திருவாசகம் - யாத்திரைப் பத்து - காலம் இனி இல்லை
எல்லாம் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளிப் போட்டுக் கொண்டே போகிறோம், ஏதோ பல்லாயிரம் ஆண்டுகள் இருக்கப் போவது போல.
இதைச் செய்ய வேண்டும், அதைச் செய்ய வேண்டும், என்று பலப் பல காரியங்கள். முக்கியமானவற்றை எல்லாம் தள்ளிப் போட்டுக் கொண்டே போகிறோம்.
இந்த சில்லறை வேலைகளை எல்லாம் செய்து முடித்து விட்டு பெரிய வேலை பார்க்க நினைக்கும் போது நாள் ஓடி இருக்கும். நாமே இருக்க மாட்டோம். இருந்தாலும், மனத்திலும், உடலிலும் வலு இருக்காது.
எனவே, மனமும், உடலும் உறுதியாக இருக்கும் போது முக்கியமான காரியங்களை செய்து விட வேண்டும். சில்லறைக் காரியங்களை செய்யாமல் விட்டாலும் பரவாயில்லை.
நாம் முக்கியமான காரியங்களை செய்ய விடாமல் நம்மை தடுப்பது எது?
கோபமும், ,காமமும்.
காமம் புரிகிறது. கோபம் எப்படி காரணம் ஆகும்? கோபம் என்றால் முகம் சிவக்க, உதடு துடிக்க, வார்த்தைகள் அனல் போல கொட்ட, சாமான்களை தூக்கி அடிக்கும் செயல் மட்டும் அல்ல.
சத்தமே போடாமல், யார்மேலும் எரிந்து விழாமலும் கோபம் கொள்ளலாம்.
நம் மேலேயே நமக்கு கோபம் வரும் சில சமயம்.
நம் இயலாமையை நினைத்து, நம் உறுதி அற்ற தன்மையை நினைத்து, நம்முடைய பலவீனங்களை நினைத்து கோபம் வரலாம்.
கோபத்தால் சிந்தனை தெளிவு மாறும். தவறான முடிவுகள் எடுக்க வேண்டி வரும். பின் அதைச் சரி செய்ய மேலும் கால விரயம் ஆகலாம்.
கோபம் பற்றி ஆழமாக சிந்திக்க வேண்டும்.
இதுகெல்லாம் நேரம் இல்லை. இதை எல்லாம் விட்டு விட்டு வாருங்கள். சிவலோகத்தின் கதவு சாத்தப்படும் முன், சீக்கிரமாக போய் சேர்வோம் என்று அந்த பயணத்துக்கு நம்மை அழைக்கிறார் மணிவாசகப் பெருந்தகை.
பாடல்
விடுமின் வெகுளி, வேட்கை நோய்; மிகவே, காலம் இனி இல்லை;
உடையான் அடிக்கீழ், பெரும் சாத்தோடு உடன் போவதற்கே ஒருப்படுமின்;
அடைவோம், நாம் போய்ச் சிவபுரத்துள், அணி ஆர் கதவு அது அடையாமே;
புடைபட்டு உருகிப் போற்றுவோம், புயங்கன் ஆள்வான் புகழ்களையே.
பொருள்
https://interestingtamilpoems.blogspot.com/2022/02/blog-post_27.html
(click the above link to continue reading)
விடுமின் = விட்டு விடுங்கள்
வெகுளி = கோபம்
வேட்கை நோய் = காம நோய், ஆசை என்ற நோய்
மிகவே = ரொம்ப
காலம் இனி இல்லை; = காலம் இனி இல்லை. இருந்த காலம் எல்லாம் போய் விட்டது.
உடையான் = நம்மை உடையவன் (சிவன்)
அடிக்கீழ் = திருவடியின் கீழே
பெரும் சாத்தோடு = பெரிய கூட்டத்தோடு
உடன் போவதற்கே = ஒன்றாக போவதற்கு
ஒருப்படுமின்; = ஒன்றாக வாருங்கள்
அடைவோம் = கட்டாயம் அடைவோம்
நாம் போய்ச் = நாம் போய்
சிவபுரத்துள் = சிவபுரத்துள்
அணி = அணிகலன்கள் கொண்டு வேலைப்பாடு செய்யப்பட்ட
ஆர் கதவு = பெரிய கதவு
அது அடையாமே; = அது அடை படுவதற்கு முன்
புடைபட்டு = நீக்கமற எங்கும் நிறைந்த
உருகிப் போற்றுவோம் = உருகி போற்றுவோம்
புயங்கன் = பாம்பை அணிந்த கரங்களை உடைய அவன்
ஆள்வான் = நம்மை ஆழிபவன்
புகழ்களையே. = புகழைப் (போற்றுவோம்)
போகும் இடத்துக்கு வழி தேடுவதுதானே முக்கியமான வேலை.
ஏதோ ஒரு காரணமாக வெளியூர் போய் இருக்கிறோம். வேலை முடிந்து எப்படி பழையபடி ஊர் போய் சேர்வது என்று சிந்திக்க வேண்டாமா? வந்த இடத்தில் சுத்திக் கொண்டு இருந்தால் எப்படி ஊர் போய் சேர்வது?
இந்த உலகில் நாம் ஏதோ ஒரு காரணத்துக்காக வந்து இருக்கிறோம்.
எப்படியும் ஒரு நாள் போகத்தான் வேண்டும். நிரந்தரமாக இங்கே இருக்க முடியாது.
எங்கிருந்து வந்தோமோ அங்கு செல்ல வழியை ஆராய வேண்டாமா?
யாத்திரைப் பத்து.
நம் பயணம் தொடர வேண்டும். எங்கு எப்படி என்று மணிவாசகர் சொல்கிறார்.
கோபத்தையும், காமத்தையும் குறிப்பிட்டுச் சொன்னது ஆச்சரியமாக இருக்கிறது.
ReplyDeleteகிருத்துவ மாதத்தில், pride, greed, wrath, envy, lust, gluttony and sloth ஆகியவற்றை 7 Deadly Sins என்று சொல்கிறார்கள்.
wrath = கோபம், lust = காமம் எனலாம். மற்ற ஐந்து?