கம்ப இராமாயணம் - ஆயிரம் கோடி துன்பத்தைத் தாங்குவேன்
அசோகவனத்தில் சீதை தனித்து இருக்கிறாள். இராமனை நினைத்து புலம்புகிறாள்.
"அவன் (இராமன்) வராமல் இருக்க மாட்டான் என்ற நம்பிக்கையில் ஆயிரம் துன்பத்தை நான் தாங்குவேன். என் வலியை தீர்க்க மாட்டாயா. வீரனே. நாராயணனே. தனித்துவம் மிக்க நாயகனே"
என்று இராமனை நினைத்து புலம்புகிறாள்.
பாடல்
வாராது ஒழியான் எனும் வன்மையினால்
ஓர் ஆயிரம் கோடி இடர்க்கு உடைவேன் :
தீரா ஒரு நாள் வலி; சேவகனே!
நாராயணனே! தனி நாயகனே!
பொருள்
https://interestingtamilpoems.blogspot.com/2021/08/blog-post_20.html
(please click the above link to continue reading)
வாராது ஒழியான் = வராமல் இருக்க மாட்டான்
எனும் வன்மையினால் = என்ற தைரியத்தில்
ஓர் ஆயிரம் கோடி = ஒரு ஆயிரம் கோடி
இடர்க்கு உடைவேன் : = துன்பங்களைத் தாங்குவேன்
தீரா ஒரு நாள் வலி = என் வலியை ஒரு நாள் அல்லது மற்றொரு நாள் தீர்ப்பாய்
சேவகனே! = வீரனே
நாராயணனே! = நாராயணனே
தனி நாயகனே! = சிறப்பு மிக்க தலைவனே
ஓரிரண்டு செய்திகளை பார்ப்போம்.
அது என்ன திடீரென்று நாராயணனே என்று அழைக்கிறாள் என்று நமக்கு கொஞ்சம் தூக்கி வாரிப் போடத்தான் செய்கிறது.
மும்மூர்த்திகளில் திருமாலின் தொழில் காத்தல். காத்தல் தொழிலை யார் செய்தாலும் அவர்கள் திருமாலின் தொழிலைச் செய்கிறார்கள். அவர்கள் திருமாலின் ஒரு அம்சமாகவே கருதப் படுவார்கள்.
அந்தக் காலத்தில் அரசர்களை "இறைவன்" என்றே குறிப்பிட்டார்கள். ஏன் என்றால் குடிகளை காப்பது அவன் கடமை. இறைமாட்சி என்ற ஒரு அதிகாரமே வைத்தார் வள்ளுவர்.
இராமன், ஒரு அரசன் என்பதால், அவனை நாராயணனே என்று அழைக்கிறாள்.
எவ்வளவு பெரிய துன்பம்! ஜனகனின் மகளாக பிறந்து, தசரதனின் மருமகளாக ஆகி, இராமனின் மனைவி என்று பட்டத்து இராணியாக வேண்டியவள், காடு மேடெலாம் திரிந்து, கடைசியில் யாரோ ஒரு அரக்கன் தூக்கிக் கொண்டு வந்து பலவந்தப் படுத்துகிறான்.
கணவன் எங்கே என்று கூடத் தெரியாது.
ஆனால், அவளுக்கு ஒரே ஒரு நம்பிக்கை மட்டும் இருக்கிறது. இராமன் எப்படியும் வருவான் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை. அந்த நம்பிக்கை இருப்பதால், ஆயிரம் கோடி துன்பம் வந்தாலும் தாங்குவேன் என்கிறாள்.
கணவன் , மனைவியின் மேலும். மனைவி, கணவனின் மேலும் கொண்ட காதல் தான் இல்லறத்தில் வரும் அத்தனை துன்பங்களையும், சவால்களையும் எதிர் கொள்ள உதவும்.
பணம் காசு இருந்தால் எந்த சிக்கலையும் சரி செய்து கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள். இராமனிடமும் , சீதையிடமும் இல்லாத செல்வமா. அந்த செல்வம் அவர்கள் துன்பத்தைத் தீர்கவில்லை. அவர்கள் ஒருவர் மேல் ஒருவர் கொண்ட அன்புதான் அவர்கள் சந்தித்த துன்பங்களை தாங்கிக் கொள்ள உதவியது.
அதுதான் பாடம்.
படித்துக் கொள்வோம்.
இந்த பாடலை நாள் தோறும் பாராயணம் செய்தால் மனதிற்கு ஓர் உறுதியும் தைரியத்தையும் அளிக்கும் என்பது நடைமுறையில் உள்ள நம்பிக்கை.
ReplyDelete