Pages

Monday, October 4, 2021

திருக்குறள் - எப்படி பிள்ளைகளை வளர்ப்பது ?

 திருக்குறள் - எப்படி பிள்ளைகளை வளர்ப்பது ?


எப்படி பிள்ளைகளை வளர்ப்பது என்று தெரியாமலேயே பிள்ளைகளை பெற்றுக் கொள்கிறோம். நாம் எப்படி வளர்ந்தோம் என்றும் தெரிவதில்லை. எது சரி, எது தவறு என்று தெரியாமலேயே பிள்ளைகளை வளர்க்கிறோம். 


ஏதோ பள்ளிக்கு அனுப்பினோம், கல்லூரிக்கு அனுப்பினோம், வேலை தேடிக் கொண்டார்கள், திருமணம் செய்து வைத்தோம்...அத்தோடு நம் வேலை தீர்ந்தது என்று பெரும்பாலான பெற்றோர்கள் நினைக்கிறார்கள். 


வேறு சிலரோ, பிள்ளைக்கு அவ்வளவா படிப்பு வரல. என்ன பண்றது. கொஞ்சம் சொத்து சேர்த்து வைத்து விட்டுப் போவோம். நமக்குப் பின் பிள்ளை துன்பப் படாமல் இருக்கட்டும் என்று நினைப்பார்கள். 


பிள்ளை வளர்ப்பை எங்கு போய் படிப்பது ?


ஒரு வரியில் வள்ளுவர் சொல்லித் தருகிறார். 


"பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்றால், அவர்கள் வளர்ந்த பின், கற்றறிந்த சான்றோர் அவையில் அவர்களுக்கு முதலிடம் கிடைக்க வேண்டும்...அப்படி பிள்ளைகளை வளர்க்க வேண்டும் " என்கிறார். 


பாடல் 


தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து

முந்தி யிருப்பச் செயல்



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/10/blog-post_4.html


(please click the above link to continue reading)



தந்தை = தந்தை 


மகற்கு = மகனுக்கு 


ஆற்றும் நன்றி = செய்யும் உதவி 


அவையத்து = உலகில் 


முந்தி யிருப்பச் செயல் = மகனை முந்தி இருக்கும் படி செய்வது. 


அவையம் என்றால் உலகம். 


உலகில் பல தீயவர்கள், கொடியவர்கள், தீவிரவாதிகள் இருக்கிறார்கள். அவர்கள் போற்றும் பெரிய கொள்ளைக்காரனாக இருந்தால் பரவாயில்லையா?  டான் (Don), பாஸ் (Boss) என்று சொல்கிறார்களே அது ஒரு பெருமையா?


அவையம் என்பதற்கு பரிமேலழகர் சொல்கிறார் "கற்றார் அவையின்கண் ". படித்தவர்கள் நிறைந்த அவை என்கிறார். 


"முந்தி இருப்பச் செயல் " என்றால் என்ன? முதல் வரிசையில் இடம் போட்டு வைப்பதா?  


"அவரினும் மிக்கு இருக்குமாறு கல்வியுடையன் ஆக்குதல்"


என்கிறார். 


கற்று அறிந்தவர்கள் சபையில், அவர்களை விட அறிவில் மிகுந்தவனாக இருக்கும் படி செய்வது என்கிறார். 


ஏதோ பள்ளியில், கல்லூரியில் முதல் மாணவனாக வருவது அல்ல. 


கற்று அறிந்தவர்கள் உள்ள எந்த சபைக்கு சென்றாலும், அவர்களை விட இவன் அறிவில் மிகுந்தவனாக இருக்கும் படி செய்வது. 


எவ்வளவு பெரிய வேலை. 



"தந்தை மகற்குஆற்றும் நன்றி " என்ற தொடரில், 'நன்றி' என்ற சொல்லுக்கு 'உதவி' என்று பொருள் கொள்கிறார் பரிமேலழகர். 


தந்தை உதவி செய்ய வேண்டும். படிப்பது பிள்ளையின் கையில். 


பிள்ளை பெறுவதற்கு முன் , பிள்ளை பெற்றால் அவனை கல்வியில் உயர்ந்தவனாகச் செய்ய முடியுமா என்று கேட்டுக் கொண்டு, முடியும் என்றால் பிள்ளை பெற்றுக் கொள்ள வேண்டும். 


ஒரு வரி. கால காலத்துக்குமான உபதேசம். 


பரிமேலழகர் அதோடு நிற்கவில்லை. 


பிள்ளைக்கு நாலு காசு சேர்த்து வைத்தால், அது உதவி இல்லையா? படிப்பு மட்டும்தானா உதவி என்று சிலர் கேட்கலாம். 



"பொருளுடையான் ஆக்குதல் முதலாயின துன்பம் பயத்தலின் நன்மை ஆகா என்பது கருத்து."


என்கிறார் பரிமேலழகர். 


பிள்ளையை நிறைய செல்வம் சேர்க்க சொல்லிக் கொடுத்தால், அது துன்பம் தருவது என்கிறார். 


பணம் சம்பாதிப்பது துன்பம். அதை பாதுகாப்பது துன்பம். முதலீடு செய்தால் பத்திரமாய் திரும்பி வர வேண்டுமே என்ற பயம்.வட்டி குறைந்தால் வருத்தம். வரும் வருமானத்துக்கு வரி போட்டால் துன்பம். மற்றவர்கள் அதிகம் சேர்த்து விட்டால், வரும் பொறாமை. 


"பொருளுடையான் ஆக்குதல் முதலாயின"


"முதலாயின" என்றதன் மூலம், பொருள், அதிகாரம், செல்வாக்கு, என்பன எல்லாம் துன்பம் தருவன என்கிறார். 


வியக்க வைக்கும் குறள். எவ்வளவு தெளிவான, ஆழமான குறள். 


படிப்போம். 


1 comment:

  1. இது எனக்கு மிகப் பிடித்த குறள்களில் ஒன்று.

    ஆனால், இதை படிக்கும்போது, தாய் இல்லையா, மகள் இல்லையா என்று கேட்காமல் இருக்க முடியவில்லை.

    எனக்கும் ஒரு மகள் இருக்கிறாள். அவள் தன் அறிவால், திறமையால் சிறந்து இருக்கும்போது என் நெஞ்சு பூரிக்கத்தான் செய்கிறது.

    ReplyDelete