திருக்குறள் - அன்பிலார் எல்லாம் தமக்குரியர்
அன்பு செலுத்துவது என்றால் என்ன?
கண்ணே, மணியே என்று கொஞ்சுவதா? வேண்டியது எல்லாம் வாங்கித் தருவதா? நல்லது கெட்டது சொல்லித் தருவதா?
ஒருவன் அன்புடையவன் என்று எப்படிச் சொல்வது?
இப்போதெல்லாம் அன்பு என்பது பண்டமாற்று என்று ஆகிவிட்டது. நீ எனக்கு என்ன செய்வாய், நான் உனக்கு இது செய்தால் என்ற கேள்வியில் வந்து நிற்கிறது. எதிர்பார்ப்பில்லாத அன்பு என்று ஒன்றே இல்லை என்று ஆகி விட்டது. அப்படி சொல்பவர்களை பைத்தியகாரர்கள் என்று உலகம் சொல்லத் தொடங்கி விட்டது.
கணவன் மனைவி அன்பில் கூட, யாருக்கு யார் எவ்வளவு செய்தார்கள் என்று கணக்கு பார்க்கும் காலம். "நான் என்ன வேலைக்காரியா", "நான் என்ன பணம் காய்க்கும் மரமா", என்றெல்லாம் பேசத் தொடங்கிவிட்டோம்.
பிள்ளை வளர்ப்பதில் கூட, வயதான காலத்தில் பார்த்துக் கொள்வான் என்ற எதிர்பார்ப்பு வந்து விட்டது.
வள்ளுவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்
பாடல்
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு
பொருள்
https://interestingtamilpoems.blogspot.com/2021/10/blog-post_20.html
(Please click the above link to continue reading)
அன்பிலார் = அன்பு இல்லாதவர்கள்
எல்லாம் = அனைத்தும்
தமக்குரியர் = தங்களுக்கு உரியது என்று நினைப்பார்கள்
அன்புடையார் = அன்பு உள்ளவர்கள்
என்பும் = தங்களுடைய எலும்பு கூட
உரியர் பிறர்க்கு = பிறர்க்கு உரியது என்று நினைப்பார்கள்
அன்பு இல்லாதவர்கள் எல்லாம் தனக்கு வேண்டும் என்று நினைப்பார்கள்.
அன்பு உள்ளவர்கள் அனைத்தும் பிறர்க்கு உரியது என்று நினைப்பார்கள்.
இப்படித்தான் நாம் மேலோட்டமாக பொருள் கொள்வோம்.
பரிமேலழகர் மிக ஆழமான பொருள் சொல்கிறார்.
"அன்பிலாதார் பிறர்க்குப் பயன்படாமையின் எல்லாப் பொருளானும் தமக்கே உரியர்"
அன்பு இல்லாதவர்களால் யாருக்கும் ஒரு பயனும் இல்லை. அவர்களிடம் யாரும் போக மாட்டார்கள். எனவே, எந்த விதத்தில் பார்த்தாலும், அவர்கள் தங்களுக்கு மட்டுமே உரியவர்கள்.
"என் கணவன்", "என் மனைவி", "என் அப்பா, அம்மா" என்று அவர்களை யாரும் கூற முடியாது. அவர்கள் மேல் யாரும் உரிமை கொண்டாட முடியாது. அவர்கள் யாருக்கும் உரியவர்கள் அல்ல. தமக்கே உரியர்.
காரணம், அவர்கள் ஒரு கணவனாக, மனைவியாக, தந்தையாக, தாயாக ஒன்றும் செய்ய மாட்டார்கள்.
நான் எப்போது ஒரு தந்தையாகிறேன்? என் பிள்ளைகளுக்கு வேண்டியதை செய்யும் போது, எனக்கு பசித்தாலும், பிள்ளை சாப்பிடட்டும் என்று அவன்/அவள் சாப்பிடுவதை கண்டு மகிழும் போது நான் தந்தையாகிறேன். அப்போது என் பிள்ளை சொல்லுவான் "...இவர் என் அப்பா" என்று.
அப்படிச் செய்யாமல், இருந்தால் என்ன ஆகும். பிள்ளைக்கு அப்பா மேல் பாசம் இருக்காது.
புரிகிறது அல்லவா?
சிலர் இருக்கிறார்கள். பணம் வேண்டுமா, எடுத்துக் கொண்டு போ. என்னை தொந்தரவு செய்யாதே. என் நேரம் எனக்கு முக்கியம். உனக்கு ஊர் சுற்ற வேண்டுமா, போய் கொள், என்னை விட்டு விடு. எனக்கு வேறு வேலை இருக்கிறது என்று தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருப்பார்கள்.
அது அன்பா?
வேண்டிய பணம் கொடுத்தேனே? படிக்க வைத்தேனே? பாட வைத்தேனே? உடை வாங்கிக் கொடுத்தேன், உணவு, நல்ல பள்ளிக் கூடம், கல்லூரியில் படிக்க வைத்தேன், கேட்கும் போதெல்லாம் பணம் கொடுத்தேன்...அது அன்பு இல்லையா என்றால் இல்லை என்கிறார் வள்ளுவர்.
அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு.
அன்பு இருந்தால், யார் மேல் அன்பு இருக்கிறதோ அவர்களுக்காக அவர்கள் என்ன கேட்டாலும் கொடுக்க வேண்டும். எலும்பையே கொடுப்பார்கள் என்கிறார்.
நேரத்தை கொடுக்க மாட்டேன் என்றால் அது அன்பு இல்லை.
மனைவிக்கு புடவை எடுக்க வேண்டும். கணவன் கூட வந்தால் நல்லா இருக்கும் என்று அவள் நினைக்கிறாள். "நான் வந்து என்ன செய்யப் போகிறேன்...நீயே போயிட்டு வா...காரை எடுத்துக் கொண்டு போ" என்று அனுப்பி விடுகிறான் கணவன்.
அன்பில்லை என்றுதான் அர்த்தம்.
சரியா தவறா என்பது வேறு விவாதம்.
அன்பு இருக்கிறதா இல்லையா என்றால், அன்பு இல்லை என்று அர்த்தம். அவ்வளவுதான்.
அன்பு இருந்தால், "இரு நானும் வருகிறேன்...கொஞ்சம் வேலை இருக்கு, அதை வந்து பார்த்துக் கொள்கிறேன்" என்று புறப்பட வேண்டும்.
அப்படிச் செய்தால், எப்பப் பார்த்தாலும் மனைவி பின்னேயே போய் கொண்டு இருக்க வேண்டியது தான். காய் கறி வாங்க, அழகு நிலையம் போக என்று. மற்ற வேலைகளை யார் பார்ப்பது என்றால், மனைவிக்கு அன்பு இருந்தால், அவள் அப்படி இழுத்துக் கொண்டு அலைய மாட்டாள்.
"என் கூட அவர் வந்தால் நல்லா இருக்கும். ஆனால், அவருக்கு தனிமை தேவைப் படுகிறது. என் சந்தோஷத்தை அவருக்காகத் தருகிறேன்" என்று அவளும் நினைக்க வேண்டும். என்பும் உரியர் பிறர்க்கு என்பது அவளுக்கும் பொருந்தும்.
இப்படி ஒருவற்கு ஒருவர் மாறி மாறி அன்பு செய்து கொண்டிருந்தால், இல்லறம் எவ்வளவு இனிமையாக இருக்கும்?
கணவன் மனைவி மட்டும் அல்ல.
சகோதர்கள் இடையில் அந்த அன்பு இருக்க வேண்டும்.
நாட்டை பரதனுக்கு கொடு என்றவுடன் இராமன் சொன்னான் "என் பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றது அன்றோ" என்று.
எலும்பையே கொடுக்கலாம் என்றால், இராஜ்யமா பெரிது? கொடுக்கலாம்தானே?
பாதி நாடு கொடு, இல்லை என்றால், ஐந்து ஊர் கொடு, இல்லை என்றால் ஐந்து வீடாவது கொடு என்று துரியோதனிடம் தர்மன் கேட்டான். "ஊசி முனை நிலமும் தர மாட்டேன்" என்றான் துரியோதனன்.
எல்லாம் தமக்கு உரியர்.
ஆழ்ந்த குறள்.
சிந்திப்போம். முடிந்தவரை கடைபிடிப்போம்.
உரை சற்றே நீண்டு விட்டது. மன்னிக்க.
பரிமேலழகர் சொல்லும் பொருள் நம்மை திடுக்கிட வைத்துச் சிந்திக்க வைக்கிறது. அருமையான விளக்க உரை தந்ததற்கு நன்றி.
ReplyDelete