Pages

Wednesday, August 25, 2021

கம்ப இராமாயணம் - ஆவியை உண்ணுதியோ

 கம்ப இராமாயணம் - ஆவியை உண்ணுதியோ 


அசோகவனத்தில் இருக்கும் சீதை இராமனை நினைத்து புலம்புகிறாள். 


"இராமா !, நீ காட்டுக்குப் போகப் போகிறேன் என்று சொன்ன போது நானும் வருகிறேன் என்று அடம் பிடித்தேன். நீ வர வேண்டாம், இங்கே நகரத்திலேயே இரு என்று சொன்னாய். நான்தான் கேட்கவில்லை. அதனால், இப்போது இந்த நகரத்தில் (இலங்கையில்) இருக்கட்டும் என்று என்னை விட்டுவிட்டாயா?  உன் அருளின் அளவு இவ்வளவுதானா? என் உயிரை வாங்குகிறாய் நீ" 


என்று புலம்புகிறாள். 


பாடல் 


தரு ஒன்றிய கான் அடைவாய், "தவிர் நீ;

வருவென சில நாளினில்; மா நகர்வாய்

இரு" என்றனை;இன் அருள்தான் இதுவோ ?

ஒருவென் தனிஆவியை உண்ணுதியோ ?


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/08/blog-post_25.html


(Please click the above link to continue reading)


தரு ஒன்றிய = மரங்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டி இருக்கும் அடர்ந்த 


கான் = கானகத்தை 


அடைவாய், = நீ அடைவாய் 


"தவிர் நீ; = நீ (சீதையாகிய நீ) அதை தவிர்ப்பாய் 


வருவென = நான் (இராமன்) வருவேன் 


சில நாளினில் = கொஞ்ச நாளில் 


மா நகர்வாய் = பெரிய நகரத்தில் 


இரு " = இரு 


என்றனை = என்னைச் (சீதையை) சொன்னாய் 


இன் அருள்தான் இதுவோ ? = நீ காட்டும் அருள் இது தானா? 


ஒருவென் தனி = தனி ஆளாக இருக்கும் 


ஆவியை உண்ணுதியோ ? = உயிரை எடுக்கிறாய் 


நான் காட்டில் கிடந்து துன்பப் படக் கூடாது என்று என்னை இந்த நாட்டில் தனியாக இருக்க வைத்து விட்டாயா? இவ்வளவுதானா  உன் அருள். உன் பிரிவு என் உயிரை உருக்குகிறது என்கிறாள். 


உயிரை, உணர்வைத் தொடும் கவிதை. 

1 comment:

  1. கம்பருக்கு என்ன கற்பனை! அருமை!

    ReplyDelete