திருக்குறள் - ஏறுபோல் பீடு நடை
ஒருவனிடம் எல்லா செல்வமும் இருக்கிறது.
பெரிய வீடு, வீட்டில் உள்ளேயே நீச்சல் குளம், நாலைந்து கார், வீட்டைச் சுற்றி தோட்டம், பெரிய பதவி, ஊருக்குள் பெரிய மனிதன் என்ற பேர், படிப்பறிவு எல்லாம் இருக்கிறது.
ஆனால், அவன் மனைவி மட்டும் கொஞ்சம் சரி இல்லை.
பொழுது விடிந்தால் போதும் சண்டை ஆரம்பித்து விடும், வேலைகாரர்கள், அக்கம் பக்கம் என்று கத்தி சண்டை போட்டுக் கொண்டிருப்பாள். ஆடம்பரச் செலவு. வீட்டுக்கு யாராவது வந்தால் ஏண்டா வந்தோம் என்று வருத்தித்தான் திரும்பிப் போவார்கள். மரியாதை கிடையாது. அன்பு கிடையாது.
அப்படி ஒரு மனைவி இருந்தால், அவன் ஊருக்குள் தலை நிமிர்ந்து நடக்க முடியுமா ?
"அதோ போறாரே, அவர் மனைவி...ஒரு பெரிய இராட்சஷி..." என்று அவர் காது பட பேசினால், அவரால் தலை நிமிர்ந்து நடக்க முடியுமா?
மாறாக, இன்னொருவன் இருக்கிறான். பெரிய படிப்பு, செல்வம் எல்லாம் ஒன்றும் இல்லை. ஆனால் அவன் மனைவி பத்தரை மாத்துத் தங்கம். வீட்டுக்கு யார் வந்தாலும் அப்படி ஒரு உபசரிப்பு, யார்க்கு ஒரு துன்பம் என்றாலும் முதலில் போய் நிற்பாள், கணவன் மேல் அளவற்ற அன்பு, எல்லா உறவையும் அணைத்துக் கொண்டு செல்லும் பாங்கு, யார் என்ன சொன்னாலும் புன்னகையோடு பேசும் பாங்கு, சிக்கனமான செலவு...
அவன் ஊருக்குள் போகும் போது என்ன சொல்வார்கள் ?
"அதோ போறாரே...அவர் படிப்பு, பணம் காசு இல்லைனாலும், குடுத்து வச்ச மனுஷன்...இலட்சுமி மாதிரி ஒரு பொண்டாட்டி...வேற என்ன வேணும் " என்று சொன்னால், நெஞ்சு நிமிர்த்தி ஒரு பெருமிதத்துடன் நடக்க முடியும் அல்லவா அவனால்...
ஒரு மனிதன் ஏறு போல் கம்பீரமாக நடப்பதற்கும், தலையை தொங்கப் போட்டுக் கொண்டு போவதற்கும் அவன் கையில் ஒன்றும் இல்லை. அவன் மனைவி கையில் தான் எல்லாம் இருக்கிறது என்கிறது அடுத்த குறள்.
பாடல்
புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை
பொருள்
https://interestingtamilpoems.blogspot.com/2021/08/blog-post_27.html
(Please click the above link to continue reading)
புகழ்புரிந்த இல்லிலோர்க்கு = புகழை விரும்பும் மனைவி இல்லாதவர்களுக்கு
இல்லை = கிடைக்காது
இகழ்வார்முன் = அவனை இகழ்பவர் முன்னால்
ஏறுபோல் = ஏறு போல
பீடு நடை = பெருமிதமான நடை
ஒரு மனிதனின் பெருமையும், சிறுமையும் அவன் மனைவியின் கையில் இருக்கிறது.
அப்படி என்றால் என்ன அர்த்தம்?
மனைவியிடம் எல்லாவற்றையும் விட்டு விட்டு இவர் ஒன்றும் செய்ய வேண்டாம் என்று அர்த்தம் இல்லை.
அவள் கையில்தான் எல்லாம் இருக்கிறது என்றால், அவளை போற்றி பாதுகாக்க வேண்டும், அவளை அன்போடு நடத்த வேண்டும், அவளுக்குத் துணை செய்ய வேண்டும். அவளை மதிக்க வேண்டும்.
இது இல்லறம்.
இதில் யார் பெரியவர், யார் சிறியவர் என்ற போட்டி இல்லை.
யாருக்கு பலம் அதிகம் என்று நிர்ணயம் செய்யும் மல்யுத்த களம் அல்ல.
இருவரும் சேர்ந்து நடத்தும் அறம் இது.
இருவரும் சேர்ந்து நடத்தும். அறம் இல்லறம். அருமையான அர்ததம்
ReplyDelete