Pages

Monday, February 28, 2022

திருக்குறள் - அடுத்து என்ன?

 திருக்குறள் - அடுத்து என்ன? 


திருக்குறளில் ஒவ்வொரு அதிகாரமும் ஒரு முறைப்படி, வரிசைப்படி ஒரு ஒழுங்கு முறையில் வைத்து எழுதப் பட்டு இருக்கிறது. திருக்குறளைப் படிக்க வேண்டும் என்றால் அந்த முறையில் படிக்க வேண்டும். 


அதிகாரம் மட்டும் அல்ல இயலும் அப்படித்தான்.


அறம், பொருள், இன்பம் என்ற வரிசையில் எழுதி இருக்கிறார். இதில் என்ன முறை இருக்கிறது? பொருள், அறம், இன்பம் என்று எழுதி இருக்கக் கூடாதா? அல்லது இன்பம், பொருள், அறம் என்று எழுதி இருக்கக் கூடாதா? இன்பம் தானே எல்லோரும் தேடுவது? அதை முதலில் சொல்லி, அந்த இன்பம் அடைய பொருள் வேண்டும், அதை அற வழியில் ஈட்ட வேண்டும் என்று சொல்லி இருக்கலாம் தானே?


அது ஒரு புறம் இருக்கட்டும். 


நமக்கு சில வேலைகள் செய்ய வேண்டி இருக்கிறது. எல்லா வேலையையும் ஒரே நேரத்தில் செய்ய முடியாது. எதை முதலில் செய்வோம்? எது நமக்கு அதிக பலன் தருமோ அதை முதலில் செய்வோம் அல்லவா? 


இல்லை, எது எளிதாக இருக்கிறதோ அதை முதலில் செய்வோம் என்று சிலர் வாதிக்கலாம். 


சரி, அப்படியே வைத்துக் கொள்வோம். 


நம்மிடம் கொஞ்சம் பணம் இருக்கிறது. அதை எதில் செலவழிப்போம்? எது நமக்கு அதிக ஆதாயம் தருமோ, அதில்தானே செலவழிப்போம்?


குறிப்பிட்ட தொகைக்கு இரண்டு படுக்கை அறை கொண்ட வீடும் இருக்கிறது, மூன்று படுக்கை அறை கொண்ட வீடும் இருக்கிறது என்றால் எதை வாங்குவோம்? 


பணம் என்பது உழைப்பின் பலன். எனவே, நம் உழைப்பும் எதில் அதிக ஆதாயம் தருகிறதோ, அதை விரும்புவோம். 


https://interestingtamilpoems.blogspot.com/2022/02/blog-post_28.html


(please click the above link to continue reading)


இங்கே, (குறளில் ) இன்பம் என்பது இந்த பிறவிக்கு மட்டும் இன்பம் தருவது. அதுவும் கொஞ்ச காலத்துக்கு மட்டும் தான். 


பொருள் இம்மைக்கும், மறுமைக்கும் இன்பம் தருவது, சரியான வழியில் அதை செலவழித்தால். 


அறம், இம்மை, மறுமை மட்டும் அல்ல வீடு பேற்றுக்கும் வழி செய்யும். 


இப்போது சொல்லுங்கள் எதை முதலில் செய்ய வேண்டும். 


இன்பம், இன்பம் என்று அலைந்து கொண்டிருந்தால் மறுமை, வீடு பேறுக்கு வழி இல்லாமல் போகும் 


எனவே, முதலில் அறத்துப் பால் பற்றி கூறினார். 


சரி, அறத்துப் பால் முக்கியம். அதை எப்படிச் சொல்லுவது? 


முதலில் பிள்ளை பெறுவது, அப்புறம் மனைவி, அப்புறம் இல்லறம் என்று சொல்லலாமா? அல்லது முதலில் துறவறம், பின் இல்லறம் என்று சொல்லலாமா? எப்படிப் படித்தால் என்ன என்று கேட்கக் கூடாது. எதுக்கும் ஒரு முறை இருக்கிறது. 


அறம் சொல்ல வந்த வள்ளுவர், முதலில் இல்லறத்தை எடுத்துக் கொள்கிறார். 


அறத்துப் பால் - இல்லறவியல். 


அதில், முதலில் பாயிரவியல் - இறை வணக்கம், வான் சிறப்பு, நீத்தார் பெருமை, அறன் வலியுறுத்தல் என்று சொல்ல்கிறார். 


பின், இல்லறதுக்குள் நுழைகிறார். 


இல்வாழ்கை (இல்வாழ்வின் நோக்கம், கடமைகள்), வாழ்க்கைத் துணை நலம் (மனைவி), புதல்வர்களைப் பெறுதல், அன்புடைமை,  விருந்தோம்பல், இனியவை கூறல் என்று சொன்னார். 


அடுத்து என்ன?


என்னவாக இருக்கும்?


இல்வாழ்வில் பெற்றோர், உடன் பிறப்பு, சுற்றம், நட்பு, அண்டை, அயல், விருந்து என்று எல்லாம் இருக்கும். ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து வாழ்கிறோம். 


ஒருவர் செய்த உதவியை மறக்கக் கூடாது. இல் வாழ்வின் அடி நாதம் இது. 


எனவே, அடுத்த அதிகாரமாக "செய்நன்றி அறிதல்" என்ற அதிகாரத்தை வைக்கிறார். 


ஒரு அதிகாரத்தை அங்கே இங்கே மாத்தி வைக்க முடியாது. அப்படி ஒரு கட்டமைப்பு. 


செய்த உதவியை மறக்கக் கூடாது. அவ்வளவுதானே. புரிஞ்சு போச்சு. இதுக்கு எதுக்கு ஒரு அதிகாரம், பத்து குறள், அதுக்கு உரை, உரைக் குறிப்பு எல்லாம் என்று நாம் நினைப்போம். 


வள்ளுவர் செய்திருக்கும் வேலை பிரமிக்க வைக்கக் கூடியது. 


செய்நன்றி அறிதல் பற்றி இன்னும் கொஞ்சம் சிந்தித்தப் பின், அதிகாரத்துக்குள் நுழைவோம். 



1 comment:

  1. அடேஙகப்பா. மனப்பாட செய்யுள் 2 mark, கோனார் உரையில் ஒரு நாலு mark க்கு படித்த குறளுக்கு பின்னால் இவ்...வளவு விவரங்களா? ப்ரமிக்க வைக்கிறது

    ReplyDelete