Pages

Friday, September 17, 2021

திருக்குறள் - பிள்ளைகளால் வரும் பயன்கள்

திருக்குறள் - பிள்ளைகளால் வரும் பயன்கள் 


பிள்ளைகளை எதற்கு பெற்றுக் கொள்ள வேண்டும்? இல்லறம் சரி. அதை நடத்த ஒரு துணை வேண்டும் சரி. பிள்ளைகள் எதற்கு ?


இதற்கு பரிமேலழகர் வழியில் சென்று அறிவோம். 


எந்த ஒரு செயலுக்கும் ஒரு பயன் வேண்டும். பயனில்லாத காரியத்தை செய்யவே கூடாது. 


திருக்குறள் முழுவதிலும் இரண்டு விதமான பயன்களைப் பற்றி வள்ளுவர் கூறுவார். 


ஒன்று இம்மைப் பயன். மற்றது மறுமைப் பயன். 


ஒன்று இந்தப் பிறவியில் பயன் தர வேண்டும். அல்லது மறு பிறவியில் பயன் தர வேண்டும். இரண்டிலும் தந்தால் ரொம்ப நல்லது. 


குறள் 


தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்

தம்தம் வினையான் வரும்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/09/blog-post_56.html


(Please click the above link to continue reading)



தம்பொருள் = ஒருவருடைய பொருள்


என்ப  = என்று கூறுவார்கள் 


தம் மக்கள் = ஒருவருடைய பிள்ளைகளை 


அவர் பொருள் = அந்தப் பிள்ளைகளின் பொருள் 


தம்தம் = அவர்கள் செய்யும் 


வினையான் வரும் = வினையால் வரும் 


ஒரே குழப்பமாக இருக்கிறது அல்லவா? 


பெரும் பெரும் உரை ஆசிரியர்களும் குழம்பி இருக்கிறார்கள் இந்தக் குறளில். பல் வேறு விதமான உரைகள் இருக்கின்றது இந்தக் குறளுக்கு. 


நாம் பரிமேலழகரை பிடித்துக் கொள்வோம். 


ஒருவனுக்கு பொருள் என்று சொன்னால் அது அவனது பிள்ளைகள் தான். இங்கே பொருள் என்பது ஏதோ திடப் பொருள் அல்ல. இங்கே பொருள் என்பது அர்த்தம் என்று கொள்ள வேண்டும். 


"போற்றி என் வாழ் முதலாகிய பொருளே "


என்பார் மணிவாசகர். 


அது வரை புரிகிறது. 


"அவர் பொருள் தம் தம் வினையான் வரும் " 


என்றால் என்ன அர்த்தம்?


பரிமேலழகர் இல்லாவிட்டால் இதெல்லாம் புரியாது. 


"அவர் பொருள்" என்றால் அந்தப் பிள்ளைகளின் பொருள் 


அந்தப் பிள்ளைகளின் பொருள் அவர்கள் செய்யும் நல் வினையால் ஒருவனுக்கு வந்து சேரும் என்கிறார்.


ஒரு தந்தை இருக்கிறார். அவருக்குப் பின், அவரது மகன் பல நல்ல காரியங்களைச் செய்கிறான். அந்த நல்ல காரியத்தின் பலன் தந்தைக்கும் வந்து சேரும் என்கிறார். 


அவர் பொருள் (மகனின் பொருள்)

தம் தம் வினையான் (அவர்கள் செய்யும் நல் வினையால்)

வரும் (தகப்பனிடம் வரும்)


என்று பொருள் கொள்ள வேண்டும். 


தந்தை இறந்து பின் மறு பிறவி எடுத்து இருக்கலாம். அந்தத் தந்தையின் மகன் தற்போது செய்யும் நல்ல வினைகளின் பலன், மறு பிறவியில் உள்ள தந்தைக்குப் போய்ச் சேரும் என்கிறார். 


இது மறுமைப் பயன். 


இதற்கு முந்தைய குறளில் 


எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்

பண்புடை மக்கட் பெறின்.


என்றார். ஏழு பிறப்பும் தீமை தீண்டாது என்று அங்கும் மறுமைப் பயன் பற்றிக் கூறினார். 


எனவே இந்த இரண்டு குறளிலும், நன் மக்களைப் பெறுவதின் மறுமைப் பயன் பற்றிக் கூறி உள்ளார் என்று கொள்க. 


இது என்னய்யா பெரிய ரீல் ஆக இருக்கிறது. 


மறு பிறவி, நல் வினை, ஏழு பிறப்பு...இதெல்லாம் நம்பும் படியே இல்லையே.  திருக்குறள் ஏதோ மூட நம்பிக்கையின் இருப்பிடம் மாதிரி தெரிகிறதே என்று சிலர் நினைக்கலாம். 


நம்ப வேண்டாம். 


பெற்று வளர்த்த பெற்றோரின் நினைவாக ஒரு சில நல்ல காரியம் செய் என்று வள்ளுவர் சொல்கிறார் என்று வைத்துக் கொள்ளலாமே. பலன் பெற்றோருக்கு கிடைக்கிறது, கிடைக்காமல் போகிறது. அது ஒரு பக்கம் இருக்கட்டும். நல்லது செய்தால் என்ன குறைந்து விடப் போகிறோம்?


என்ன சரிதானே?



1 comment:

  1. "படித்தோம், அறிந்த்தோம், விட்டோம்" - அவ்வளவுதான் இந்தக் குறளுக்கு.

    ReplyDelete