திருக்குறள் - செய்நன்றி அறிதல் - பயன்தூக்கார் செய்த உதவி
முதலில் செய்யாமல் செய்த உதவி பற்றிக் கூறினார்.
இரண்டாவது, காலத்தினால் செய்த உதவி பற்றிக் கூறினார்.
இப்போது, பதில் உதவி எதிர்பார்க்காமல் செய்யும் உதவி பற்றிக் கூறுகிறார்.
ஒருவருக்கு ஒரு உதவி செய்தால் அதனால் நமக்கு என்ன நன்மை விளையும் என்று எதிர் பார்க்காமல் செய்யும் உதவி.
என் மேலதிகாரிக்கு என் வீட்டில் ஒரு விருந்து வைத்தேன் என்பது ஒரு உதவியா? அவரால் எனக்கு ஒரு காரியம் ஆக வேண்டி இருக்கிறது. பதவி உயர்வோ, சம்பள உயர்வோ ஏதோ ஒன்றை எதிர்பார்த்து செய்த உதவி அது.
ஒரு உயிர் வாடுகிறது. தவிக்கிறது. அதன் மேல் உள்ள கருணையால், அன்பால் உதவி செய்ய வேண்டும். இதைச் செய்தால் எனக்கு என்ன பலன் கிடைக்கும் என்று எதிர்பார்த்து செய்வது உயர்ந்த உதவி அல்ல.
அப்படி பயன் எதிர் பாராமல் செய்த உதவி இருக்கிறதே அது கடலை விடப் பெரியது என்கிறார்.
பாடல்
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலிற் பெரிது
பொருள்
https://interestingtamilpoems.blogspot.com/2022/03/blog-post_9.html
(Please click the above link to continue reading)
பயன்தூக்கார் = மறு பலனை எதிர்பார்க்காமல்
செய்த உதவி = மற்றவருக்கு செய்த உதவி, நன்மை
நயன்தூக்கின் = அந்த கருணையை, அன்பை நோக்கின்
நன்மை கடலிற் பெரிது = அதன் நன்மை கடலை விடப் பெரியது
சொல்லுக்கு பொருள் புரிகிறது. பொதுவான அர்த்தமும் புரிகிறது.
இதை யாருக்குச் சொல்கிறார்? உதவி செய்தவருக்கா? உதவி பெற்றுக் கொண்டவருக்கா?
இருவருக்கும் இதில் செய்தி இருக்கிறது.
கல்யாண வீட்டில் மொய் எழுதுகிறோம், பரிசு தருகிறோம். திரும்பி வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இதெல்லாம் ஒரு உதவி கிடையாது என்பதை புரிந்து கொள் என்கிறார் உதவி செய்பவனை பார்த்து. பசி என்று வந்து நிற்கும் ஒரு ஏழைக்கு பத்து ரூபாய் தருகிறாயா, அது கடலை விடப் பெரியது. சின்ன உதவிதானே என்று நினைக்காதே. பயன் எதிர்பாராமல் செய்த எந்த உதவியும் மிகப் பெரியது. எனவே, அவற்றைச் செய் என்கிறார். கொடுத்தால் பெரிதாக கொடுக்க வேண்டும். இல்லை என்றால் சும்மா இருந்து விடலாம் என்று இருந்து விடாதே. சின்ன உதவி கூட மிகப் பெரியதுதான், பலன் எதிர் பாராமல் செய்தால்.
நிறைய செய்திதாள்களில், facebook போன்ற வற்றில் விளம்பரம் வரும். என் பிள்ளைக்கு உடம்புக்கு முடியவில்லை. மருத்துவ செலவு பெரிதாக ஆகும். பல இலட்சம் ஆகும். என்னிடம் வசதி இல்லை. உதவி செய்யுங்கள் என்று. ஒரு நூறு ரூபாய் அனுப்பினால் நாம் குறைந்து போய் விட மாட்டோம். இந்த நூறு ரூபாயில் என்ன வந்து விடப் போகிறது என்று நினைக்கக் கூடாது. பல நூறு ரூபாய்கள் சேர்ந்தால் அது பெரிய தொகையாகிவிடும். சின்ன உதவிதான். யாரோ ஒருவரின் கண்ணீரை துடைக்க பயன் படுகிறது அல்லவா? அது கடலை விடப் பெரியது.
பயன் பெற்றவன், "என்ன பெருசா செஞ்சிட்டார்...இதெல்லாம் ஒரு உதவியா" என்று பெற்ற உதவியை அலட்சியம் செய்யக் கூடாது. செய் நன்றி மறக்கக் கூடாது. அதிகாரம் அது தான். நம்மால் அவருக்கு பதிலுக்கு ஒன்றும் செய்ய முடியாது. அவருக்கு அது தேவையும் இல்லை. அப்படி இருந்தும் செய்தார் அல்லவா, அது மிகப் பெரிய விடயம் என்று மனதில் நினைக்க வேண்டும்.
நாம் பெற்றுக் கொண்ட ஒவ்வொரு உதவியையும் மிகப் பெரிதாக நினைக்க வேண்டும். ஏன்? சின்னது என்று நினைத்தால் மறந்து போவோம்.
"அந்தக் காலத்துல ஏதோ ஒரு வருஷம் எனக்கு பள்ளிகூடத்துக்குபீஸ் அடிச்சார், கொஞ்சம் நோட்டு புத்தகம் வாங்கித் தந்தார் ...அதெல்லாம் ஒரு பெரிய விடயமா ?" என்று கேட்கக் கூடாது.
அது எல்லாம் விட, பெற்றோர் பிள்ளைகளுக்கு செய்யும் உதவி. பெற்றோர் பதில் உதவி எதிர் பார்த்து செய்வதில்லை. "நீ என் படிப்புக்கும் சாப்பாடுக்கும் எவ்வளவு செலவழித்து இருப்பாய் சொல். ஒரே செக்கில் செட்டில் பண்ணி விடுகிறேன்" என்று கூறினால் அந்த செலவின் மதிப்பு கடல் போல் பெரியது. அவ்வளவு பெரிய தொகைக்கு எங்கே போவது?
எந்தப் பிள்ளையாலும் அந்தக் கடனை அடைக்க முடியாது.
பயன் தூக்கா உதவி செய்ய வேண்டும். அப்படி பெற்ற உதவிகளை கடலைப் போல் பெரிதாக நினைக்க வேண்டும்.
இந்த மூன்று குறள்கள் மூலம் செய்யாமல் உதவி, காலத்தினால் செய்த உதவி, பலன் எதிர்பாராமல் செய்த உதவி என்று உதவியின் பெருமை கூறப்பட்டது என்கிறார் பரிமேலழகர்.
சரி, உதவியின் பெருமை கூறியாகிவிட்டது.
அடுத்து என்னவாக இருக்கும்?
No comments:
Post a Comment