திருக்குறள் - இல்வாழ்வான் என்பான் துணை
இல்லறம் என்பது மிகப் பெரிய பொறுப்பு என்பது வள்ளுவம் காட்டும் நெறி. ஒரு பெண்ணும், ஆணும் இணைந்து நடத்தும் இல்லறம் என்பது ஒரு சமுதாய பொறுப்பாகவே காணப்பட்டது.
முதல் குறளில் பிரமச்சாரிக்கும், வானப்ரஸ்தத்தில் உள்ளவர்களுக்கும், துறந்தவர்களுகும் அவர்கள் நல் வழியில் செல்ல துணை நிற்க வேண்டும் என்று பார்த்தோம்.
அடுத்தகாக,
"துறந்தார்க்கும், ஏழ்மையில் உள்ளவர்களுக்கும், இறந்தவர்களுக்கும் இல்வாழ்வான் என்பவன் துணை" என்கிறார்.
பாடல்
துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை
பொருள்
https://interestingtamilpoems.blogspot.com/2021/07/blog-post_13.html
(Please click the above link to continue)
துறந்தார்க்கும் = துறந்தவர்களுக்கும்
துவ்வா தவர்க்கும் = வறுமையில் உள்ளவர்களுக்கும்
இறந்தார்க்கும் = இறந்தவர்களுக்கும்
இல்வாழ்வான் என்பான் = இல்லறத்தில் உள்ளவன்
துணை = துணை
முந்தைய குறளில் துறந்தார் என்று கூறினாரே, மீண்டும் இந்தக் குறளில் ஏன் துறந்தார்?
பரிமேலழகர் இல்லை என்றால் இந்த மாதிரி கேள்விகளுக்கு எல்லாம் நமக்கு பதில் கிடைத்து இருக்காது.
பரிமேலழகர் கூறுகிறார்....
துறந்தார் என்பார், காக்கப்பட வேண்டியவர்களால் துறக்கப் பட்டவர்கள். பல குடும்பங்களில், காக்கப் பட வேண்டிய முதியவர்கள், காக்கப் படாமல் விடப் படுகிறார்கள்.
அவர்களை யார் காப்பாற்றுவது? அரசாங்கமா? சமுதாயமா? அல்லது அவர்களை ஏதாவது அநாதை ஆசிரமத்தில் விட்டு விடலாமா?
வள்ளுவர் சொல்கிறார், இல்லறத்தில் இருப்பவன், அவர்களைப் போன்றவர்களுக்கு துணையாக இருக்க வேண்டும். இது நாலாவது கடமை.
அடுத்தது, "துவ்வாதார்கு"
துவ்வாதார் என்றால் வறுமை வயப்பட்டவர். அவர்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். செல்வமும் வறுமையும் நம் கையில் இல்லை. சிறுக சிறுக சேர்த்து, கொஞ்சம் கடன் வாங்கி, வீடு வாங்கினால், சின்ன நில நடுக்கம் வந்தால் போதும், வாழ் நாள் சேமிப்பு போய் விடும். பெரிய நோய் வந்தால், மருத்துவ செலவில் செல்வம் கரைந்து போகலாம். களவு போகலாம்.
ஏதோ ஒரு காரணத்தால் வறுமையால் வாடுபவர்களை கை கொடுத்து தூக்கி விட வேண்டியது இல்லறத்தானின் கடமையாகும். அவர்களின் குடும்பத்தை காத்து, இருக்க இடம் கொடுத்து, அவர்கள் தங்கள் காலில் நிற்கும் வரை உதவி செய்ய வேண்டும்.
மூன்றாவது, "இறந்தார்க்கு". இறந்தவருக்கு எவ்வாறு உதவி செய்வது? ஒருவன் அனாதையாக இறந்து போனால், அவன் எந்த ஜாதி, மதம், குலம் என்று பார்க்க வேண்டியதில்லை. அவனை நல்லடக்கம் செய்து, அவனுக்கு செய்ய வேண்டிய நீர்க் கடன் செய்ய வேண்டியது இல்லறத்தானின் கடமை.
மீண்டும், அனாதை பிணம் என்று விட்டுவிடக் கூடாது. அல்லது அது அரசாங்கத்தின் வேலை என்றும் விட்டு விடக் கூடாது என்று வள்ளுவர் கூறுகிறார்.
இராமாயணத்தில், ஜடாயு என்ற பறவைக்கு இராமன் நீர்க் கடன் செய்கிறான்.
காக்கப் படவேண்டியவர்களால் கை விடப் பட்டவர்கள்
வறுமையில் வாடுபவர்கள்
துணையின்றி இறந்தவர்கள்
இந்த மூன்று பேருக்கும் துணையாக இருக்க வேண்டியது இல்லறத்தானின் கடமை.
யோசித்துப் பாருங்கள். இன்று சோசியலிசம், கம்யுனிசம் போன்ற சிந்தாதங்கள் என்ன சொல்கிறன. இருப்பவற்றை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று சொல்கின்றன.
இல்லறம் என்பது எவ்வளவு பெரிய கடமை, பொறுப்பு, முக்கியத்வம் வாய்ந்தது என்று பாருங்கள்.
ஒரு தனி மனிதன், குடும்பம், சமுதாயம், நகரம், நாடு, உலகம் என்று அது விரிந்து கொண்டே போகிறது.
இது வரை ஆறு கடமைகளை சொல்லி இருக்கிறார்.
வணக்கம் அண்ணா ..
ReplyDeleteபுத்துணர்ச்சி பெற்றோம் .
எழுத்து கண்டு ..அருமை ..
Meaning for life 👍
ReplyDelete