Pages

Wednesday, April 20, 2022

நாலாயிர திவ்ய பிரபந்தம் - அம்மானை ஏத்தாது

 நாலாயிர திவ்ய பிரபந்தம் - அம்மானை ஏத்தாது 


உங்களுக்கு இறை நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ, அதை எல்லாம் ஒரு பக்கம் ஒதுக்கி வைத்து விட்டு, இலக்கிய அனுபவத்திற்காக பிரபந்தம் படியுங்கள். அவ்வளவு இனிமை. அவ்வளவு சுகம். 


whatsapp, youtube போன்றவற்றில் வரும் எதையெதையோ படிக்க நேரம் இருக்கும் போது, இது போன்ற உயர்ந்த நூல்கள் படிக்க கொஞ்சம் நேரம் இருக்காதா என்ன?


பக்தி எப்படி வரும்?  முதலில் கோவிலுக்கு வரவழைக்க வேண்டும். அப்புறம் தரிசனம், அப்புறம் பக்தி எல்லாம் வரும். 


பொங்கல், சுண்டல் தருகிறேன் என்றால் ஆர்வமாக வருவார்கள். நான் அப்படி போய் இருக்கிறேன். ஒரு கை அளவுதான் பொங்கல் தருவார்கள். என்ன ஒரு சுவை. என்ன ஒரு சந்தோஷம். ஏதோ பெரிய சாம்ராஜ்யத்தை வென்றுவிட்ட மாதிரி ஒரு பெருமிதம். 


நாளும் அந்த நேரத்துக்குப் போய் விடுவேன். நேரம் கழித்துப் போனால் ஒரு வேளை கிடைக்காதோ என்றோ என்று பயந்து கொஞ்சம் முன்னாடியே போய் விடுவது. போய் என்ன செய்வது? அங்குள்ள பூஜை, மற்றும் சடங்குகளை பார்ப்பது. என்னதான் செய்கிறார்கள் என்று ஒரு ஆர்வம். அப்புறம் பொங்கல், சுண்டல் எல்லாம் கிடைக்கும். 


சாபிட்டுவிட்டு வெளியே வரும் போது, அங்கே ஒருவர் இராமாயணம் உபன்யாசம் செய்து கொண்டு இருப்பார். என்னதான் சொல்கிறார் என்று கேட்போமே என்று சிறிது நேரம் இருந்து கேட்பேன். அட, இது நல்லா இருக்கே என்று முழுவதும் கேட்பேன். சரி, நாளைக்கும் வர வேண்டும் என்ற எண்ணம் வரும். இப்படி முழு இராமாயணத்தையும் கேட்டு இருக்கிறேன். பொங்கல் மேல் இருந்த ஆர்வம் போய், இராமாயணத்தில் ஆர்வம் வந்தது. 


அப்படியே கோவிலை சுற்றி வரும் போது, அங்கே சுவர்களில் பாசுரங்கள் எழுதி வைத்து இருப்பார்கள். வாசிக்கும் போது அதில் ஒரு வசீகரம் இருக்கும். எப்படி மொழி வளைந்து கொடுக்கிறது என்று. பல சொற்களுக்கு அர்த்தம் தெரியாது. இன்று உள்ளது போல் google எல்லாம் கிடையாது. சொல் மனதுக்குள் சுற்றிக் கொண்டே இருக்கும். 


ஏதாவது நூலகத்தில் சென்று, அகாரதியில் பார்த்தால் அர்த்தம் தெரியும். பல சமயம் ஒரு சொல்லுக்கு பல அர்த்தம் இருக்கும். எது பொருந்தும் என்று சிந்திப்பேன். ஏன் இப்படி சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் ஒர்ர் சொல்லுக்கு அர்த்தம் போட்டு இருக்கிறார்கள் என்ற சிந்தனை வரும். இன்னும் தேடல் பெரிதாகும். சில சமயம் ஒரு சொல்லின் பொருளுக்கு மேற் கோள் காட்டி இன்னொரு பாடல் வரியை தந்து இருப்பார்கள். அது என்ன பாடல் என்று தேடிப் போவேன். 


இப்படி பொங்கலில் ஆரம்பித்து, உபன்யாசம், சுவற்றில் உள்ள பாசுரம், அகராதி என்று தேடல் விரிந்து கொண்டே போனது. 


பொங்கல் மாதிரி, இலக்கியங்களும். முதலில் சொல் சுவை, அணி, யாப்பு எல்லாம் இனிமையாக இருக்கும். அப்படியே நம் கை பிடித்து கொண்டு செல்லும். தேடிக் கொண்டு போக வேண்டியது நம் பொறுப்பு. 


பொங்கலை மட்டும் வாங்கி உண்டு விட்டு, அங்குள்ள தூணில் துடைத்து விட்டு போய் விடலாம். நட்டம் யாருக்கு? 


சரி அது புறம் இருக்கட்டும். 


இங்கே நம்மாழ்வார் பாசுரம் ஒன்று. முதலில் அர்த்தம் பார்ப்போம்.  பின் அதன் பின் உள்ள இலக்கிய சுவையைப் பார்ப்போம். எப்படி எல்லாம் அனுபவித்து இரசித்து இருக்கிறார்கள் என்று தெரியும். 


பாடல் என்னவோ எளிமையானது தான். 


"பெருமானே, உன்னை வணங்காமல் இது வரை என் வாழ்நாள் எல்லாம் வீணடித்து விட்டேன். எல்லாம் என் தீவினை. வேறு என்ன சொல்ல" என்று வருந்துகிறார். 


பாடல் 


தெரிந்துணர்வு ஒன்று இன்மையால் தீவினையேன் வாளா

இருந்தொழிந்தேன் கீழ் நாள்கள் எல்லாம் கரந்துருவின்

அம் மானை அந்நான்று பின் தொடர்ந்த ஆழி அங்கை

அம்மானை ஏத்தாது அயர்த்து    (2665)


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/04/blog-post_20.html


(Please click the above link to continue reading)



தெரிந்துணர்வு  = தெரிந்து + உணர்வு = எது நல்லது, எது கெட்டது என்று அறியும் உணர்வு 


ஒன்று இன்மையால் = அந்த உணர்வு இல்லாததால் 


தீவினையேன் = தீய வினைகள் பல செய்த நான் 


வாளா இருந்தொழிந்தேன் = ஒன்றும் செய்யாமல் வெறுமனே காலத்தை கழித்து விட்டேன் 


 கீழ் நாள்கள் எல்லாம்  = இது வரை இருந்த நாட்கள் எல்லாம் 


கரந்துருவின் = உருவத்தை மறைத்து 


அம் மானை =அந்த பொன் மானை 


அந்நான்று = அந்த நாளில் 


 பின் தொடர்ந்த = பின் தொடர்ந்து சென்ற 


 ஆழி அங்கை = மோதிரம் அணிந்த கைகளை உடைய 


அம்மானை = அம்மானை 


ஏத்தாது = போற்றாது 


அயர்த்து = சோம்பிக் கிடந்து    (2665)


அவ்வளவுதானே?  


இதற்குப் பின்னால் பல வைணவ உரை ஆசிரியர்கள் எழுதிய உரையைப் பார்த்தால், கண்ணில் கண்ணீர் வரும். அவ்வளவு அழகு, அவ்வளவு அன்யோன்யம், அவ்வளவு கரிசனம். 


என்ன சொல்ல. இலக்கியத்தை அனுபவிப்பதும் ஒரு கலை. 


இன்று blog நீண்டு விட்டதால், ,அந்த இலக்கிய அனுபவத்தை நாளை சிந்திப்போம்.




2 comments:

  1. நேரே பாசுரத்திற்கு போய் இருந்தால், மேலும் அதில் உள்ள தமிழின் இனிய அனுபவத்தை அறிய இந்த ஆர்வம் வந்திருக்குமா என்பது சந்தேகம் தான். பொங்கலை காட்டி,,ராமாயணம் சொல்லும் இடத்திற்கு சென்று,அதை சற்று கேட்கும்படி செய்து பாசுரத்தில் என்னதான் இருக்கிறது என்பதை அறிய நன்றாக கொக்கி போட்டுவிட்டீர்கள்..ரொம்ப நன்றி.

    ReplyDelete
  2. அருமை உண்மை

    ReplyDelete