Pages

Tuesday, January 18, 2022

இராமாநுச நூற்றந்தாதி - வேதத்தின் பொருள்

 இராமாநுச நூற்றந்தாதி - வேதத்தின் பொருள் 


வேதத்தின் உண்மையான பொருள் என்ன? 


எந்த மொழிக்கும் ஒரு எல்லை உண்டு. எவ்வளவுதான் எடுத்துச் சொன்னாலும், பெரும்பாலான சமயங்களில் சொல்ல நினைத்தது வார்த்தைகளில் வராது. நாம் ஒன்று நினைத்து சொல்வோம். கேட்பவர் வேறு மாதிரி புரிந்து கொள்ளலாம்.  இந்தச் சிக்கல் எவ்வளவு பெரிய மகான்களுக்கும் உண்டு. 


வேதத்தில் என்ன சொல்லி இருக்கிறது என்று எப்படி அறிந்து கொள்வது? வேதத்தை எழுதியது யார்? அவர் வேறு ஏதாவது நூல் செய்திருகிறாரா? விரிவுரை, பொழிப்புரை என்று ஏதாவது உரை இருக்கிறதா என்றால் இல்லை. 


ஒவ்வொருவரும் தங்களுக்கு தெரிந்த விதத்தில் இது தான் வேதம் சொல்கிறது என்று சொல்கிறார்கள்? யார் சொல்வதை நம்புவது? எல்லோரும் பெரிய மகான்கள் தான், படித்தவர்கள்தான், ஞானிகள்கள் தான். இருந்தும் ஒருவருக்கு ஒருவர் முரண்பாடான கருத்துக்களை சொன்னால், நாம் யார் சொல்வதை பின்பற்றுவது?


உதாரணமாக,


ஜீவாத்மா, பரமாத்மா என்று இரண்டு இருக்கிறது. எல்லோரும் ஒத்துக் கொள்கிறார்கள்.


இந்த இரண்டுக்கும் என்ன தொடர்பு  என்பதில் பல்வேறு விதமான கருத்துகள் இருக்கின்றன. 


ஜீவாத்மாவை யார் படைத்தது? எதில் இருந்து அது படைக்கப்பட்டது, படைக்கப்பட்டதின் நோக்கம் என்ன, நோக்கம் நிறைவேறாமல் தடுப்பது எது? ஜீவாத்மா மூலம் தான் அந்த நோக்கம் நிறைவேற வேண்டுமா?  பரமாத்மா நின்னைதால், இந்த ஜீவாத்மாக்கள் இல்லாமலேயே அந்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள முடியாதா? பின் எதற்கு இந்த ஜீவாத்மா? எதற்கு இத்தனை ஜீவாத்மாக்கள்? இன்னும் வருமா? அல்லது ஜீவாத்மாவை படைப்பது நின்று விட்டதா? 


இப்படி எண்ணற்ற கேள்விகள் இருக்கின்றன. ஆளாளுக்கு ஒரு உரை சொல்கிறார்கள். 


"வேதம் சொல்வது இது தான் என்று சில பேதையர்கள் சொல்லித் திரிகிறார்கள். பிரமம் நல்லது அல்லது நிரந்தரமானது என்று அவர்கள் சொல்கிறார்கள். மற்றைய உயிர்கள் எல்லாம் அந்த பிரம்மம் தான் என்றுஅவர்கள் சொல்கிறார்கள். உயிர்கள் உடலை விட்டு பிரிந்த பின், இறைவனோடு கலந்து விடுகின்றன என்றும் அவர்கள் சொல்கிறார்கள். இதெல்லாம் தவறு என்று தன்னுடைய வாதத் திறமையால் நிரூபித்தார் இராமானுசர்"


என்கிறார் திருவரங்கத்து அமுதனார். 


பாடல் 




பேதையர் வேதப் பொருளிதென் னுன்னிப் பிரமம்நன்றென்


றோதிமற் றெல்லா உயிரும் அஃதென்று உயிர்கள்மெய்விட்


டாதிப் பரனொடொன் றாமென்று சொல்லுமவ் வல்லலெல்லாம்


வாதில்வென் றான், எம் இராமா னுசன்மெய்ம் மதிக்கடலே.



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/01/blog-post_18.html



(please click the above link to continue reading)


பேதையர்  = பேதைகள், முட்டாள்கள், அறிவு இல்லாதவர்கள் 


வேதப் பொருளிதென் னுன்னிப் = வேதப் பொருள் இது என்று உன்னி = வேதத்தின் பொருள் இதுதான் என்று நினைத்து 


பிரமம்நன்றென் றோதி = பிரமம் நல்லது, நிரந்தரமானது, உயர்ந்தது என்று பாடம் சொல்லி 


மற் றெல்லா உயிரும் = மற்ற உயிர்கள் எல்லாம் 


 அஃதென்று = அதுவே (பிரமமே) என்றும் 


உயிர்கள் மெய்விட் = உயிர்கள் உடம்பை (மெய்) விட்ட பின் 


டாதிப் = ஆதி 


பரனொடொன் றாமென்று = பரன் என்று சொல்லும் கடவுளிடம் ஒன்று ஆகும் என்று  


சொல்லுமவ் = சொல்லும் அந்த 


வல்லலெல்லாம் = வல்லமை எல்லாம் 


வாதில்வென் றான் = அவை தவறு என்று வாதத்தில் வென்றான் 


எம் இராமா னுசன்  = எம் தலைவனான இராமானுசன் 


மெய்ம் மதிக்கடலே. = உண்மையான கல்விக் கடலே 


சரி, அவை எல்லாம் தவறு என்றால், பின் எது சரி? 


இராமனுசர் என்னதான் சொல்கிறார்? 


அது ஒரு தனி விளக்கம். வைணவ சித்தாந்தம். அது பற்றி தனியே ஆராய்ந்து அறிய வேண்டும். 


இராமானுசர் என்ன சொல்கிறார் என்று தெரிந்து கொள்வதுதான் அவருக்கு செய்யும் மரியாதை. 


இராமனுசர் எனக்கு கடவுள் என்று சொல்லிவிட்டு, அவர் என்ன சொன்னார் என்று அறிந்து கொள்ளாமல் இருப்பது சரியா? 


நியூட்டனை நான் வணங்குகிறேன். ஆனால், அவர் சொன்ன அறிவியல் உண்மைகள் எனக்குத் என்ன என்று எனக்குத் தெரியாது என்று சொல்வது மதியீனம் அல்லவா?


இராமானுச நூற்றந்தாதி படிப்பதின் நோக்கம், இராமானுசர் கண்டு சொன்ன உண்மைகளை அறிவதுதான். சும்மா பாடல்களை மனப்பாடம் செய்து ஒப்பிப்பது அல்ல. 


அவர் சொல்லிச் சென்ற உண்மைகளை அறிந்து கொள்ள முயற்சிப்போம். 




No comments:

Post a Comment