Pages

Sunday, October 3, 2021

நாலாயிர திவ்ய பிரபந்தம் - கண்டு இன்பக் கலவி எய்தி

 நாலாயிர திவ்ய பிரபந்தம் - கண்டு இன்பக் கலவி எய்தி 


இறைவன் எல்லாம் வல்லவன். அவனுக்கு எல்லாம் தெரியும் என்றாலும், அவன் மேல் பக்தி, பக்தி என்று கூட சொல்லமுடியாது, ஒரு காதல், கொள்ளும் பக்தர்கள், அவனுக்கு ஏதேனும் ஆபத்து வந்து விடுமோ என்று பதறுவது, வைணவ இலக்கியத்தில் நாம் காணும் காட்சி. 



கணவன் பட்டாளத்தில் பெரிய வேலையில் இருப்பார். அவர் போகும் போது முன்னால் நாலு வண்டி, பின்னால் நாலு வண்டி பாதுகாப்புக்கு போகும். அவர் கண் அசைத்தால் பெரிய படையே நகரும். இருந்தும் அவர் வெளியே போய்விட்டு வரும் வரை, மனைவிக்கு கவலையாகத்தான் இருக்கும். அவருக்கு ஒண்ணும் ஆகி விடக் கூடாதே என்று. 


அது அன்பின் அடையாளம் . காதலின் வெளிப்பாடு. 


அதே அன்பை, அன்யோன்யத்தை, காதலை பிரபந்தத்தில் பல இடத்தில் காணலாம். இப்படி கூட அன்பு இருக்குமா என்று வியக்க வைக்கும் நம்மை. 


குலசேகர ஆழ்வார் நினைக்கிறார், 


"பெருமாளுக்கு ஏதாவது தீங்கு வந்து விடுமோ? எதற்கும் ஒரு முறை போய் பார்த்து விட்டு வந்து விடுவோம். ஹ்ம்ம்...அவர் கையில் கூரிய அம்புகள் இருக்கிறது, அதை செலுத்தும் பெரிய சாரங்கம் என்ற வில் இருக்கிறது.  அது போதுமா? அம்பு ஒரு தூரத்துக்குத் தான் போகும். அதற்கு அப்பால் ஏதாவது துன்பம் , தீங்கு வந்து விட்டால்? ...கையில சக்கரம் இருக்கு. அது எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் போகும். இது இரண்டும் போதுமா? அது போக கதையும் இருக்கு, அதுக்கும் மேல ஒரு வாளும் இருக்கு. ரொம்ப தூரம் போக வேண்டும் என்றால் அதுக்கு கருடன் இருக்கு. இது எல்லாம் என் பெருமாளை காப்பாற்றும். அவருக்கு ஒரு துன்பமும் வராது. அப்பாட, நிம்மதி" என்று நிம்மதி பெருமூச்சு விட்ட பின், சுற்றி வர பார்க்கிறார். 


அவர் இருக்கும் இடம் திருவரங்கம். எங்கு பார்த்தாலும் சோலை. வயல். பச்சை பசேல் என்று இருக்கிறது. நீர் வளம் நிரம்பி இருக்கிறது. வயக்காட்டில் உள்ள நீரில், மீன்கள் துள்ளி விளையாடுகின்றன. பெருமாள் அரவணையில் பள்ளி கொண்டிருக்கிறார். பார்க்க பார்க்க அவருக்கு ஆனந்தம் தாளவில்லை. அப்படியே ஓடிப் போய் கட்டி பிடித்துக் கொள்ள மாட்டோமா என்று மனம் காதலில் மிதக்கிறது. 


எனக்கு அந்த பாக்கியம் கிடைக்குமா என்று கிடைக்குமோ என்று ஏங்குகிறார். 


பாடல் 




கோலார்ந்த நெடுஞ்சார்ங்கம் கூனற் சங்கம் கொலையாழி கொடுந்தண்டு கொற்ற வொள்வாள்


காலார்ந்த கதிக்கருட னென்னும் வென்றிக் கடும்பறவை யிவையனைத்தும் புறஞ்சூழ் காப்ப


சேலார்ந்த நெடுங்கழனி சோலை சூழ்ந்த திருவரங்க தரவணையில் பள்ளி கொள்ளும்


மாலோனைக் கண்டின்பக் கலவி யெய்தி வல்வினையே னென்றுகொலோ வாழும் நாளே


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/10/blog-post.html


(Please click the above link to continue reading)




கோலார்ந்த = கூரிய அம்புகள் உள்ள 


நெடுஞ்சார்ங்கம் = பெரிய சாரங்கம் என்ற வில் 


கூனற் சங்கம் = வளைந்த சங்கு 


கொலையாழி = சக்கரம் 


கொடுந்தண்டு = தண்டாயுதம் 


கொற்ற வொள்வாள் = வெல்லும் வாள் 


காலார்ந்த = காற்றில் 


கதிக்கருட னென்னும்  = வேகமாகச் செல்லும் கருடன் என்ற 


வென்றிக் கடும்பறவை = வெற்றி பெறும் சிறந்த பறவை 


யிவையனைத்தும் = இவை அனைத்தும் 


புறஞ்சூழ் காப்ப = சுற்றி இருந்து காவல் செய்ய 



சேலார்ந்த = மீன்கள் நிறைந்த 


நெடுங்கழனி = பெரிய கழனி 


சோலை = சோலைகள் 


சூழ்ந்த = சூழ்ந்த 


திருவரங்க தரவணையில் = திருவரங்கத்தில், பாம்பு அணையில் 


பள்ளி கொள்ளும் = பள்ளி கொள்ளும் 


மாலோனைக் = திருமாலை 


கண்டின்பக் கலவி யெய்தி = கண்டு இன்பக் கலவி எய்தி 


வல்வினையே னென்றுகொலோ = வலிய வினையை உடைய நான் என்றோ 


வாழும் நாளே = வாழும் நாளே 





1 comment:

  1. ஒரு தூரிகை கொண்டு வரைந்த ஓவியம் போல இருக்கிறது இந்தப் பாடலின் காட்சி.

    நன்றி.

    ReplyDelete