனுபவியுங்கள், அல்லது பிறர் துன்பம் துடைக்க பயன்படுத்துங்கள் என்கிறது கீழ் கண்ட நாலாடியார்:


பாடல் 



நடுக்குற்றுத் தற்சேர்ந்தார் துன்பந் துடையார்;

கொடுத்துத்தான் துய்ப்பினும் ஈண்டுங்கால் ஈண்டும்;

இடுக்குற்றுப் பற்றினும் நில்லாது செல்வம்

விடுக்கும் வினையுலந்தக் கால்.


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2021/04/blog-post_46.html


(click the above link to continue reading)



நடுக்குற்றுத் = நடுக்கம் அடைந்து 


தற்சேர்ந்தார் = தன்னைச் சேர்ந்தவர்கள் (உறவினர், நண்பர்) 


துன்பந் துடையார்; = துன்பத்தை துடைக்க மாட்டார்கள் 


கொடுத்துத் = பிறருக்கு கொடுத்து 


தான் துய்ப்பினும் = தான் அனுபவித்தாலும் (செலவழித்தாலும்) 


ஈண்டுங்கால் ஈண்டும்; = வரும் போது வரும் 


இடுக்குற்றுப் =  இறுக்கிப் 


பற்றினும் = பிடித்தாலும் 


நில்லாது செல்வம் = செல்வம் நிலைத்து நிற்காது 


விடுக்கும் = விட்டுப்  போய் விடும் 


வினையுலந்தக் கால். = நல் வினை தீர்ந்த பின் 


எவ்வளவுதான் தான தர்மம் செய்தாலும், செலவழித்தாலும் வரும் காலத்தில் வந்து கொண்டே இருக்கும்.  எவ்வளவுதான் இறுக்கிப் பிடித்தாலும், போகிற காலத்தில் செல்வம் போய் விடும். 



No comments:

Post a Comment