Pages

Wednesday, January 12, 2022

திருக்குறள் - இன்சொல் - வாய்ச் சொல்

திருக்குறள் - இன்சொல் - வாய்ச் சொல் 


நமக்கு வந்த சிக்கல்கள் பெரும்பாலானவற்றிற்கு காரணம் நமது பேச்சாக இருக்கும். தவறாக பேசி விடுவது, கோபத்தில் எதாவது பேசி விடுவது, தகாத வார்த்தைகள், பொய், திரித்து கூறுவது, புறம் சொல்லுவது, வெட்டிப் பேச்சு என்று அனைத்து சிக்கல்களுக்கும் மூல காரணம் நாம் சொல்லிய சொலாக இருக்கும். அது மட்டும் அல்ல பேசத் தெரியாமல் பேசி நமக்கு வரவேண்டிய அருமையான வாய்ப்புகளை நாமே கெடுத்து கொண்டிருப்போம். 


அதிகாரிகளிடம், கணவன்/மனைவியிடம், பிள்ளைகளிடம், சில சமயம் நண்பர்கள் மத்தியில், தவறான சொற் பிரயோகங்கள் நம்மை சிக்கலில் ஆழ்த்தி இருக்கும். 


இனிமையாக பேசத் தெரிந்து கொண்டால், வாழ்க்கை மிக இனிமையாக இருக்கும். முன்னேற்றம் வரும். வாய்புகள் நம்மைத் தேடி வரும். உறவுகள் பலப்படும். 


இனிமையாக பேசுவது என்றால் என்ன? எல்லோரிடமும் பல்லைக் காண்பிப்பதா? எல்லோர் சொல்ல்வதற்கும் ஆமாம் சாமி போடுவதா? உண்மையை மறைத்து பூசி மெழுகுவதா?


இல்லை. 


இனிமையாக பேசுவது என்பது ஒரு கலை. 


அதை வள்ளுவர் கற்றுத் தருகிறார். 


மிக ஆழ்ந்து படிக்க வேண்டிய, வாழ்வில் கடை பிடிக் வேண்டிய அதிகாரம். 



பாடல் 


இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம்

செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/01/blog-post_12.html

(Please click the above link to continue reading)


இன்சொலால் = இன்சொல் + ஆல் = இனிய சொல் என்பது. (ஆல் என்பது அசை நிலை) 


ஈரம்   = அன்பு  


அளைஇப் = கலந்து 


படிறிலவாம் = வஞ்சனை இல்லாத 


செம்பொருள் = செம்மையான பொருளைக் 


கண்டார்வாய்ச் சொல் = கண்டவர்கள் வாயில் இருந்து வரும் சொற்கள் 


மிக ஆழமான குறள். 


ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.


முதலாவது, நாம் சொல்கின்ற சொற்களில் அன்பு இருக்க வேண்டும். ஒருவர் மேல் அன்பு இல்லாமல் பேசக் கூடாது. அவர் மேல் அன்பு இருந்தாலும், சொல்லில் அன்பு இருக்க வேண்டும். அன்போடு பேச வேண்டும். 


நம்மிடம் உள்ள குறை என்ன என்றால், அன்பு இருக்கும், ஆனால் அது சொல்லில் வராது. உதாரணமாக, பிள்ளை மேல் அளவு கடந்த அன்பு இருக்கும். ஆனால், "எருமை, படிக்காம ஊர் சுத்திக் கொண்டு இருந்தால் நீ மாடு மேய்க்கத் தான் போற" என்று சொல்லுவோம். மனதில் அன்பு இருக்கும். சொல்லில் இல்லை. எனவே, அது இனிய சொல் இல்லை. 


வீட்டில் பெரும்பாலான ஆண்கள் சொல்வது, "நான் யாருக்காக உழைக்கிறேன். இந்த குடும்பதுக்காகத்தானே உழைக்கிறேன். ஏன் என்னை புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்" என்பது. அவர்கள் நினைப்பது, கஷ்டப்பட்டு பணம் சம்பாதித்தால் அது அன்பின் வெளிப்பாடு என்பது. 


போதாது. அன்பு என்பது சொல்லில் வர வேண்டும். மனைவிடம், குழந்தையிடம் அன்பாக பேச வேண்டும். மனைவிக்கும் தான். கணவனிடம் அன்பாக பேசி பழக வேண்டும். 


இரண்டாவது, படிறு இலவாம். சொல்லில் வஞ்சனை இருக்கக் கூடாது. உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசக் கூடாது. அதற்காக மனதில் உள்ள வெறுப்பை சொல்லில் காட்டலாமா என்றால் அதுவும் கூடாது. மனதில் அன்பு இருக்க வேண்டும். அது சொல்லில் வெளிப்பட வேண்டும். 


"செம்பொருள் கண்டார் வாய்ச் சொல்". இது மிக முக்கியம். எது செம்மையான பொருள்? உயர்ந்த பொருள்கள். இம்மைக்கும், மறுமைக்கும் பயன் தரும் பொருள்கள். அதை எப்படி அறிந்து கொள்வது. பரிமேலழகர் உரை செய்யும் போது கூறுவார் "அறநெறி கண் நிற்பவர்களுக்கு மனதில் தோன்றுவது எல்லாமே செம்பொருள் " என்று.  அதாவது, எப்போதும் அறநெறியை கடைப் பிடித்தால், செம்பொருள் காண முடியும். அப்படி செம்பொருளை கண்டவர்கள் வாயில் இருந்து வரும் சொல் இனிய சொல். 


எனவே, நாம் இனிய சொல்லை பேச வேண்டும் என்றால் முதலில் அறநெறியில் நாம் நிற்க வேண்டும். செய்வது எல்லாம் அயோக்கியத்தனம் என்றால் இனிய சொல் எப்படி வரும். அப்படியே வந்தாலும், அதில் வஞ்சனை கலந்து இருக்கும். அற நெறியில் நின்றால் வஞ்சன தானே போய் விடும். பின், சொல்லில் அன்பு கலந்தால் போதும். 


அது "வாய்ச் சொல்". சொல் என்றாலே வாயில் இருந்து வருவது தானே. மூக்கில் இருந்தா வரும். "செம்பொருள் கண்டார் சொல்" என்று சொல்லி இருக்கலாமே?


நமது வாயில் இனிய சொல்லும் வரலாம், இனிமை இல்லாத சொல்லும் வரலாம். ஆனால், செம்பொருள் கண்டவர்கள் வாயில் இருந்து தீச் சொல் வராது என்பதால் "வாய்ச் சொல்" என்று கூறினார் என்று பரிமேலழகர் உரை செய்வார். 


"தீயசொல் பயிலா என்பது அறிவித்தற்கு."


இனிய சொல் என்றால் என்பதற்கு இலக்கணம் வகுக்கிறார் வள்ளுவர். 


அன்பு கலந்து 

வஞ்சனை இல்லாமல் 

அறநெறி நிற்பவர்கள் 


வாய்ச் சொல்லே இனிய சொல் என்று. 


அப்படி என்றால் நாம் பேசுவது எவ்வளவு இனிமை என்று நாம் அறிந்து கொள்ளலாம். 


இனிய சொல் பேசுவது என்பது ஒரு தவம். 


பயில வேண்டும். 



No comments:

Post a Comment