Pages

Sunday, September 19, 2021

ஒன்பதாம் திருமுறை - கொண்டும் கொடுத்தும்

 ஒன்பதாம் திருமுறை  - கொண்டும் கொடுத்தும் 


கடவுளை நம்புகிறவர்கள், நம்பி விட்டுப் போக வேண்டியது தானே. கடவுளை நம்பாதவர்களிடம் சென்று வாக்கு வாதம் செய்ய வேண்டியது. இவர்கள் நாலு கேள்வி கேட்க, அவர்கள் நாற்பது பதில் சொல்லுவார்கள். அந்த பதிலில் இருந்து நூறு கேள்வி பிறக்கும். இறுதியில் இருவரும் தங்கள் கொள்கைகளில் இருந்து மாறப் போவது இல்லை. மாறாக, அனாவசியமான சண்டையும், சச்சரவும், மனக் கசப்பும் மட்டுமே மிஞ்சும். 


ஆசிரியர் சொல்கிறார் "நீ கடவுளை நம்பவில்லையா, தள்ளிப் போ" என்று எதுக்கு அனாவசியமான தர்க்கம். நம்புகிறவர்கள் வாருங்கள். நம்பாதவர்கள் போய் விடுங்கள் என்கிறார். 


மேலும், நம் பண்பாட்டில், எந்த உறவாக இருந்தாலும், அது கொடுத்து வாங்கித்தான் பழக்கம். 


இறைவனாகவே இருந்தாலும், அவனிடம் எல்லாம் இருந்தாலும், நம்மிடம் இருப்பது எல்லாம் அவன் தந்தது என்றாலும், பக்தர்கள் இறைவனிடம்ஒன்று கேட்பதற்கு முன்னால், அவனுக்கு ஒன்றைத் தந்துவிட்டுத் தான் கேட்பார்கள். 


பாலும், தெளிதேனும், பாகும், பருப்பும் 

இவை நான்கும் கலந்து உனக்கு நான் தருவேன் - கோலம் செய் 

துங்கக் கரி முகத்து தூமணியே நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா 


என்பது ஔவையின் பாட்டு. 


நான் உனக்கு நாலு தருகிறேன், நீ பதிலுக்கு மூன்று தா என்று வேண்டுகிறாள். 

கேட்பது, வாங்குவது எல்லாம் கேவலம் என்று நினைக்கிறார்கள். 


அல்ல. கேட்டு, வாங்கிப் பாருங்கள். உறவு பலப்படும். நான் கொடுத்துக் கொண்டே இருப்பேன், கேட்க மாட்டேன். கொடுத்தாலும் வாங்க மாட்டேன் என்றால் உறவு பலவீனப் பட்டு விடும். 



கணவன், மனைவி உறவு என்றால் கூட, அன்பை கேட்டுப் பெற வேண்டும். நான் கேட்க மாட்டேன், நீயாகத் தர வேண்டும் என்று அடம் பிடித்துக் கொண்டு நின்றால் அன்பு ஒருகாலும் கிடைக்காது. 



சில பேர் கொடுத்தால் கூட வாங்குவது இல்லை. 



திருமணம், அல்லது வேறு ஏதாவது விசேடம் என்றால், அழைப்பிதழில் "நன்கொடை ஏற்றுக் கொள்ள பட மாட்டாது" (gifts not accepted) என்று அச்சடிக்கிறார்கள். 



அது சரி அல்ல. நான் தருவதை நீ ஏற்றுக் கொள்ளவிட்டால், நீ தரும் உபசரிப்பை நான் ஏன் ஏற்றுக் கொள்ள வேண்டும்? 



இறைவனுக்கு ஒரு பழம், ஒரு வெற்றிலை, ஒரு ரூபாய் உண்டியலில் போடுவது என்று ஏதோ ஒன்றை கொடுக்கும் குணம் உள்ளவர்கள் நம்மவர்கள். 



இறைவனோடு அப்படி ஒரு அன்யோன்ய உறவு.  ஒன்றும் இல்லை என்றால், முடியை காணிக்கையாக கொடுக்கிறார்கள். நம் முடியை வைத்து இறைவன் என்ன செய்யப் போகிறான்? அது அல்ல கேள்வி. 


நம்மைப் பொறுத்தவரை அது ஒரு அடையாளம். என்னையே உன்க்குத் தருகிறேன் என்பதன் குறியீடு. மொட்டை அடித்தால் அடையாளம் மாறிப் போய் விடுகிறது அல்லவா?



"கொண்டும் கொடுத்தும் வழி வழியாக இறைவனுக்கு தொண்டு செய்யுங்கள்" என்கிறார். 


பாடல் 


மிண்டு மனத்தவர் போமின்கள்

    மெய்யடியார்கள் விரைந்து வம்மின்

கொண்டும் கொடுத்தும் குடிகுடி யீசற்காட்

    செய்மின் குழாம்புகுந்

தண்டங்கடந்த பொருள்அள வில்லதோர்

    ஆனந்த வெள்ளப்பொருள்

பண்டும் இன்றும் என்றும் உள்ளபொருள் என்றே

    பல்லாண்டு கூறுதுமே 


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/09/blog-post_19.html


(Please click the above link to continue reading)




மிண்டு = எதிர் வாதம் பேசுபவர்கள். இன்றும் கூட மலையாளத்தில் "நீ மிண்டாதிரு" என்று கூறுவார்கள். நீ எதிர் பேசாமல் இரு என்று பொருள். 


மனத்தவர் = எதிர்வாதம் பேசும் மனம் உள்ளவர்கள். 


போமின்கள் = போய் விடுங்கள். உங்களோடு பேச எங்களுக்கு ஒன்றும் இல்லை 


மெய்யடியார்கள் = உண்மையான அடியவர்கள் 


விரைந்து வம்மின் = விரைந்து வாருங்கள் 


கொண்டும் = பெற்றுக் கொண்டும் 


கொடுத்தும் = கொடுத்தும் 


குடிகுடி = வழி வழியாக 


யீசற்காட் செய்மின் = ஈசனுக்கு ஆட்பட்டு தொண்டு செய்யுங்கள் 


 குழாம்புகுந்து  = கூட்டமாகச் சென்று 


அண்டங் கடந்த பொருள் = அண்டங்களை கடந்த அந்தப் பரம் பொருள் 


அள வில்லதோர் = அளவிட முடியாத 


ஆனந்த வெள்ளப்பொருள் = ஆனந்த வெள்ளமான அந்தப் பொருள் 


பண்டும் = பழம் காலம் தொட்டும் 


இன்றும் = இன்றும் 


என்றும் = என்றும் 


உள்ளபொருள் = நிரந்தரமாய் உள்ள பொருள் 


என்றே = என்று 


பல்லாண்டு கூறுதுமே  = பல்லாண்டு கூறுங்கள். 



ஆழ்ந்த கருத்துகள் கொண்ட பாடல்களை கொண்டது ஒன்பதாம் திருமுறை. பல அடியார்கள் எழுதியவற்றின் தொகுப்பு. 


மூல நூலை தேடி படித்துப் பாருங்கள். 


அத்தனையும் தேன்.


1 comment: