நாலடியார் - பெரியார் வாய்ச் சொல்
எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது என்று தெரியமலேயே, ஏதோ மனதுக்கு சரி என்று பட்டதை செய்து கொண்டும், சரி அல்ல என்று பட்டதை முடிந்த வரை தவிர்த்தும் வாழ்கிறோம். ஆனால், நாம் செய்பவை சரி தானா, செய்யாமல் விட்டது உண்மையிலேயே தீமைதானா ? தெரியாது நமக்கு.
அது போன்ற குழப்பங்கள் வரும் போது, நம் அற நூல்கள் வழி காட்டுகின்றன. அவை நம் சிக்கல்களை முழுவதுமாக தீர்த்து விடாது. வழி காட்டும்.
அப்படிப்பட்ட நூல்களில் ஒன்று நாலடியார்.
"எதை அறிய வேண்டும் ? எதற்கு அஞ்ச வேண்டும்? எப்போது பொறுமையாக இருக்க வேண்டும் ? எதில் இருந்து நம்மை காத்துக் கொள்ள வேண்டும் ? எதை வெறுக்க வேண்டும் ? எதை எப்போதும் கை விடக் கூடாது?"
இந்தக் கேள்விகளை கேட்டு, பதிலும் தருகிறது கீழே உள்ள நாலடியார் பாடல் .
பாடல்
அறிமின் அறநெறி; அஞ்சுமின் கூற்றம்:
பொறுமின் பிறர்கடுஞ்சொல்; போற்றுமின் வஞ்சம்;
வெறுமின் வினைதீயார் கேண்மை; எஞ்ஞான்றும்
பெறுமின் பெரியார்வாய்ச் சொல்.
பொருள்
https://interestingtamilpoems.blogspot.com/2021/09/blog-post_20.html
(Please click the above link to continue reading)
அறிமின் அறநெறி = அறம் எது என்று அறிந்து கொள்ள வேண்டும்
அஞ்சுமின் கூற்றம்: = எமனுக்கு அஞ்ச வேண்டும். மரணம் எப்போதும் வரும் என்ற பயத்தில் நல்லது செய்ய வேண்டும், நல்லவற்றை படிக்க வேண்டும், தீயவற்றில் இருந்து விலகி நடக்க வேண்டும்.
பொறுமின் பிறர்கடுஞ்சொல் = பிறர் சொல்லும் கடிய சொற்களை பொறுத்துக் கொள்ள வேண்டும்.
போற்றுமின் வஞ்சம் = வஞ்சம் மனதில் புகுந்து விடாதபடி மனதை போற்றி பாதுகாக்க வேண்டும்.
வெறுமின் வினைதீயார் கேண்மை = தீய செயல் செய்பவர்களின் நட்பை வெறுக்க வேண்டும்
எஞ்ஞான்றும் = எப்போதும்
பெறுமின் பெரியார்வாய்ச் சொல். = பெரியவர்கள் சொல்லும் சொற்களை
மற்றவற்றில் சில சமயம் நாம் வழுவினாலும் வழுவுவோம். பெரியார் சொல்வதை கேட்பதில் இருந்து ஒரு காலும் வழுவக் கூடாது என்பதற்காக "எஞ்ஞான்றும்" என்ற சொல்லைப் போட்டு இருக்கிறார்.
ஒரு போதும் அவர்கள் சொல்வதை கேட்காமல் இருக்கக் கூடாது.
அறிவிலும், ஒழுக்கத்திலும் உயர்ந்தவர்களை கண்டு பிடிப்பதுதான் சிரமமாக இருக்கிறது.
இரண்டும் ஒரு சேர அமையப் பெற்றவர்கள் நாளும் அருகி வருகிறார்கள்.
தேடி கண்டு பிடிக்க வேண்டும்.
உயர்ந்த நூல் ஆசிரியர்கள்தான் எனக்குப் பெரியவர்கள். எப்போதும் உயர்ந்த விடயங்களை சொல்லித் தர தயாராக இருப்பார்கள்.
எடுக்கணும். படிக்கணும். அவ்வளவுதான்.
No comments:
Post a Comment