திருக்குறள் - சொர்கத்திலும் மதிப்பு பெறுவர்
பெற்றார்ப் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு
இது ஒரு குழப்பமான குறள். இந்தக் குறளுக்கு பல பேர் பல விதங்களில் உரை எழுதி இருக்கிறார்கள். எதுவுமே முழுவதும் சரி என்று படவில்லை. ஏதோ குறை இருப்பது போலவே படுகிறது.
ஏன் என்று பார்ப்போம்.
பாடல்
பெற்றார்ப் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு
பொருள்
https://interestingtamilpoems.blogspot.com/2021/08/blog-post_23.html
(Please click the above link to continue reading)
பெற்றார்ப் = அடையப் பெற்றவர்கள்
பெறின் = பெற்றால்
பெறுவர் = அடைவர்
பெண்டிர் = பெண்கள்
பெருஞ்சிறப்புப் = பெரிய சிறப்பு
புத்தேளிர் = தேவர்கள்
வாழும் உலகு = வாழும் உலகு
பெற்றார் என்றால் யார் பெற்றார், எதைப் பெற்றார் என்ற கேள்வி வரும்.
பெறுவர் என்றால் யார் பெறுவார்கள்?
அதிகாரம் "வாழ்க்கைத் துணை நலம்". எனவே இது மனைவியைப் பற்றியது என்று கொள்ளலாம்.
மனைவியைப் கணவன் பெற்றால் என்று கொண்டால், "பெறுவர் பெண்டிர்" என்று மீண்டும் வருகிறது. குழப்பமாக இருக்கிறது அல்லவா?
பரிமேலழகர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.
"பெண்டிர் பெற்றான் பெறின் - பெண்டிர் தம்மை எய்திய கணவனை வழிபடுதல் பெறுவராயின்; புத்தேளிர் வாழும் உலகு பெருஞ்சிறப்புப் பெறுவர் - புத்தேளிர் வாழும் உலகின் கண் அவரால் பெருஞ்சிறப்பினைப் பெறுவர்."
அதாவது, தன்னைத் தொழுது எழும் மனைவியை ஒரு கணவன் பெற்றால், அவன் சொர்கத்திலும் பெரிய சிறப்பைப் பெறுவான் என்று பொருள் சொல்கிறார்.
இது ஒரு பெண்ணடிமைத் தனம் இல்லையா என்று கேள்வி கேட்கலாம்.
இதற்கு வேறு விதத்திலும் பொருள் சொல்கிறார்கள்.
ஒரு மனைவி, தன்னை மட்டுமே நேசிக்கும் கணவனைப் பெறுவாள் என்றால், அவள் சொர்கத்திலும் சிறந்த பேறு பெறுவாள் என்றும் பொருள் சொல்கிறார்கள்.
கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், இயற்கைக்கு முரண்பாடாகத் தெரிகிறது.
இந்த ஒரு பெண் (ஆண்) மேல் மட்டும்தான் நீ அன்பு செலுத்த வேண்டும். வேறு யார் மேலும் அன்பு செலுத்தக் கூடாது என்று ஒருவரைக் கட்டுப் படுத்த முடியுமா?
சட்டம் போடலாம். ஆனால், அதை அமல் படுத்துவது கடினம்.
"இது ஒரு சிறந்த உணவு. உடம்புக்கு நல்லது. எனவே, வாழ் நாள் பூராவும் இதை மட்டும் தான் மூன்றும் வேளையும் சாப்பிட வேண்டும்" என்று சொன்னால் நடக்குமா?
சரி, அப்படியே ஒரு நெறிப் படுத்தினாலும், அதில் இன்பம் இருக்குமா? இங்கே இன்பம் இல்லை என்றால் பின் சொர்க்கத்தில் போய் என்ன இன்பம் வரப் போகிறது?
மனைவி கற்புள்ளவளாக இருப்பது மாதிரி கணவனும் கற்புள்ளவனாக இருந்து விட்டால் இருவருக்கும் சொர்கத்திலும் சிறந்த பெருமை கிடைக்கும் என்று பொருள் கொள்ளலாம். அதில் எதிர் கருத்து ஒன்றும் இருக்காது.
ஆனால், அதுதான் குறளின் கருத்தா என்று தெரியவில்லை.
மேலும் உண்மை அறிய விருப்பம் உள்ளவர்கள் தேடிக் கண்டைவார்களாக.
No comments:
Post a Comment