Pages

Sunday, May 23, 2021

கம்ப இராமாயணம் - இன்று காண்டி

கம்ப இராமாயணம் - இன்று காண்டி 


இராமாயணத்தில் என்னை மிகவும் பாதித்த இடம் இந்திர சித்தன் போரும் மரணமும். 


தந்தை மாற்றான் மனைவியை கவர்ந்து வந்து வைத்து இருக்கிறான். அந்தப் பெண்ணுக்கு இதில் உடன் பாடு இல்லை. இந்திரசித்து அது தவறு என்று இராவணனிடம் சொல்கிறான். இராவணன் கேட்டான் இல்லை. 


"சரி நான் போருக்குப் போகிறேன்" என்று இந்திரசித்து கிளம்புகிறான். ஒரு பெண்ணின் மேல் கொண்ட ஆசையால், பெற்ற மகனை இழக்க ஒருவன் துணிவானா? அப்படி ஒரு காதலா? தன்னை இழக்கலாம்? தான் விரும்பிய பெண் கிடைக்கவில்லை என்று சிலர் தற்கொலை கூட செய்து கொள்கிறார்கள். அதைப் புரிந்து கொள்ள முடிகிறது. அவள் இல்லாமல் வாழ்கை இல்லை என்று ஒரு ஆடவன் நினைப்பது புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது. 


பெற்ற பிள்ளையை பணயம் வைக்க ஒரு தந்தை நினைப்பானா? 


பிள்ளை மேல் பாசம் இல்லையா? அல்லது சீதை மேல் கொண்ட காதல் அவ்வளவு ஆழமானதா?  


இந்திரசித்து போருக்கு போகும் அந்த இடம், நம்மை பதற வைக்கிறது. அடடா, இந்த பிள்ளை இறந்து போகப் போகிறானே என்று நாம் பச்சாதாப் படுகிறோம். 


போருக்கு புறப்படும் முன் இந்திரசித்து சொல்கிறான் 


" ஐயனே, உன் மற்ற பிள்ளைகள் போரில் இறந்து போய் விட்டார்கக்ல் என்று நீ வருந்தாதே. இன்று என் போர்த் தொழிலைப் பார். இந்த குரங்கு கூட்டம் அத்தனையும் கொன்று அவற்றின் உடலை பிணங்களின் குப்பையாக செய்து விடுகிறேன். இராம இலக்குவர்களின் உயிரற்ற உடலை சீதையும், அந்த தேவர்களும் காணும் படி செய்கிறேன்"  என்று 


பாடல் 


வணங்கி, ‘நீ, ஐய! “நொய்தின் மாண்டனர் மக்கள்” என்ன

உணங்கலை; இன்று காண்டி, உலப்பு அறு குரங்கை நீக்கி,

பிணங்களின் குப்பை; மற்றை நரர் உயிர் பிரிந்த யாக்கை

கணங் குழைச் சீதைதானும், அமரரும் காண்பர்’ என்றான்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/05/blog-post_23.html

(please click the above link to continue reading)


வணங்கி,  = இராவணனை வணங்கி 


‘நீ, ஐய!  = ஐயா நீ 


“நொய்தின் மாண்டனர் மக்கள்” என்ன = உன் பிள்ளைகள் இறந்து போய் விட்டார்கள் என்று  


உணங்கலை; = வருந்தாதே


இன்று காண்டி = இன்று பார் 


உலப்பு அறு = அளவற்ற 


குரங்கை நீக்கி, = குரங்கு கூட்டத்தை ஒழித்து 


பிணங்களின் குப்பை; = பிணக் குப்பையாக மாற்றி விடுகிறேன்  


மற்றை நரர் = மனிதர்களான இராம இலக்குவர்களின் 


உயிர் பிரிந்த யாக்கை  = உயிரற்ற உடலை 


கணங் குழைச் சீதைதானும் = காதணி கொண்ட சீதையும் 


அமரரும் காண்பர்’ என்றான். = தேவர்களும் காண்பார்கள் என்றான் 



2 comments:

  1. It seems like , after some time it became more of a prestige issue rather than love for sita .

    ReplyDelete
  2. அருமையான
    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    (விளம் மா தேமா அரையடிக்கு)

    வணங்கிநீ, ஐய! “நொய்தின் மாண்டனர் மக்கள்” என்ன
    உணங்கலை; இன்று காண்டி, உலப்பறு குரங்கை நீக்கி,
    பிணங்களின் குப்பை; மற்றை நரர்உயிர் பிரிந்த யாக்கை
    கணங்குழைச் சீதை தானும், அமரரும் காண்பர்’ என்றான். 3

    பிரமாத்திரப் படலம், யுத்த காண்டம், ராமாயணம்

    ReplyDelete