Pages

Monday, January 17, 2022

திருக்குறள் - சொல்லும், பொருளும்

திருக்குறள் - சொல்லும், பொருளும் 


ஒருவருக்கு உதவி செய்வது என்றால் எது உயர்ந்த உதவி ? - அவருக்கு பொருள் உதவி செய்வதா அல்லது அவருக்கு நாலு நல்ல வார்த்தை சொல்வதா? 


வாய் வார்த்தையில் என்ன பலன்? அதை கொண்டு போய் வங்கியிலா போட முடியும்? பொருள் உதவி தான் உயர்ந்தது என்று நாம் நினைப்போம். 


வள்ளுவர் அப்படி நினைக்கவில்லை. பொருள் உதவியை விட இனிய சொல் உயர்ந்தது என்கிறார். 


ஏன் அப்படிச் சொல்கிறார்? அப்படி என்றால் உதவி என்று வந்தவர்களுக்கு எல்லாம் நாலு நல்ல வார்த்தை சொல்லி அனுப்பி விடலாமே. செலவு மிச்சம். அப்படித்தானே வள்ளுவர் சொல்கிறார் என்று நினைக்கத் தோன்றும். பரிமேலழகர் இல்லாவிட்டால் நாம் இது போன்ற குறள்களை தவறாக பாடம் பண்ணிக் கொண்டு தவறான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்போம். 


இன்றும், பள்ளிகளில் சரியான முறையில் சொல்லித் தருகிறார்களா என்று தெரியவில்லை. பரிமேலழகர் உரை இல்லாமல் சொன்னால், அது தவறாகத்தான் இருக்கும். 


இன்றைய குறளை படிக்கும் முன், முந்தைய குறளை ஒரு முறை வாசித்து விடுவோம். 


இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம்

செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்


அதாவது, "இன்சொல் என்பது என்ன என்றால் அன்பு கலந்து, வஞ்சனை இல்லாத அற நெறிக்கண் நிற்பவர்களின் (செம்பொருள் கண்டார்) வாயில் இருந்து வரும் சொற்கள்" 


என்று பார்த்தோம். 


இனி, இன்றைய குறளுக்குள் போவோம். 


பாடல் 


அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனஅமர்ந்து

இன்சொலன் ஆகப் பெறின்



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/01/blog-post_17.html


(please click the above link to continue reading)



அகன் = அகம், உள்ளம் 


அமர்ந்து = மகிழ்ந்து 


 ஈதலின் = ஒருவருக்கு ஒன்றை கொடுப்பதை விட 


 நன்றே = நல்லது 


முகனஅமர்ந்து = முகம் மலர்ந்து 


இன்சொலன் ஆகப் = இனிய சொல்லை சொல்பவனாக 


பெறின் = பெற்றால் 


நேரடியான பொருள் புரிகிறது. பொருளைக் கொடுப்பதை விட இனிய சொல் சொல்வது சிறந்தது என்கிறார்.  


சொல்லுக்கும் அர்த்தம் புரிகிறது. 


ஆனால், அது எப்படி பொருளை விட சொல் சிறந்ததாக இருக்க முடியும்?


ஆயிரம் அகராதி எடுத்துப் படித்தாலும், இதற்கு மேல் நமக்கு விளங்காது. 


பரிமேலழகர் போன்ற உரை ஆசிரியர்கள் இல்லாமல் இது போன்ற குறள்களை புரிந்து கொள்வது மிகக் கடினம். 


பரிமேலழகர் சொல்கிறார் 


"இனிய சொல் என்றால் என்ன என்பதை முந்திய குறளில் பார். அங்கே என்ன சொல்லி இருக்கிறது?  அன்பு கலந்து, வஞ்சனை இல்லாமல் அற நெறியில் நிற்பவர் சொல் தான் இனிய சொல் என்று சொல்லி இருக்கிறது அல்லவா? எனவே, பொருளை விட அப்படிப் பட்ட இன் சொல் சிறந்தது"   


என்று.


கொஞ்சம் புரிந்தது போல இருக்கிறது. .


இனி நாம் அதை விரித்துப் பார்ப்போம். 


நமக்கு ஒரு பொருளாதார சிக்கல். அவசரமாக கொஞ்சம் பணம் வேண்டும். 


ஊரிலேயே பெரிய அயோக்கியன் ஒருவன் இருக்கிறான். அவனிடம் கேட்டால் தந்து விடுவான். போய் வாங்கிக் கொள்ளலாமா? அல்லது கந்து வட்டி,மீட்டர் வட்டி என்று வட்டிக்கு பணம் தரும் ஒரு லோக்கல் தாதா இருக்கிறான். அவனிடம் சென்று பொருள் பெற்றுக் கொள்ளலாமா? 


புரிகிறது அல்லவா?


தீயவர்களிடம் சென்று பொருள் உதவி பெறுவது பின்னால் நம்மை பெரிய ஆபத்தில் கொண்டு போய் விடும். 


மாறாக, ஒரு நல்ல மனிதர் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவரிடம் போகிறோம். அவரிடம் பணம் இல்லை. ஆனால், அவர் நம் பிரச்சனையை நன்றாக கேட்டு, அதை புரிந்து கொண்டு, அந்த சிக்கலை சமாளிக்க ஒரு வழி சொல்லித் தருகிறார். அவர் நம் மேல் அன்பு உள்ளவர். வஞ்சனை இல்லாதவர். அற நெறியில் நிற்கும் நல்ல மனிதர். அவர் சொல்வது சரியாகத்தான் இருக்கும்.


இப்போது யோசித்துப் பார்ப்போம். பொருள் சிறந்ததா அல்லது இன் சொல் சிறந்ததா?


ஓரளவுக்கு ஏற்றுக் கொள்ள கூடியதாக இருந்தாலும், மனம் ஏனோ ஏற்க மறுக்கிறது அல்லவா. 


ஒரு உதாரணம் சொல்கிறேன். தற்பெருமைக்காகவோ அல்லது நான் ஒரு அற நெறியில் வாழ்பவன் என்று சொல்லிக் கொள்ளவோ அல்ல. ஒரு உதாரணம் என்று மட்டும் இதைப் பார்க்க வேண்டும். 


என்னுடைய நெருங்கிய நண்பர் புதிது புதிதாக கார் வாங்குவதில் மிகுந்த நாட்டம் உள்ளவர். சந்தையில் எந்த புதிய கார் வந்தாலும், அதை வாங்க வேண்டும். அதை ஓட்ட வேண்டும் என்பதில் அவருக்கு தீராத காதல். எந்த கார் வாங்கினாலும், ஓரிரண்டு ஆண்டுகள் வைத்து இருப்பார். பின் விற்று விட்டு மேலும் கொஞ்சம் பணம் போட்டு இன்னொரு கார் வாங்குவார். 


தவறு இல்லை. அவர் ஆசை அப்படி. 


ஒருமுறை என்னிடம் வந்து புதிதாக வந்திருக்கும் ஒரு கார் வாங்க கொஞ்சம் பணம் வேண்டும், எப்படி பணத்தை புரட்டுவது என்று என்னிடம் கேட்டார். 


நானும் அவரும் ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தோம். 


எனக்கு இருக்கும் அதிகாரத்தில் அவருக்கு ஒரு loan sanction பண்ணி இருக்க முடியும். என்னிடம் இருக்கும் பணத்தை அவருக்கு கொடுத்து இருக்க முடியும். அல்லது வேறு எங்கு பணம் பெற முடியும் என்று வழி காட்டி இருக்க முடியும். 


நான் அவரிடம் சொன்னேன் "இப்படி அடிக்கடி கார் வாங்குவது உன் பொருளாதார நிலைக்கு ஏற்றது அல்ல. உனக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. அவர்களின் படிப்பு, எதிர்காலம் இருக்கிறது. இருந்கின்ற கொஞ்சம் பணத்தை ஒரு வீட்டில் முதலீடு செய். மீதி பணத்துக்கு ஒரு வீட்டு loan வாங்கு. கொஞ்சம் கொஞ்சமாக வாங்கிய கடனை அடைத்து விடலாம். உனக்கு ஒரு வீடு இருக்கும்" என்று சொல்லி, அவர் ஒரு வீடு வாங்க வழி சொல்லிக் கொடுத்தேன்.


அவரும், என் பேச்சைக் கேட்டு வீடு வாங்கினார். அவரின் நல்ல காலம், ஒரு நல்ல வீடு வந்தது. வீடு வாங்கினார். 


அவரின் நல்ல நேரம், சிறிது காலத்தில் அவரின் சொந்த ஊரில் எதா நிலம் விற்று கொஞ்சம் பணம் வந்தது. அலுவலகத்தில் ஊக்கத் தொகை (போனஸ்) வந்தது. எல்லாவற்றையும் சேர்த்து கடனை விரைந்து அடைக்கத் தொடங்கினார். வட்டி செலவு குறைந்தது. 


எப்போது பார்த்தாலும் சொல்லுவார் "இந்த வீடு உன்னாலதான் வாங்கினேன்..நல்ல நேரத்தில் சரியான அறிவுரை கூறினாய்" என்று. 


நான் பணம் தந்து உதவி இருக்கலாம். நான் தராவிட்டால் அவர் வேறு யாரிடமாவது அந்தப் பணத்தை பெற்று இருக்கலாம். 


இன்று அந்த வீட்டின் விலை பல மடங்கு உயர்ந்து விட்டது. அவரின் பிள்ளைகள் அந்த வீட்டுக்கு அருகில் உள்ள ஒரு நல்ல பள்ளியில் படித்து இன்று மேல் படிப்புகாக அயல் நாடு சென்று இருக்கிறார்கள். கார் வாங்குவதில் பணத்தை விரயம் செய்து கொண்டிருந்தால் இவை எல்லாம் நடந்து இருக்குமா என்பது சந்தேகமே.


இன்சொல் என்பது பணத்தை விட மிக மிக உயர்ந்தது. 


ஒரு நிமிடம் கண் மூடி யோசித்துப் பாருங்கள். உங்களை வாழ்வில் உயரச் செய்தது பணமா அல்லது உங்கள் முன்னேற்றத்தில் அக்கறை உள்ளவர்கள் சொன்ன சொற்களா என்று. சந்தேகம் இல்லாமல் நல்லவர்களின் சொற்களாகத்தான் இருக்கும். இன்னும் சொல்லப் போனால், "அடா அவர் அன்று அப்படி சொன்னார். கேட்காமல் விட்டு விட்டேனே. அவர் சொன்ன படி கேட்டு இருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்" என்று கூட நீங்கள் நினைக்கலாம். 


இன் சொற்கள் மிகுந்த பலம் வாய்ந்தவை. 


இன்சொல் சொல்பவர்களின் தொடர்பு வேண்டும். 


நாமும் இன்சொல் சொல்பவர்களாக மாற வேண்டும். 


பெறுவோம். தருவோம். 


2 comments:

  1. இன்சொல் சொல்வது நன்றே, ஆனால் பொருள் தருவதை விட எப்போதும் உயர்வானது என்று சொல்லமுடியாது. வள்ளுவர் சொல்வதை படித்து, இன்சொல் சொல்வது முக்கியம் என்று புரிந்து கொள்ள வேண்டியதுதான்

    ReplyDelete