திருக்குறள் - பாலையில் மரம் துளிர்த்த மாதிரி
அன்பு.
அன்பு செலுத்தவும், அன்பை பெற்றுக் கொள்ளவும் யாருக்குத்தான் விருப்பம் இல்லாமல் இருக்கும்.
எல்லோரும் அன்புக்கு வேண்டி இருக்கிறது. தரவும், பெறவும்.
இருந்தும், பெரும்பாலான குடும்பங்களில் அன்பு என்பது அரிதான ஒன்றாக இருக்கிறது.
என்ன செய்தாலும், யாருக்கும் என் மேல் அன்பே இல்லை என்று எல்லோரும் சொல்கிறார்கள்.
நான் என்ன குறை வைத்தேன், ஏன் என்னை யாருக்கும் பிடிப்பது இல்லை என்ற குறை எல்லோருக்கும் இருக்கிறது.
ஏன்?
வீட்டிலே ஒரு செடி இருக்கிறது. அதை அன்றாடம் பார்த்து, அதற்கு நீர் வார்த்துக் கொண்டே இருந்தால் அது நின்று வளரும், பூ பூக்கும், அழகாக இருக்கும்.
நமக்கு நேரம் கிடைக்கும் போது நீர் வார்ப்போம் என்றால், சில சமயம் அது பட்டுப் போய் விடும். பின் எவ்வளவு நீர் வார்த்தாலும் அது துளிர்க்காது.
நான் எவ்வளவு உரம் போட்டேன், நீர் வார்த்தேன் என்று சொல்லி பலன் இல்லை. அதற்கு வேண்டிய போது தர வேண்டும்.
வீடுகளில் பெரும்பாலும் அது தான் நிகழ்கிறது.
பிள்ளைக்கு, கணவனுக்கு, மனைவிக்கு அன்பு தேவைப் படுகிறது. நாம் அப்போது வேறு எதிலோ மும்முராக இருப்போம்.
வேலை, வியாபாரம், பயணம், தொழில் சம்பந்தமாக ஆட்களை பார்ப்பது, அது சம்பந்தமாக படிப்பது, என்று அலைந்து கொண்டு இருப்போம்.
எல்லாம் குடும்பத்துக்காகத் தான்.
ஆனால், குடும்பம் என்ற செடி அங்கே அன்பு என்ற நீர் இல்லாமல் வாடிக் கொண்டு இருக்கும்.
ஒரு நாள் முற்றுமாக வாடி விடும்.
அந்த சமயம் நம் வேலை எல்லாம் முடிந்து இருக்கும். சரி, இப்போது பார் எவ்வளவு தண்ணீர் விடுகிறேன் என்று அண்டா அண்டாவாக கொட்டினால் என்ன பயன்?
பிள்ளைகள் படித்து வெளியே போய் விடுவார்கள். கணவனுக்கோ, மனைவிக்கோ வயது ஏறி இருக்கும். வாழ்வை அனுபவிக்கும் இளமையும், துடிப்பும், வேகமும் போய் இருக்கும்.
இப்போது வந்து உரம் போடுகிறேன், நீர் ஊற்றுகிறேன் என்றால் என்ன செய்வது.
காலம் கடந்த ஞானோதயம்.
இல்லறம் என்ற பயிர் வளர அன்பு என்ற நீர் அவசியம்.
நீரை, பயிர் வேண்டும் போதெல்லாம் வார்க்க வேண்டும். நம்மால் முடிந்த போதெல்லாம் அல்ல.
காலம் தப்பிப் போனால், பயிர் வாடி விடும். பின் என்ன செய்தும் பயன் இருக்காது.
பாடல்
அன்புஅகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று
பொருள்
https://interestingtamilpoems.blogspot.com/2021/11/blog-post_69.html
(Please click the above link to continue reading)
அன்புஅகத்து இல்லா = அகத்தில், இல்லறத்தில், அன்பு இல்லாத
உயிர்வாழ்க்கை = உயிர் வாழ்க்கை
வன்பாற்கண் = வன்மையான பாலை நிலத்தில் அல்லது பாறையில்
வற்றல் = வாடிப் போன
மரந்தளிர்த் தற்று = மரம் தளிர்த்த மாதிரி
உரை எழுதிய பெரியவர்கள் எல்லோரும், "எப்படி பாலை நிலத்தில் வாடிய மரம் தளிர்காதோ அது போல அன்பு இல்லாத இல்லறம்" என்று தான் சொல்லி இருர்க்கிரார்கள்.
அதாவது, பாலை நிலத்தில் மரம் தளிர்ப்பது என்பது நடவாத ஒன்று. அது போல அன்பு இல்லாமல் இல்லறம் செய்ய முடியாது என்று தான் உரை எழுதி இருக்கிறார்கள்.
நான் அதை சற்று வேறு விதமாக சிந்தித்துப் பார்த்தேன்.
பாலை நிலம் எப்படி வந்தது?
மழை, நீர் இல்லாததால்.
அது போல அன்பு இல்லாததால் இல்லறம் பாலைவனமாகி விடும்.
அந்த பாலை நிலத்தில், ஒரு காலத்தில் செழித்து நின்ற மரம் இப்போது வாடி விட்டது.
அது போல இல்லறத்தில் இருந்தவர்கள் ஒரு காலத்தில் மகிழ்ச்சியாக இருந்தாலும், இப்போது இல்லை.
பின் மழை பொழிந்தாலும், மரம் தளிர்காதது போல், பின் எவ்வளவுதான் அன்பு செய்தாலும், இல்லறம் தளிர்காது.
அதை வாட விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
அதற்குதேவையான சமயத்தில் நீர் வார்க்க வேண்டும்.
அன்பு செலுத்தும் வாய்ப்புகளை தள்ளிப் போடக் கூடாது.
எப்போதேலாம் தேவை ஏற்படுகிறதோ, அப்போதே செய்து விட வேண்டும்.
அர்த்தம் பொருந்தி வருகிறதா?
உண்மைதான்!
ReplyDelete