கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - அறமும் வாழ்வும்
"நீ என் கண் முன் நிற்காதே. ஓடிப் போய் விடு" என்று அறிவுரைகள் சொன்ன வீடணனை இராவணன் வெறுத்து, கோபம் கொண்டு விரட்டி விடுகிறான்.
இராவணனுக்கு சீதை மேல் காமம் ஒரு புறம்.
அவளை அடைய முடியவில்லையே என்ற கோபமும் வருத்தமும் மறு புறம்.
இதற்கிடையில், உடன் பிறந்த தம்பி தனக்கு உதவி செய்யாமல் அறம் பற்றி பேசிக் கொண்டு இருக்கிறானே என்ற வெறுப்பு.
வார்த்தைகள் வெடிக்கிறது.
ஆனால், வீடணன் கோபம் கொள்ளவில்லை. வெறுக்கவில்லை.
மிக மிக நிதானமாக பேசுகிறான்.
இராவணன் உணர்ச்சியின் விளிம்பில் நிற்கிறான் என்றால், வீடணன் அறிவின் உச்சியில் நிற்கிறான்.
இதை ஏன் இராவணன், வீடணன் என்று பார்க்க வேண்டும்.
நம் வீடுகளில் எப்போதும் நிகழ்வதுதானே.
ஒருவர் கோபம் கொண்டு பேசினால், மற்றவரும் அதற்குச் சரியாக உணர்ச்சியில் வார்த்தைகளை விடக் கூடாது. உணர்ச்சி வசப்பட்டவர் பேசட்டும். எது சரியோ அதை மென்மையாக மற்றவர் எடுத்துச் சொல்லலாம்.
இதற்கு முன்னும் அதற்கு ஒரு உதாரணம் உண்டு.
கானகம் போ என்ற சொல்லக் கேட்ட இலக்குவன் உணர்ச்சியில், கோபத்தில் ஏதேதோ பேசுகிறான். இராமன் நிதானமாக இருக்கிறான். "மறை கூறிய வாயால்" இப்படி பேசலாமா என்று அவனை திருத்துகிறான்.
அந்த நிதானம் வேண்டும்.
பாடல்
'வாழியாய் ! கேட்டியால்: வாழ்வு கைம்மிக
ஊழி காண்குறு நினது உயிரை ஓர்கிலாய்,
கீழ்மையோர் சொற்கொடு கெடுதல் நேர்தியோ ?
வாழ்மைதான், அறம் பிழைத்தவர்க்கு, வாய்க்குமோ ?
பொருள்
https://interestingtamilpoems.blogspot.com/2022/03/blog-post_10.html
(Please click the above link to continue reading)
'வாழியாய் ! = நீ (இராவணனாகிய நீ) வாழ்க
கேட்டியால்: = நான் (வீடணன்) சொல்வதைக் கேள்
வாழ்வு கைம்மிக = வாழ்வில் உயர்வு பெற
ஊழி = ஊழிக் காலத்தை
காண்குறு = காணும் வரை உள்ள
நினது உயிரை ஓர்கிலாய், = உன் நீண்ட வாழ்நாளைப் பற்றி நீ நினைக்கவில்லை
கீழ்மையோர் = கீழானோர்
சொற்கொடு = சொன்ன சொற்களைக் கேட்டு
கெடுதல் நேர்தியோ ? = உனக்கு நீயே கெடுதலை தேடிக் கொள்வாயா ?
வாழ்மைதான் = வாழ்க்கைதான்
அறம் பிழைத்தவர்க்கு, வாய்க்குமோ ? = அறம் பிழைத்தவர்களுக்கு கிடைக்குமோ
அறம் தவறி நடந்தால் வாழ்க்கை தொலைந்து போய் விடும்.
எவ்வளவு படித்து என்ன, எவ்வளவு தவம் செய்து என்ன, ,எத்தனை வரம் வாங்கி என்ன, அறம் இல்லை என்றால் அத்தனையும் பாழ்.
அவ்வளவு பெரிய இராவனனுக்கே அந்தக் கதி என்றால் மற்றவர் பாடு சொல்லவும் வேண்டுமோ?
நிறைய செல்வம் சேர்த்து விட்டால் போதும், அது நம்மை காக்கும் என்று பலர் நினைக்கிறார்கள்.
இராவணனுக்கு முன் எவ்வளவோ பெரிய பெரிய அரக்கர்கள் எல்லாம் இருந்தார்கள். அவனை விட பல மடங்கு வரம் பெற்று, பெரிய பலசாலிகளாக இருந்தார்கள். அறம் தவறி நடந்ததால், இருந்த இடம் தெரியாமல் போனார்கள்.
அரக்கர்கள்தான், தாங்கள் கட்டி வைத்த கோட்டை, ஆள், அம்பு, சேனை, வரம், எல்லாம் தங்களை காக்கும் என்று நினைப்பார்கள் என்கிறார் அபிராமி பட்டர்.
"அரணம் பொருள் என்று அருள் இல்லாத அசுரர்கள் தங்கள் முரண் அன்று அழிய"
என்பார். அரணம் என்றால் அரண், கோட்டை, காவல். அதெல்லாம் ஒரு பொருட்டு அல்ல. அது நம்மை காக்காது.
அரணம் பொருள் என்று அருள் ஒன்று இலாத அசுரர் தங்கள்
முரண் அன்று அழிய முனிந்த பெம்மானும், முகுந்தனுமே,
‘சரணம், சரணம்’ என நின்ற நாயகி தன் அடியார்,
மரணம் பிறவி இரண்டும் எய்தார், இந்த வையகத்தே.
அற வழியில் நட என்று நம் இலக்கியங்கள் முடிந்த இடத்தில் எல்லாம் சொல்லிக் கொண்டே இருக்கின்றன.
அறத்தை போதிப்பதும், அதை பாதுகாப்பதும், அதன் வழி மக்களை கொண்டு செல்வதும் தான் இலக்கியங்களின் நோக்கமாக இருந்திருக்கிறது.
மேலும் சொல்வான்
No comments:
Post a Comment